உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை /  ஆற்று மணல் வாங்கும் போது உப்பு தன்மையை பரிசோதிப்பது அவசியம்!

 ஆற்று மணல் வாங்கும் போது உப்பு தன்மையை பரிசோதிப்பது அவசியம்!

வீ ட்டுக்கான கட்டுமானபணிகளை மேற்கொள்ளும் போது அதற்கான பொருட்கள் வாங்குவதில் மிக கவனமாக இருக்க வேண்டும். கட்டுமான பொருட்கள் வாங்கும் பொறுப்பை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கும் போக்கு தற்போது பரவலாக காணப்படுகிறது. இப்படி, பணி பொறுப்பை ஏற்ற பொறியாளர் அல்லது ஒப்பந்ததாரர் எப்படி செயல்படுகிறார் என்பதை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும். தற்போதைய சூழலில், கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணல் கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. பெரும்பாலான கட்டுமான திட்டங்களில், அனைத்து வேலைகளுக்கும் எம் சாண்ட் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கட்டடத்தில் பூச்சு வேலை உட்பட குறிப்பிட்ட சில இடங்களில் ஆற்று மணலை பயன்படுத்தினால் மட்டுமே திருப்தி ஏற்படும் என்று மக்கள் நினைக்கின்றனர். இதற்காக, ஆற்று மணல் வேண்டும் என்று பொறியாளரிடம் தெரிவித்தால் மட்டும் போதாது. அதை அவர் எப்படி வாங்குகிறார், அது தரமானதா என்பது போன்ற விஷயங்களை வீட்டின் உரிமையாளர்கள் உரிய கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி ஆற்று மணல் குவாரிகள் செயல்படவில்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். இதனால், கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல், தனியார் நிலங்களிலும், ஆந்திராவில் இருந்தும் பெறப்படுகிறது. இவ்வாறு, வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் ஆற்று மணல் என்பதால், அதன் தரம் தொடர்பான விஷயங்களை துல்லியமாக கவனிக்க வேண்டும். பொதுவாக ஆற்று மணலில், 3 முதல், எட்டு சதவீதம் அளவுக்கு மட்டுமே உப்பு தன்மை இருக்கலாம். ஆனால், வெளி மாநில ஆற்று மணல் என்ற பெயரில் கடற்கரை மணலை சுத்தப்படுத்தி விற்பனை செய்ய சில இறங்கி உள்ளனர். இதில் வழக்கத்தைவிட, உப்பு தன்மை, 10 முதல், 25 சதவீதம் வரை இருக்கும் என்பதால் கட்டடத்தின் உறுதியை பாதிக்க வாய்ப்புள்ளது. பூச்சு வேலைக்கான ஆற்று மணலில், உப்பு தன்மை, 8 சதவீதம் வரை அனுமதிக்கப்படுகிறது. ஆனால், துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றுக்கான கான்கிரீட் கலவை தயாரிப்பதற்கான மணலில், உப்பு தன்மை அதிகபட்சமாக, 5 சதவீதத்தை தாண்ட கூடாது. உங்கள் வீட்டு கட்டுமான பணிக்காக வாங்கப்படும் மணலில் ஒரு பகுதியை மாதிரியாக சேகரித்து, உரிய ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். அங்கு மணலில் காணப்படும் உப்பு தன்மையின் அளவு என்ன என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விடுவார்கள். இதன் அடிப்படையில் உப்பு தன்மை தெரியாமல், ஆற்று மணலை பயன்படுத்தாதீர் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள். *** பூச்சு வேலைக்கான ஆற்று மணலில், உப்பு தன்மை, 8 சதவீதம் வரை அனுமதிக்கப்படுகிறது, ஆனால், துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றுக்கான கான்கிரீட் கலவை தயாரிப்பதற்கான மணலில், உப்பு தன்மை அதிகபட்சமாக, 5 சதவீதத்தை தாண்ட கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை