ஒப்பந்தம் போடாமல் கட்டுமான பணிகளை ஒப்படைக்காதீர்!
சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்கான சரியான நபர்களை தேர்வு செய்வது தான் மிக முக்கிய பணி பொதுவாக, இப்படி ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தால் அவரை பல் வேறு தரப்பினரும் அணுகுவர். இதில், அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்கனவே வீடு கட்டி கொடுக்கும் தொழிலில் இருப்பவர்கள் தங்கள் உத்தேச பட்ஜெட் உள்ளிட்ட விபரங்களை கொடுத்து வாய்ப்பு கேட்பர். அதே நேரத்தில் தெரிந்தவர்கள், நண்பர்கள். உறவினர் என்ற ரீதியிலும் பலர் உங்களை அணுகி வாய்ப்பு கேட்பர். இது போன்ற சூழலில் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள நிலத்தில் வீடு கட்டுவதற்கான திட்டத்தை யார் வாயிலாக, எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, உங்களிடம் கட்டுமான பணி வாய்ப்பு கேட்டு, ஏராளமானோர் அணுகும் நிலையில், அவர்களில் யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் ஏற்படும். இத்தகைய சூழலில், தெரிந்தவர்கள், நண்பர்கள், சொந்த ஊர்காரர் போன்ற விஷயங்கள் அடிப்படையில் பொறியாளரை தேர்வு செய்வது நல்லதல்ல. ஒரு நபரிடம் உங்களது புதிய வீட்டை கட்டும் பொறுப்பை ஒப்படைக்கும் முன் பல்வேறு விஷயங்களை தெளிவாக விசாரித்து கொள்ள வேண்டும். இதில் தெரிந்தவர்கள், நன்கு பழக்கமானவர்களிடம் வீடு கட்டும் பணியை ஒப்படைக்கும் போது, பலரும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை மேற்கொள்வதில்லை. நமக்கு நன்கு தெரிந்தவர், நண்பர், உறவினர், அவரிடம் ஒப்பந்தம் போட்டு கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என்று பலரும் நினைக்கின்றனர். இவ்வாறு நினைப்பது அடிப்படையில் மிகவும் தவறான நடை முறை என்று கூறப்படுகிறது. நீங்கள் வாங்கி வைத்துள்ள நிலத்தில் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைக்க ஒரு நபரை அல்லது நிறுவனத்தை தேர்வு செய்கையில் அவரது தொழில் திறன், தகுதியை மட்டும் பார்க்க வேண்டும். குறிப்பாக எழுத்துப்பூர்வ கட்டுமான ஒப்பந்தம் இன்றி பணிகளை ஒப்படைக்க கூடாது. நன்கு அறிமுகமானவர்கள் என்றாலும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லாவிட்டால், அது நடைமுறையில் சரிப்பட்டு வராது. எனவே, எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லாமல் யாரிடமும் வீடு கட்டும் பணிகளை ஒப்படைக்க கூடாது என்பதில் உரிமைாயளர்கள் தெளிவாக இருக்க வேண்டும். அதிலும், தெரிந்தவர்கள் நம்மை ஏமாற்றவா போகிறார்கள் என்று, பெயரளவுக்கு ஒரு ஒப்பந்தம் போட்டு பணிகளை ஒப்படைப்பதும் தவறு என்று கூறப்படுகிறது. ஒரு கட்டுமான பணி என்பது பல லட்ச ரூபாய் மதிப்பிலானது என்பதால் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இன்றி பணிகளை ஒருபோதும் ஒப்படைக்காதீர் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள். வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைக்க ஒருவரை தேர்வு செய்கையில் அவரது தொழில் திறன், தகுதியை மட்டும் பார்க்க வேண்டும், குறிப்பாக எழுத்துப்பூர்வ கட்டுமான ஒப்பந்தம் இன்றி பணிகளை ஒப்படைக்க கூடாது.