எம்.சாண்ட் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவையான கலவை தயாரிப்பதற்கு ஆற்று மணல் தான் சிறந்த தீர்வாக இருந்து வந்தது. ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாடுகளால் ஆற்று மணல் குவாரிகள் திறக்கபடாமல் போனதால் இதற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், ஆற்று மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்த அரசும் பரிந்துரைக்கிறது, வல்லுநர்களும் இதை ஊக்கப்படுத்துகின்றனர். பொதுவாக ஆற்று மணல் இயற்கையில் இருந்து நேரடியாக கிடைத்துவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எம்.சாண்ட் என்பது நேரடியாக அப்படியே வாங்கி பயன்படுத்தும் பொருளாக இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் குவாரிகளில் இருந்து கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு எம்.சாண்ட் ஆலைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு சீரான அளவுகளில் உடைத்து பல்வேறு கட்டங்களில் மெல்லிய துகள்களாக மாற்றப்படுகிறது. இவ்வாறு மெல்லிய துகள்களாக மாற்றப்பட்ட நிலையில், பெரிய இயந்திரங்கள் வாயிலாக கழுவி சுத்தம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுப்பப்படும். அடிப்படையில் எம்.சாண்ட் என்பது இயற்கையாக கிடைக்கும் கற்களை மூலப்பொருளாக பயன்படுத்தினாலும், ஆலைகளில் மெல்லிய துகள்களாக தயாரிக்கப்பட்டு ஒரு உற்பத்தி பொருளாக வெளியில் வருகிறது. வழக்கமான ஆற்று மணலில் அளவுக்கு மெல்லிய துகள்களாக மாற்றப்பட்டாலும், எம்.சாண்டுக்கு உரிய குணம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கான்கிரீட் கலவை தயாரிப்பதில் ஆற்று மணலுக்கு பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்தப்படும் நிலையில், அதை எப்படி நீராற்ற வேண்டும் என்ற அடிப்படை விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஆற்று மணலைவிட எம்.சாண்ட் மிகவும் மெல்லிய துகள்களை கொண்டதாக இருப்பதை கவனத்தில் கொள்வது அவசியம். இதன் காரணமாக, ஆற்று மணலைவிட அதிக அளவில் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதாக எம்.சாண்ட் அமைந்துள்ளது என்பதை புரிந்து செயல்பட வேண்டும். இதனால், ஆற்று மணல் கலவை போன்று இல்லாமல் இதற்கு கூடுதல் காலத்துக்கு நீராற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் எம்.சாண்ட் பயன்படுத்திய கட்டடங்களில் அதிக அளவில் தண்ணீர் விடாத காரணத்தால் மெல்லியவிரிசல்கள் விரைவிலேயே வந்துவிடுகின்றன. குறிப்பாக, பார்த்தவுடன் வெளிப்படையாக தெரியும் அளவுக்கு வெளிர் நிறத்தில் காணப்படும் எம் சாண்டை பயன்படுத்தலாமா என்பதை யோசித்து செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள். ஆற்று மணலைவிட அதிக அளவில் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதாக எம் சாண்ட் அமைந்துள்ளது என்பதை புரிந்து கட்டடங்களை நீராற்ற வேண்டும்.