வீடு கட்டும் பணிக்கு சரியான கான்கிரீட்டை தேர்வு செய்யும் வழிமுறைகள்!
நம் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக கட்டுமான பணியில் கான்கிரீட் பயன்பாடு மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. கம்பிகளை உள்ளீடாக வைத்து கான்கிரீட் போடும் ஆர்.சி.சி., முறையில், கட்டுமான பணிகளை மேற்கொள்வதில் தரம் சார்ந்த தேர்வு மிகுந்த அவசியமாகிறது.இதில் கட்டடத்தின் சுமை தாங்கும் அளவுக்கு ஏற்ற வகையில் தரமான கம்பிகளை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, எந்த வகை கம்பி கான்கிரீட் கலவையுடன் இயல்பாக சேர்ந்து கட்டடத்துக்கு உறுதியை கொடுக்கும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.நம் நாட்டில்தற்போதைய சூழலில், எம் 10 முதல் எம் 80 வரையிலான ஆறு நிலைகளில் கான்கிரீட் தரம் வகைபடுத்தப்பட்டுள்ளது.இதில் எந்த வகை உங்கள் கட்டடத்துக்கு ஏற்றது என்பதை பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.இந்த ஒவ்வொரு நிலைக்கு ஏற்ப, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவுகள் வேறுபடும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, ஒவ்வொரு நிலையிலும், சிமென்ட், மணல் ஆகியவற்றின் விகிதங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் சரியா என கவனிக்க வேண்டும்.பொதுவாக, சுமைதாங்கும் திறன் மட்டுமல்லாது, சூழலுக்கு ஏற்ற வகையில் நிலைத்து செயல்பட கூடியவை, அழுத்தம் தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கம்பிகளை தேர்வு செய்ய வேண்டும். கட்டுமான பணிகளுக்கு பல்வேறு நிலைகளில், ஒன்பது வகை கான்கிரீட் தரம் பரிந்துரைக்கப்பட்டாலும், மத்திய பொதுப்பணித்துறையினர், எம் 25 வகை கான்கிரீட்டை பரிந்துரைக்கின்றனர்.எந்த வகை கட்டடமானாலும், எம் 25 என்ற அடிப்படையில் தயாரிக்கப்படும் கான்கிரீட் கலவை, தேவையான உறுதி தன்மையை அளிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, துாண்கள், பீம்கள் அமைத்து கட்டப்படும் கட்டடங்களுக்கு எம் 25 வகை கான்கிரீட் சிறந்த தேர்வாக அமையும் என்று பொறியாளர்கள் கூறுகின்றனர்.ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், எம் 15 வகை கான்கிரீட்டை கட்டுமான துறையினர் பயன்படுத்துகின்றனர். இவ்வகை கான்கிரீட் சாதாரண கட்டடங்களுக்கு ஏற்றதாக தெரிந்தாலும், தட்பவெப்ப மாறுதல் ஏற்படும் இடங்களுக்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது.இதில் மலைப்பகுதிகளுக்கும், கடற்கரை ஓரங்களில் கட்டப்படும் கட்டடங்களுக்கும் பொதுவான வகை கான்கிரீட்டை பயன்படுத்துவது நல்லதல்ல. கட்டடம் அமையும் இடத்தில் அடிப்படையில் கான்கிரீட்டின் வகை மாறும் என்பதை புரிந்து சரியாக செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.