சொத்து வாங்குவோர் ஆவணங்களை சரிபார்ப்பதில் கவனிக்க!
புதிதாக வீடு, மனை வாங்கும் போது அதன் உரிமை ஆவணங்களை முழுமையாக சரி பார்க்க வேண்டியது அவசியம். இதில், சொத்து விற்பவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக கொடுத்து ஆவண பிரதிகளை பெற்று சரி பார்க்கும் படைமுறை வழக்கத்தில் உள்ளது. இதில், தொழில்நுட்ப ரீதியாக பல்வேறுமுன்னேற்றங்கள் வந்துவிட்டன என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். சொத்தின் ஆவணங்களின் காகித பிரதிகளின் நகல்களை வாங்கி, அதன் உண்மை தன்மையை சரி பார்ப்பதில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட சொத்து விற்பனை செய்யப்படுகிறது என்றால், அதன் அனைத்து ஆவணங்களும் தற்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கின்றன. இதனால், சொத்து உரிமையாளர் காட்டும் ஆவணங்கள் உண்மையானது தானா என்பதை மக்கள் தாங்களாகவே சரி பார்க்க முடியும். உதாரணமாக, ஒரு சொத்து விற்பனைக்கு வரும் நிலையில் அதன் சர்வே எண் தெரிந்தால் போதும், பதிவுத்துறை இணையதளத்தில் உள்ளீடு செய்து, தேவையான காலத்துக்கு வில்லங்க விபரங்களை இலவசமாக அறிந்து கொள்ளலாம். இந்த வசதியை பொது மக்கள் எவ்வித அலைச்சலும் இன்றி பயன்படுத்தலாம். இதே போன்று, சொத்தின் வில்லங்க விபரங்களில் தெரியவரும் முந்தைய பத்திரங்களின் பிரதிகளை பெற வேண்டும் என்றாலும், ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பெறலாம். இதில் தேவையான பத்திர பிரதிகள் உடனுக்குடன் கிடைக்கும் என்பது சிறப்பு. இதே போன்று, சொத்தின் பட்டா, சிட்டா, அ பதிவேடு, நில அளவை வரைபடம் போன்ற விபரங்களையும் வருவாய் துறை இணையதளத்தில் சென்று இலவசமாக பார்க்கலாம். குறிப்பாக, இவ்வாறு இலவசமாக பார்க்கும் ஆவணங்களின் பிரதிகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் சொத்து குறித்த பத்திரப்பதிவு, வருவாய் துறை ஆவணங்களை முழுமையாக வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாக மக்கள் ஆய்வு செய்யலாம். இன்னும் ஒரு முன்னேற்றமாக, விற்பனைக்கு வரும் சொத்து எங்கு அமைந்துள்ளது என்று தெரிந்தால் மட்டும் போதும். வருவாய் துறையில் ஜி.ஐ.எஸ்., மொபைல் போன் செயலி வாயிலாக, அடையாளப்படுத்தினால் போதும். அதன் சர்வே எண், வகைப்பாடு, நில அளவை வரைபடம், பட்டா ஆகிய விபரங்களை மொபைல் போன் வாயிலாக எளிதாக அறியலாம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.