உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / வீடு பராமரிப்பு / வீடு குளிர்ச்சியாக இருக்க.... இயற்கையான 10 எளிய வழிகள் !

வீடு குளிர்ச்சியாக இருக்க.... இயற்கையான 10 எளிய வழிகள் !

கோடை வந்து விட்டாலே நம் மனம் ஏங்குவது குளிர்ச்சிக்கு மட்டுமே, காரணம் பகல், இரவு என 24 மணி நேரமும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதுதான். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் வியர்வை அதிகரித்தல், கசகசப்பு, தலைவலி, சருமப் பிரச்னைகள், சோர்வு என ஒரு பக்கம் உடலைவாட்ட, மற்றொரு பக்கம் மின்சார கட்டணம் உயர்ந்து நம் பட்ஜெட்டின் சுமையை கூட்டும். இதற்காக கவலைப்பட தேவையில்லை. வீட்டின் உட்புற வெப்பநிலையை குறைவாக பராமரிப்பது மூலம், மேலே சொன்ன பெரும்பாலான பிரச்னைகளிலிருந்து விடுதலை அடையலாம். அதற்கான எளிய வழிகள் உங்களுக்காக இதோ...

சரியான காற்றோட்டம்

வீட்டை குளிர்ச்சியாக வைக்க வீட்டுக்குள் நல்ல காற்றோட்டம் அவசியம். ஜன்னல்கள் எதிரெதிர் திசைகளில் இருந்தால், காற்று எளிதாக உள்ளே வந்து வெளியேறும். காலையில் 5 முதல் 8 மணி வரை மாலையில் 7 முதல் 10 மணி வரை ஜன்னல்களை திறந்து வைத்தால், குளிர்ந்த காற்று வீட்டுக்குள் நுழைந்து அறை வெப்பநிலையை குறைக்கும்.

குளிர வைக்கும் மாடித் தோட்டம்

வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்தால் அல்லது செடிகொடிகள் வளர்த்தால், பெருமளவு வெப்பத்தை அந்த தாவரங்களே உள்வாங்கிவிடும். இதனால் வீட்டுக்குள் குளிர்ச்சி தக்க வைக்கப்படும்.

ஜன்னலோர தாவரங்கள்

ஜன்னலோரங்களில் செடிகள் வளர்க்கலாம், கொடிகளை பரவ விடலாம், இதற்கு கூடுதலாக தொங்கும் ஸ்டேண்ட் போன்ற வசதிகள் செய்யலாம். ஜன்னலோர கொடிகள் வீட்டின் அழகை அதிகரிப்பதுடன், காற்றில் உள்ள வெப்பத்தை உறிந்துகொண்டு, குளிர்ச்சியான காற்றை வீட்டுக்குள் அனுப்பும். வீட்டை சுற்றியுள்ள காற்றும் குளுமையடையும்.

கூலாக்கும் சுண்ணாம்பு வாஷ்

வீட்டின் கூரை வழியாக வெப்பம் இறங்குவதை தடுக்க மற்றொரு எளிய வழி, தளத்தின் மேற்பரப்பு மற்றும் மேற்கூரைகளில் ஒயிட்வாஷ் செய்வது. வெண்மை நிறம் ஒளியை பெருமளவு பிரதிபலித்துவிடும் என்பதால் வெப்பம் வீட்டுக்குள் இறங்காது. ஆனால் இது நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது. மழை பெய்தால் அடித்துக் கொண்டு போய்விடும். அதனால் அடித்த ஆண்டு மீண்டும் ஒயிட்வாஷ் செய்ய வேண்டி இருக்கும்.

குண்டு பல்பு வேண்டாம்

பழைய வகை குண்டு பல்பு, மின்சாரத்தை அதிகம் ஈர்ப்பதுடன், வெப்பத்தையும் அதிகமாக வெளியேற்றும். ஆகவே கோடையில் சி.எப்.எல் மற்றும் எல்.இ.டி விளக்குகளை பயன்படுத்துவதே சரியானது.

மூங்கில் பாய்கள், திரைகள்

மூங்கிலுக்கு வெப்பத்தை தடுக்கும் சக்தி உண்டு. இதனால் வீட்டு கதவு மற்றும் ஜன்னல்களை ஒட்டி மூங்கில் பாய்கள் தொங்கவிட்டால், அவை வெப்பத்தை வெளிலேயே நிறுத்திவிடும். பால்கனி மற்றும் மாடியின் அறையை ஒட்டிய வெளிப்புறத்திலும் இந்த திரைகளை தொங்கவிட்டால், அவை வெப்பத்தை தடுப்பதுடன் இதமான நிழலையும், வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்.

பிளைண்ட் அல்லது ஷேட்கள்

வெளிச்சத்தை மட்டும் அல்ல வெப்பத்தையும் கட்டுப்படுத்த கூடியவை நாம் ஜன்னலை ஒட்டி அமைக்கும் பிளைண்ட்கள். அதுபோல ஜன்னல் பால்கனியை ஒட்டி ஷேட்கள் அமைத்தாலும் வீட்டுக்குள் வெப்பம் வருவதை கட்டுப்படுத்தலாம்.

தேவையற்ற பொருட்களுக்கு நோ

நிறைய பொருட்கள் குவிந்திருக்கும் இடம், வெப்பத்தை தக்க வைக்கும். அங்கிங்கு குவிந்துள்ள தேவையற்ற புத்தகங்கள், பேப்பர்கள், பர்னிச்சர்கள், துணி மூட்டைகள், எலக்ட்ரிக் பொருட்கள் இவற்றையெல்லாம் வெளியேற்றி சுத்தப்படுத்தி, ஜன்னலை திறந்து வைத்தாலே, வெப்பநிலை ஜில்லென்று மாறிவிடும்.

அன்பிளக் செய்யுங்கள்

நாம் தினசரி பயன்படுத்தும் மிக்சி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், ஃபேன், அயர்ன்பாக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களின் பிளக்கை பயன்பாட்டில் இல்லாத நேரத்தில் அன்பிளக் செய்து வைக்கவும். சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தாலும், சாக்கெட்களில் சொருகியிருக்கும் எந்த பிளக்கும் வெப்பத்தை உருவாக்கவே செய்யும். வெப்பத்தையும் மின்செலவையும் குறைக்க அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட தரமான மின் சாதனைகளை பயன்படுத்தலாம்.

ஒரு கோப்பை ஐஸும், ஒரு டேபிள் ஃபேனும்

ஒரு டேபிள் ஃபேன், பெரிய உலோகக் கிண்ணம், கொஞ்சம் ஐஸ்கட்டி இருந்தால் போதும், அறைக்குள் ஏசி ஓடும் உணர்வை ஏற்படுத்திவிடலாம். ஃபேனுக்கு முன்பாக ஐஸ் கிண்ணத்தை வைத்துவிட்டால், ஃபேனில் இருந்து வெளிப்படும் காற்று ஐஸின் குளிர்ச்சியை அறைக்குள் பரவவிடும். ஐஸ் உருகினாலும் குளிர்ந்த நீர் தொடர்ந்து அந்த குளிர்ச்சியை அளிக்கும். இதே செயல்முறையை, உங்கள் கிரியேட்டிவிடிக்கு ஏற்ப பல்வேறு விதமாகவும் செய்து பார்க்கலாம். இணையத்தில் ஏராளமான ஐடியாக்களை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !