உள்ளூர் செய்திகள்

ஆறுதல் தேடுவது ஆண்கள் தீர்வை நோக்கி நகர்வது பெண்கள்

''ஆணுக்கு பிரச்னை என்றால், பெரும்பாலானோர் ஆறுதலை நோக்கி நகர்வர். பெண்கள் தான் தீர்வை நோக்கி நகர்வர்,'' என்கிறார், எழுத்தாளர் லதா சரவணன். தன்னம்பிக்கை பேச்சாளர், 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர் என, பன்முகத் தன்மையுடன் பயணிப்பவர், லதா சரவணன், 38. சென்னை, வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் அவரிடம் உரையாடிய போது...

உங்களுக்கு எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?

நாங்கள், 10க்கும் மேற்பட்ட உறவினர்கள், குடும்பமாய், ஒரே வளாகத்தில் வசிக்கிறோம். 2000 ஆண்டுகளில், சமூகத்தில், பெண்களுக்கான கட்டமைப்பு, நுாலகத்திற்கு கூட அனுப்ப முடியாத சூழல் இருந்தது. பின், சொந்த விருப்பத்தில், நுாலகம் சென்றேன். படிப்பது பிடிக்கும். ஆரம்பத்தில், வார இதழ்களில், சிறுகதை, கவிதை துணுக்குகள் எழுதுவதில் ஆர்வம் இருந்தது. தொடர்ந்து, எதார்த்தமாக துவங்கியது தான் சிறுகதை, நாவல் எழுதும் பழக்கம்.

உங்கள் படைப்புகள் பற்றி...

நான் முதலில் எழுதிய சிறுகதை, கூட்டு குடும்ப சிக்கல்கள், திருமணம் குறித்து, 2003ல், வார இதழ் ஒன்றில், 'மாலினி' என்ற தலைப்பில் வெளியானது. தொடர்ந்து, தற்போது வரை, வார இதழ்கள், நாளிதழ்களில், 58 நாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. தவிர, பதிப்பகம் வழியாக வெளியான, 20க்கும் மேற்பட்ட புத்தகங்களும் அடங்கும். என் எழுத்தை முதலில் ரசித்தவர் அம்மா.

உங்கள் புத்தகங்களின் கரு என்ன?

திருநங்கையர் வாழ்க்கை சூழல் பற்றி, 'காகித பூக்கள்' 2010ல் எழுதி வெளியானது. தொடர்ந்து, 'உயிரோவியம்' தீப்பெட்டி தொழிலாளர்கள் பற்றிய, 'நெஞ்சம் மறப்பதில்லை, காலநதியில் சித்திர பாவைகள்' தன்னை அறியாமல் ஏமாந்த பெண் பற்றிய, 'காற்றாய் வருவே'ன் என, 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளேன். பல விருதுகளும் பெற்றுள்ளேன்.

அவற்றை அனுபவித்து எழுதியது போல் தெரிகிறதே?

ஆம். நான் எழுதிய கதைகள், நாவல்கள் அனைத்தும், என் வாழ்க்கையில் அனுபவித்து எழுதியது. துணிக்கடைகள் அதிகம் உள்ள வண்ணாரப்பேட்டையில் வசித்ததால், திருநங்கையரை அதிகம் கவனிக்க முடிந்தது. அதன் விளைவாகவே, 'காகித பூக்கள்' நாவல் எழுதினேன். எழுதியவற்றில் பெரும்பாலானவை, சமூகத்தில் உள்வாங்கிய அனுபவங்களே.

பள்ளி, கல்லுாரிகளில் தன்னம்பிக்கை குறித்து பேசி வருகிறீர்கள்... அதை பற்றி?

இன்றைய கல்லுாரி மாணவர்கள், மொபைல் போனில் மூழ்கி கிடக்கின்றனர். சாலையை கடக்கும் போது கூட, கவனம் வாகனம் மீது கிடையாது. இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தன்னம்பிக்கை குறித்தும், பள்ளி, கல்லுாரிகளில் தொடர்ச்சியாக பேசி வருகிறேன்.

எழுத்தாளர்களால் பேச்சில் சாதிக்க முடியுமா?

என்னை பொறுத்தவரை, எழுத்தில், ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்த முடிகிறது. அந்த வலிமையை, பேச்சில் காட்ட முடிவதில்லை என, நினைக்கிறேன். இருப்பினும், புத்தகம் வாசிப்பு, பல தரப்பட்ட விஷயங்கள், தரவுகள் சேமிப்பு போன்றவை மேடை பேச்சுக்கு உறுதுணையாக இருக்கும். புரியாத வகையில், மொழியில் அடர்த்தி என்பதில், எனக்கு நாட்டம் இல்லை. தனிப்பட்ட ஸ்டைல் என்று கிடையாது. இயல்பாக படிக்கும் அனைவருக்கும் எளிதில் புரிய வேண்டும் என்பதற்காகவே, இயல்பாக எழுதி வருகிறேன். தவிர, மக்களுக்கு புரியும் இயல்பான வார்த்தையால் தான், எழுத்தாளர் வெற்றி பெற முடியும் என, கருதுகிறேன்.

பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது?

நல்ல பின்புலம் உள்ள பெண்கள் முன்னேறி உள்ளனர். அடிமட்ட ரீதியான பெண்கள், பிரச்னைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக, பாலியல் ரீதியான பிரச்னை, பாதுகாப்பு பிரச்னை உள்ளது. பெண்களை மென்மையோடு ஒப்பிடுகின்றனர். உடல் அளவில் மென்மையானாலும், மனதளவில் திடமானவர்கள். ஆணுக்கு பிரச்னை என்றால், பெரும்பாலானோர் ஆறுதலை நோக்கி நகர்வர். பெண்கள் தீர்வை நோக்கி நகர்வர்.

'டிவி' சீரியல்கள் எப்படி உள்ளன?

'டிவி' சீரியல்கள், குடும்பங்களில் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்துகிறது. இலை மறை, காய் மறையாக இருந்த விஷயங்கள், பல சீரியல்களால் வெளிப்படையாகி விட்டன. ஒரு சில சீரியல்கள் தவிர, பெரும்பாலானவை, எதிர்மறை எண்ணங்களையே பிரதிபலிக்கின்றன.

உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்?

ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து விடுவேன். ஒரு புத்தக கண்காட்சியில், அவர் பேசிய பேச்சை, ஒரு மணி நேரம் கேட்ட அனுபவம் உண்டு. சாண்டில்யன், பால் ராசையா ஆகியோரின் எழுத்துகள் பிடிக்கும். தவிர, இளம் எழுத்தாளர் இன்பாவின் எழுத்துகளும், அருமையாக இருக்கும்.

எதிர்கால இலக்கு?

கடைசி வரை இத்துறையில் பயணிக்க வேண்டும். என் கணவர், உறுதுணையாக நிற்கிறார். நரிக்குறவர்கள் மற்றும் வடசென்னை குறித்த புத்தகங்கள் எழுத வேண்டும். புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் வகையில், மின் கைத்தடி எனும், 'ஆன்லைன்' பத்திரிகை துவங்கும் முயற்சி உள்ளது.- நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !