நங்கையர் திலகம்!
தேர்தலில் உடல் குறைபாடு உள்ளவர்களும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறது. மெரினா கடற்கரையில் அவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப நிரந்தர மரப்பாதையை அரசு நிறுவிஇருக்கிறது.இத்திட்டங்கள் எல்லாம் புள்ளியில் இருந்து முழுவடிவம் பெற தன் ஆலோசனைகளால் பங்களித்த செயற்பாட்டாளர் சென்னை, கோட்டூர்புரம் ஸ்மிதா சதாசிவன்; 'மல்டிபிள் ஸ்க்ளிரோசிஸ்' எனும் உடல் குறைபாட்டை எதிர்கொண்டு வாழ்பவர்.'மாற்றுத்திறனாளி' - இந்த அடையாளம் பலம் தருதா?உடல் குறைபாட்டால ஒருத்தர் தரையில தவழ்ந்து வர்றது மாற்றுத்திறன் இல்லை; சக்கர வண்டி இல்லாதது, சாய்வு வழிப்பாதை இல்லாதது மாதிரியான உரிமை மறுப்பாலதான் தரையில தவழ வேண்டிய கட்டாயம் ஏற்படுது. அந்த உரிமை கிடைச்சுட்டா அவரும் எல்லார் மாதிரியும் திறமைசாலிதான்! 'மாற்றுத்திறனாளிகள், திவ்யாங்ஜன்' சொற்கள் எல்லாம் எங்க உரிமையோட தீவிரத்தை மறைப்பவை! 'ஊனம்' - வலி தரும் வார்த்தைதானே?கண்டிப்பா வலிக்கும்; ஆனா, இங்கே ஊனமானவர்கள் நாங்க இல்லை; எங்க உரிமைகளை அலட்சியப்படுத்துற இந்த சமூகம்! உடல்ல சர்க்கரை அளவு கூடினா உபாதைகள் வருது; அந்தமாதிரி நாங்களும் சில உபாதைகளை சந்திக்கிறோம்... அவ்வளவுதான்! ஆனா, சர்க்கரை வியாதிக்காரருக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைக்குது. கழிப்பறை, போக்குவரத்து, சொத்துரிமை, வேலைவாய்ப்புன்னு பல தளங்கள்ல எங்களுக்கான உரிமை கிடைக்கலை.கல்லுாரி இறுதியாண்டில் உடல் குறைபாட்டை எதிர்கொண்டவர் ஸ்மிதா. படுத்தபடி எழுத்தர் உதவியுடன் தேர்வு எழுதி உளவியலில் முதுகலை வரை படித்திருக்கிறார். நிச்சயமற்ற வாழ்வில் உங்களது நம்பிக்கை?நிச்சயமின்மை பற்றி அதிகமா யோசிச்சா கையறுநிலைக்கு போயிடுவோம். 'வெற்றியைப் பற்றி யோசிக்காம ஒவ்வொரு படியா மேலேறணும்'ங்கிறது என் நம்பிக்கை.'மல்டிபிள் ஸ்க்ளிரோசிஸ்' காரணமாக முழு பார்வைத் திறனையும் இழந்து மீண்டும் கிடைக்கப் பெற்றவர் ஸ்மிதா. ஸ்டிராய்டு மருந்துகளால் பல பக்கவிளைவுகளை சந்தித்திருக்கிறார். உடல் அனுபவிக்காத வலியே இல்லையாம்! வளர்ச்சிக்கான அடிப்படை என்ன?கல்வியாலேயும், அனுபவத்தாலேயும் நமக்கு கிடைச்சிருக்கிற அறிவை பிரதிபலன் பாராம பகிரணும்!ஆறாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வுக்கான கேள்விகள் பட்டியலில், 'உடல் குறைபாடு உள்ளவர்கள்' குறித்த கேள்வியை சேர்க்க உயர் நீதிமன்றம் சென்றிருக்கிறார் ஸ்மிதா. பல தேர்களை பெரும் தன்னம்பிக்கையுடன் இழுத்து இடம் சேர்த்தவர் இதிலும் நிச்சயம் சாதிப்பார்.