'வாயை மூடு; இனிமே இப்படி பேசாதே சொல்லிட்டேன்!'தன் கணவர் வையாபுரியிடம் அம்மையக்காள் இப்படி வெடிக்கிறார் எனில்...
வையாபுரி அய்யா வீட்டுல அம்மா ராஜ்ஜியம்தானா?
ஆமா... என் அம்மா ராஜ்ஜியம்! நான் 'அம்மா'ன்னு சொல்றது என் மனைவியைத் தான்! அவளை நான் அப்படித்தான் கூப்பிடுவேன். இத்தனை வருஷத்துல என் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாத என் அம்மா, முதல் தடவையா அன்னைக்குத்தான் குரல் உயர்த்தினா!
அப்படியா... என்னாச்சுய்யா அன்னைக்கு?'
உங்க புருஷனை காப்பாத்துறது சிரமம். ஒருவேளை அவர் பிழைச்சாலும் உடம்புல உயிர் மட்டும்தான் இருக்கும்'னு மருத்துவர்கள் அவகிட்டே சொல்லும்போது, 'அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம்; ஏதாவது ஊசி போட்டு என்னை கொன்னுருங்க டாக்டர்'னு நான் அழுதேன். இப்படி ஒரு சூழல்ல எந்த மனைவிக்கும் கோபம் வரத்தானே செய்யும்!
அந்த விபத்து
ஆகஸ்ட் 15, 2004. ஆற்று நீர்ல யோகா கத்துக் கொடுத்துட்டு இருந்தேன். தண்ணீருக்குள்ளே பல்டி அடிச்சப்போ உள்ளே பதிச்சிருந்த குழாய்ல மோதி என் கழுத்து உடைஞ்சு நரம்பு சிதைஞ்சிருச்சு. அன்னைக்குதான் மருத்துவமனையில அம்மா அப்படி பேசிட்டா! படுக்கையில இருந்தப்போ, 'இப்படி இந்த உலகத்துல வாழணுமா?'ன்னு தோணும். ஆனா, இவ முகத்தைப் பார்த்ததும், 'இன்னும் ரொம்ப காலம் வாழணும்'னு ஆசை வந்திரும்!கரூர் மாவட்டம், ராமகவுண்டனுாரைச் சேர்ந்த வையாபுரிக்கு வயது 80; அம்மையக்காளுக்கு 76. தற்போது, 12 ஏக்கர் சொந்த நிலத்தில் மகிழ்ச்சியோடு விவசாயம் செய்து வருகின்றனர். ஆம்... விபத்துக்கு பின் ஒரே ஆண்டில், 'மெடிக்கல் மிராக்கிள்' என்று மருத்துவர்களை சொல்ல வைத்து நடை பயின்றிருக்கிறார் வையாபுரி; அவரை நடத்திக் காட்டியிருக்கிறது அம்மையக்காளின் அன்பு!
'நம்பிக்கை' - மாயாஜாலம் பண்ணுதுல்ல?
'இல்லை'ன்னு சொல்ல முடியுமா... அதையும் நான் சொல்ல முடியுமா! திருமணம் முடிஞ்ச புதுசுல எனக்கு குடிப்பழக்கம் இருந்தது; போதையில வீட்டுக்கு வந்து அவளை அடிப்பேன். ஆனாலும் எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டா; என்னைக்காவது ஒருநாள் நான் மாறுவேன்னு நம்பினா; அவளோட எந்த நம்பிக்கையும் இதுவரைக்கும் தோற்கலை!இதற்குமுன் டிராக்டர் விபத்தில் மார்பு எலும்புகள் சிதைந்து வந்த போதும், பாறை விபத்தில் கால் உடைந்து விழுந்த போதும்... வையாபுரியை இதேபோல் மீட்டிருக்கிறது அம்மையக்காளின் நம்பிக்கை. சமீபத்தில்... 'எந்த ஜென்மத்திலும் இதே உறவு வேண்டும்' எனும் வரம் பெற, கொள்ளுப் பேரப் பிள்ளைகளோடு திரிவேணி சங்கமத்தில் சதாபிஷேகம் கண்டு திரும்பியிருக்கின்றனர். எங்களை ஆசிர்வதியுங்கள்!