அவளே சரணம்!
அம்மன் கழுத்து மாலையில் இருந்து உதிரும் புஷ்பம் பக்தனின் மனதோடு பேசும் என்பது உண்மை எனில், யசோதாவின் கண்கள் உதிர்த்த தாய்ப்பாசமும் உண்மை!இப்போ... அம்மா முகம் பார்த்து யசோதா, 'நன்றி' சொல்லப் போறாங்க...மகளின் பாசமொழி பருகும் ஆர்வத்துடன் 69 வயது சாந்தி தயாராக... மெதுவாக தலை நிமிரும் யசோதா, தாயின் முகம் பார்க்கிறார்... பார்க்கிறார்... 'ம்ம்ம்....பேசும்மா'... தாய் தவிக்க... நீளுகிறது யசோதாவின் பார்வை; சற்றும் இறங்காத இமைகளுக்குள் இருந்து இறங்கி வருகின்றன அவரது கனவுகள்; ஆம்... நினைவுகள் அல்ல... கனவுகள்!10 வயதில்...சாந்தி: உனக்கு பிடிக்கிறதெல்லாம் அம்மா கேட்டு கேட்டு செய்றேனே... எனக்கு என்ன பிடிக்கும்னு ஒருநாளாவது கேட்டிருக்கியாடி?யசோதா: நான் ஏன் கேட்கணும்; எங்கம்மாவுக்கு என்னைத்தான் பிடிக்கும்னு எனக்கு நல்லா தெரியுமே!சாந்தி: ம்ம்ம்... இப்படி பேசியே மயக்கிரு! 18 வயதில்...சாந்தி: இன்னும் ஒரு நாலு வருஷம்... கல்யாணமாகி போயிடுவே; அப்புறம் இந்த அம்மா ஞாபகமெல்லாம் உனக்கு வருமா?யசோதா: கடவுளே... எங்கம்மா நினைக்கிற மாதிரி சீக்கிரம் அவங்ககிட்டே இருந்து என்னை பிரிச்சிடாதே; எங்கம்மா கூடவே நான் ரொம்ப நாள் பேசி சிரிச்சு சந்தோஷமா இருக்கணும்!சாந்தி: ம்ம்ம்... பார்ப்போம்... பார்ப்போம்!30 வயதில்...யசோதா: ஹலோ... அம்மா... எப்படி இருக்குறே; எனக்கு உன்னையும், அப்பாவையும் பார்க்கணும் போல இருக்கு... வந்துட்டுப் போங்களேன்... உன் பேத்தியும் உன்னை ரொம்ப தேடுறா!சாந்தி: நேத்துதானடி இங்கிருந்து போனே... அதுக்குள்ளேயா?நிஜமாகாத தன் கனவுகளில் சொல்லாமல் விட்ட 'நன்றி'யை இன்று சொல்வதற்காக, இன்னும் தாயின் முகம் பார்த்தபடியே... யசோதா. கனவுகளை நமக்கு திரையிட்ட அவர் கண்களுக்குள்... கண்ணீர். இதோ... இதோ... உதடுகளில் அசைவு... உதிரப் போகிறது நன்றி; இதோ... உதிர்ந்து விட்டது... இரு துளி கண்ணீர்; இதுவே, அவரால் சொல்ல இயன்ற நன்றி!பிறக்கும்போது எடை குறைவு; மன வளர்ச்சி இல்லை; லாரி ஓட்டுனராக தொழில் செய்து வந்த தந்தை சுந்தர் தன்னால் இயன்ற அளவிற்கு மருத்துவம் பார்த்திருக்கிறார். இப்போது... 43 வயது குழந்தையாக யசோதா!'அம்மா, அப்பா, ண்ணா, க்கா, ண்டா (வேண்டாம்)' - இவை மட்டுமே யசோதாவின் மொழிகள். நாம் பேசுவது அவருக்குப் புரியும்; அவ்வளவே! அவருக்கான எல்லா பணிவிடைகளையும் அம்மா சாந்தியே செய்கிறார். யசோதா 'நன்றி' சொல்லிட்டாங்க; சாந்தியம்மா என்ன சொல்லப் போறீங்க...? எங்க காலத்துக்கு அப்புறமும் இவ பாதுகாப்பா வாழ ஒரு இடம் தேடுறோம்; அதுக்கு கடவுள் வழிகாட்டணும்.