உள்ளூர் செய்திகள்

அவளே சரணம்!

அன்று ஆடு மேய்ப்பதற்காக பேருந்து நிலையத்தின் அருகே 36 வயது முத்துமாரி போகாமல் இருந்திருந்தால், கிட்டுவும், டாமியும் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டிருக்காது!மே 23, 2022ல், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தின் அருகில் அந்த விபத்து!'கடையில உட்கார்ந்து தண்ணீர் கேன் தொழிலை கவனிச்சுக்கோன்னு சொல்லிட்டே இருப்பேன்! 'தலைக்கு மேல கடன் இருக்கு; இதுகளை வளர்த்து வித்தா நாலு காசு பார்க்கலாம்னு ஆடு மேய்க்கிறதுக்கு கிளம்பிருவா! அன்னைக்கு அசுர வேகத்துல வந்த கார் மோதி...' - துக்கத்தில் முத்துமாரியின் கணவர் பெரியசாமிக்கு வார்த்தைகள் முட்ட, அருகில் அமர்ந்திருந்த பிள்ளைகள் இருவருக்கும் என்ன சொல்லி தந்தையை தேற்றுவது எனத் தெரியவில்லை. அவர்களது கண்களிலும் கண்ணீர்!'கேஸ் சிலிண்டர்' விநியோகம் செய்து வரும் பெரியசாமியின் பெண் பிள்ளைகள் இருவரும் பிளஸ் 2 படிக்கின்றனர்! அம்மா இல்லாத நாட்கள் எப்படி நகர்கின்றன?கலாராணி: 'அப்பா கஷ்டப்படக்கூடாது'ன்னு நானும் தங்கச்சியும் வலி மறந்த மாதிரி நடிக்கிறோம்; அப்பா, எங்க முன்னால நடிக்கிறார். 'நான் இல்லாதப்போ தான் உங்களுக்கு என் அருமை தெரியும்'னு நானும் தங்கச்சியும் சண்டை போடுறப்போ எல்லாம் அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. இப்போ, நாங்க சண்டையே போடுறது இல்லை!வாணீஸ்வரி: 'பிரச்னை வர்றப்போ அதை எதிர்த்து நிற்கிற தைரியம் இருந்தா போதும்; வாழ்ந்துடலாம்'னு அம்மா வாழ்ந்து காமிச்சாங்க; இருக்குறதை வைச்சு குடும்பம் நடத்துறது எப்படின்னு அவங்க சொல்லிக் கொடுத்த பாடம்தான், இன்னைக்கு எங்க நாட்களை கவுரவமா நகர்த்த உதவி பண்ணிட்டு இருக்கு!முத்துமாரி இறந்த நேரத்தில் பிள்ளைகள் இருவரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருக்க, மகள்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாதென தேர்வு முடிந்த மறுதினமே இறப்பு செய்தியை பகிர்ந்திருக்கிறார் பெரியசாமி.தாயை விட அத்தனை உயர்ந்ததா கல்வி?'என்னாலதான் ஐந்தாம் வகுப்புக்கு மேல படிக்க முடியலை; நீங்க நல்லா படிக்கணும்'னு பொண்ணுங்ககிட்டே அவ சொல்லிட்டே இருப்பா; அவ சடலத்தை பார்த்த கணம் எனக்கு அவளோட இந்த வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது; அதான், துக்கத்தை மறைச்சிட்டேன்!முத்துமாரியின் மறைவுக்கான பெரியசாமியின் கண்ணீருக்கும், பிள்ளைகளின் கண்ணீருக்கும் 'மனைவி, தாய்' எனும் காரணம் இருக்கிறது. ஆனால், 'கிட்டு' நாயும், 'டாமி' பூனையும் வீட்டை விட்டு ஏன் வெளியேறின? ஏனெனில், இன்றும் வீடு திரும்பாத அவைகளின் தேடலில் இருக்கிறது... முத்துமாரி ஊட்டிய அன்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !