முதல்வர் பேசுகிறார்!
'பள்ளி முதல்வர் - இது, இந்த பள்ளி எனக்கு தந்திருக்கிற பதவி; ஆனா, 'கல்பனா அக்கா'ங்கிறது இப்பள்ளி மாணவர்கள் என் மேல காட்டுற பாசம்.'முப்பது ஆண்டுகளுக்கு முன்னாடி, 'ஆட்டிசம்' பாதிச்ச என் குட்டி மகளை அழைச்சுக்கிட்டு, சென்னை கோட்டூர்புரத்துல இருக்குற இந்த வித்யாசாகர் சிறப்பு பள்ளிக்கு வந்தேன். அதுக்கப்புறம் தன்னார்வலர், ஆசிரியை, இப்போ முதல்வர்னு என்னை உயர்த்தினது இந்த பள்ளியோட தலைவர் பூனம் அம்மாதான்!' - கல்பனா ராவ்.உழைப்பு வீணாகாது! கல்வி, விளையாட்டு, தொழிற்கல்வி, ஆர்ட் அண்டு கிராப்ட் எல்லாம் சராசரி குழந்தைகள் அனுபவிக்கிற விஷயங்கள். இது அத்தனையும், 6 - 18 வயது வரைக்குமான எங்க மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் கிடைக்கணும்னு உழைக்கிறேன்!மாத்தி யோசி!மாற்றுத்தகவல் தொடர்பு முறைக்காக... ஐ.ஐ.டி., மாணவர்கள் உதவியோட 'அதிதி' உபகரணம், நிர்வாக ஒத்துழைப்போட 'வீ பாஸ்' உபகரணம் உருவாக்கினேன்; குழந்தைகளோட கற்றல் இப்போ எளிமையாகி இருக்கு. பொறுப்பு துறக்காதீர்!சிறப்பு குழந்தைகளோட தனித்திறன்களை கண்டறிஞ்சு, அவங்களை திறன்மிக்க மனிதர்களா உருவாக்குறது பெற்றோர் ஒத்துழைப்பில்லாம சாத்தியமில்லை. அதனால, 'என் குழந்தையை சிறப்பு பள்ளி பார்த்துக்கும்'னு எந்த பெற்றோரும் பொறுப்பை துறக்கக் கூடாது. விட்டுப்பிடிங்க! ஆசிரியர்களுக்கு என்னோட அறிவுரை எப்பவுமே இதுதான்; மாணவர்களை விட்டுப்பிடிக்க கத்துக்கோங்க; இந்த திறன் கைக்கு வந்துட்டா, உங்க அக்கறை வளையத்துக்குள்ளே எப்பவுமே அவங்க இருப்பாங்க!இப்படி பண்றீங்களே... விண்வெளி திட்டங்கள், 'ஸ்மார்ட் சிட்டி'ன்னு நாட்டுல ஒரு பக்கம் அசுர வளர்ச்சி; ஆனா, அரசு அலுவலகங்கள், பொதுஇடங்கள்ல மாற்றுத்திறனாளிகள் வந்துபோக பெரும் சிரமங்கள்; இந்த நிலைமை மாறணும்ங்கிறது என் விருப்பம். இது நடக்குமா?தோட்டத்துக்கு அப்பால் செடிகளை வளர்க்கிற மாதிரிதான் சிறப்பு பள்ளிகள்; இது கூடாது! எல்லாருக்குமான சமுதாயத்துலதான் சிறப்பு குழந்தைகள் வளரணும். எல்லாருக்குமான பள்ளியில, சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிற்றுவிக்கணும்; இது நடக்குமா?என் பிரார்த்தனைஇந்த ஊரடங்கால என் மாணவர்களை சந்திக்க முடியலை. சிறப்பு கல்வி, பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி எதையும் எங்களால தர முடியலை. இதனால மன இறுக்கம், வலிப்பு, சுவாசப்பிரச்னைன்னு பல தொந்தரவுகள் அவங்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கு. இறைவா... பழைய சூழல் சீக்கிரம் திரும்பணும்.