உள்ளூர் செய்திகள்

பெண்மை என் பெருமை

உடல் மெலிந்த, குரலில் கனமற்ற, பார்வை மங்கிய ஒருவரைத்தான் சாந்தாவாக மனம் கற்பனை செய்திருந்தது.'நல்லா இருக்கீங்களா; வாங்க... அந்த மாமரத்துக்கு கீழே உட்காரலாம்' - நம் கணிப்புகளை தகர்த்தெறிந்து முன் நடந்தவருக்கு, வயது 65. தலை சிலுப்பி வரவேற்ற மாமரத்தின் காற்று நம்மை ஆரத்தழுவியது!'மரங்களும் காற்றும்தான் எப்பவும் எனக்கான ஆறுதல்!' - அமர்ந்த கணத்தில் தன் வாழ்க்கை சூழலை நேர்த்தியாக புரிய வைத்தார் சாந்தா! சாந்தாம்மா இங்கே வந்ததன் பின்னணி?'வெளிநாடு போய் சம்பாதிச்சா கடனையெல்லாம் அடைச்சிடலாம்; பிள்ளைகளை பார்த்துக்கோங்க'ன்னு கணவர்கிட்டே சொல்லிட்டு தைரியமா வீட்டு வேலைக்கு போனவ நான்; 22வது மாடி ஜன்னலை வெளிப்பக்கம் துடைக்கிற அளவுக்கு தைரியம்!இப்போ, கணவர் இறந்துட்டார். ரெண்டு மகன், ஒரு மகள். 'முறையா இருக்காது'ங்கிறதால மகள் கூட வாழ்றதை நான் மறுத்துட்டேன். என்னை பார்த்துக்க மகன்கள் மறுத்துட்டாங்க!சென்னை மாத்துாரின் 'ஜீவோதயா' காப்பகத்தில் அடைக்கலம் ஆகியிருக்கும் சாந்தா அந்தோணி, மார்பக புற்றுநோயாளி. '3 மாதமே ஆயுள்' என்று மருத்துவர்கள் கெடு விதித்த நிலையில், தன் மனபலத்தால் 9 ஆண்டுகள் கடந்தும் வாழ்பவர். இரண்டு மாதங்களுக்கு முன் வலது மார்பகம் அகற்றப்பட்டிருக்கிறது. சாந்தாவின் தன்னம்பிக்கைக்கு காரணம்?சென்னை திரும்பினதும் ஒரு வீட்டுல முதியோர் பராமரிப்பு பணியில சேர்ந்தேன். அப்போதான் இந்த நோய் வந்தது; ஈட்டியால குத்தின மாதிரி மார்பு வலிக்கும். நான் கத்துறதுல வயதானவர்களுக்கு ஏதும் ஆயிடக்கூடாதுன்னு முந்தானையால வாய் பொத்திக்குவேன். வலி தாங்குற வலிமையை அப்போ எனக்கு தந்தது என் பெண்மை.பயமா இருக்குதாம்மா?என்கிட்டே பேசிட்டு இருந்தவளோட பெருமூச்சு கடைசி மூச்சா மாறுனதை பார்த்த அன்னைக்கு பயமா இருந்தது; அப்புறம், 'இன்னைக்கு நீயா... நாளைக்கு நான்'னு மனசு பழகிருச்சு. ஏதாவது ஆசைகள் உண்டா?இந்தா... இப்படி 'அம்மா'ன்னு நீங்க கூப்பிடுற மாதிரி பசங்க ரெண்டு பேரும் பேச மாட்டாங்களான்னு ஆசையிருக்கு; நல்ல நாட்கள்ல தேடி வந்து ஆசிர்வாதம் வாங்க மாட்டாங்களான்னும் ஆசைப்படுவேன்; பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்லி முத்தங்கள் வாங்கணும்னும் ஆசை; அடிக்கடி பிரியாணி சாப்பிடணும்னு அடங்காத ஆசை; ப்ப்ச்ச்... இது எதுக்கும் வாய்ப்பில்லை!சாந்தாவின் அனுபவ அறிவுரை?உயிர் பிரியுறதுக்கு முன்னால கணவர் என்கிட்டே சொன்னது தான்...'பிள்ளைகளை மட்டுமே நம்பி இருந்திடாதே சாந்தா!'சாந்தாவின்புதுப்புது அர்த்தங்கள்*உறவு? - அலை*அன்பு? - உப்பு*உயிர்? - நுால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !