உள்ளூர் செய்திகள்

பெண்மை என் பெருமை!

மனதின் காயங்கள் குணமாக நேர் மறையான செயல்கள் தான் களிம்பு. சென்னை, நங்கநல்லுார் கிரிஜா மனதில் நிறைய காயங்கள்; விரும்பிய உடை உடுத்த தடை, விளையாட்டுக்கு தடை, கருத்து திணிப்புகள்... இப்படி பல!இன்று... 53 வயதில் ஐ.டி., பணியாளராக இருப்பவரின் காயங்கள் ஆறி விட்டன; நினைவு வடுக்களை தடவியபடி பேசுபவர் முகத்தில் வாழ்வை வெற்றியின் ஓடுபாதைக்கு இழுத்து வந்த திருப்தி! கிரிஜாவுக்கு மிகவும் வலி தந்த இழப்பு?அப்போ நான் பிளஸ் 1 மாணவி. வீட்டுல அம்மா ரொம்பவே ஒழுக்கம் எதிர்பார்ப்பாங்க; அதனால, சுரிதாருக்கு கூட வாய்ப்பில்லை; எப்பவும் பாவாடை தாவணிதான்! இந்த கண்டிப்புக்கு பயந்தே, பள்ளியில கூடைப்பந்து விளையாடிட்டு வந்தாக்கூட 'சிறப்பு வகுப்பு'ன்னு சொல்லிடுவேன். விளையாட்டு வீராங்கனையா அடுத்த கட்டம் போறதுக்கான ஒரு போட்டிக்கு அம்மாகிட்டே அனுமதி கிடைக்கவே இல்லை! அந்த இழப்பு ரொம்பவே வலிச்சது!கிரிஜாவுக்கு 37 வயது வரையில் திருமணம் ஆகவில்லை. அதன்பின், குழந்தை இல்லாத நிலையை முன்வைத்து மேலும் அவரை காயப்படுத்தி இருக்கின்றன சமூகத்தின் வார்த்தைகள்! எப்படி வந்தது இரண்டாம் வாய்ப்பு?திருமணம் ஆகாத சமயத்துல, 'வீட்ல போய் சும்மாதானே இருக்கப் போறீங்க; கொஞ்சம் லேட்டா போகலாமே'ன்னு ஆபிஸ்ல சிலர் கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம் குழந்தை இல்லாததால, 'உனக்கென்ன குடும்ப பொறுப்புகள் இருக்கு'ன்னு நட்பு வட்டத்துல பேசினாங்க! எனக்குன்னு இருக்குற தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் அங்கீகரிக்கலை. எனக்கு நானே அந்த அங்கீகாரத்தை கொடுத்த நிமிஷம் புது வாழ்க்கை ஆரம்பமாயிருச்சு.கிரிஜா தன் 46 வயதில் 'ஓட்டம் - நீச்சல் - சைக்கிளிங்' என மூன்றும் சேர்ந்த 'டிரையத்லான்' போட்டிகளில் சாதிக்கத் துவங்கினார். இதுவரை தேசிய அளவில் மூன்று பதக்கங்கள், சர்வதேச அளவில் ஒரு வெண்கலம் வென்றிருக்கிறார்.பெண்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பு கிடைத்தால் என்ன சொல்வீர்கள்?'ஆரம்பத்துல மாரத்தான் ஓடுறப்போ அதற்குரிய உடைகள் என்கிட்டே கிடையாது. போகப்போக அதற்குரிய உடைகள், காலணிகளை பயன்படுத்த தெரிஞ்சுக்கிட்டேன். நமக்கானதை நாமதான் தேடிப் பிடிக்கணும். ஆரோக்கிய விஷயத்துல என்னை மாதிரி நீங்களும் சுயநலமா இருக்கணும்'னு சொல்வேன்! கிரிஜாவை ஓட வைப்பது?'டிரையத்லான்' களத்துல என்னை ஓட வைக்கிறது... மனம்; அலுவலக பணியில ஓட வைக்கிறது... சுயமரியாதை; வாழ்க்கையில ஓட வைக்கிறது... தேடல்.கிரிஜாவின்புதுப்புது அர்த்தங்கள்* வியர்வை? - படிகள்* வெற்றி? - தோழி* மனம்? - கண்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !