நாத்திசராமி (கன்னடம்)
'நீ எனக்கு மனைவியா அமையாம இருந்திருந்தா, என் வாழ்க்கைக்கு அர்த்தமே கிடைச்சிருக்காது கவுரி'ன்னு சொன்ன என் மகேஷ், இப்போ உயிரோட இல்லை.வருஷங்கள் கரையுது; ஆனா, மகேஷோட நினைவுகளை என் மனசுல இருந்து கரைக்க முடியலை.எனக்கு கணவர் இல்லைங்கிறது என் மனசுக்கு புரியுது; ஆனா, உடல் புரிஞ்சுக்க மறுக்குது. 'உடல் தேவைக்காக இன்னொரு திருமணம் பண்ணிக்கிறது மகேஷுக்கு செய்ற துரோகம்'னு மனசு சொல்லுது; ஆனா, உடல் கெஞ்சுது.ரணமாயிடுச்சு வாழ்க்கை. மனநல மருத்துவரை சந்திச்சேன்.ம்ஹும்; சிகிச்சையா அவர் தந்த வார்த்தைகளை மனசு ஏத்துக்கிச்சே தவிர, உடல் ஏத்துக்கலை.நண்பனா பழகின ஒரு ஆண், என்னோட இந்த உணர்ச்சியை தெரிஞ்சுக்கிட்ட மறு நிமிஷம், என்னை அருவருப்பா பார்த்தான்; என்கிட்டே இருந்து விலகினான்.நான் அவன்கிட்டே கேட்டேன்...'வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் பழகுறப்போ, ஏதாவது ஒரு கணத்துல தன்னோட உடல் தாகத்தை அந்த ஆண் வெளிப்படுத்தினா, அதை இயற்கை ஏற்படுத்துற பசின்னு புரிஞ்சுக்கணும்.'அதையே ஒரு பெண் வெளிப்படுத்திட்டா, அதுவும் அவ கணவனை இழந்தவளா இருந்தா, அவளை அசிங்கமா பார்க்கணும்; என்னடா உங்க புத்தி?'அவனோட பதில்... மவுனம்.