விடியும் வரை கிறுக்குவேன்
நவம்பர் 25: பிழையாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு, 'மைக் பிரச்னை' என்ற துணை முதல்வரது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட என் திராவிட மனம், 'எல்.ஐ.சி., இணையதளம் ஹிந்தியில் மாறி மீண்டதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம்' என்பதை ஏற்கவில்லை! நவம்பர் 26: 'கோழிப்பண்ணை செல்லதுரை போன்ற குறைகளோடு கூடிய படைப்பை பாராட்டுவது நற்பண்பு. அதை நமக்குரியது என ஏற்றுக் கொள்ளக்கூடாது!' - இயக்குனர் சீனு ராமசாமிக்கான கரு.பழனியப்பனின் இப்பதிவு, நேற்று முளைத்த அரசியல் வாரிசுக்கும் பொருந்தும்! நவம்பர் 27: 'எனது எல்லைக்குள் போதைப்பொருள் நடமாட்டம் இல்லை' என்று ஒவ்வொரு காவல் ஆய்வாளரும் உறுதிப்படுத்த வேண்டும் என ஆசைப்படும் முதல்வருக்கு, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அயனாவரம் காவலர் சொன்ன செய்தி என்ன?நவம்பர் 28: 'திராவிட மாடல்' நல்லாட்சியின் சிறப்பை உணர்ந்த மக்கள், தனியார் மருத்துவமனை செல்வதை தவிர்த்து அரசு மருத்துவமனைக்கு வருகிறார்களாம்; அமைச்சர் சொல்கிறார். 'சரி... அமைச்சர்கள் செல்வது எங்கே?' என கேட்பது அதிகப்பிரசங்கித்தனம்! நவம்பர் 29: 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளி விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிறார்' என துல்லியமாய் சொல்லும் அரசிடம், 'டாஸ்மாக்' பறித்த உயிர்களின் எண்ணிக்கையும் நிச்சயம் இருக்கும்; நாம் கேட்கவில்லை... அவ்வளவுதான்.