'ஹெபடைடிஸ் - பி' வைரஸ் தொற்று போன்று, கொரோனா தொற்று கல்லீரலை பாதிக்குமா என்று பலர் கேட்கின்றனர். தன்னுடைய அமைப்பையும், உருவத்தையும் தேவைக்கு ஏற்ப, அடிக்கடி மாற்றிக் கொள்வது வைரசின் இயல்பு. இதே வைரஸ் குடும்பத்தில் இருந்து பரவிய, 'சார்ஸ்' வைரஸ் பாதித்த நோயாளிகளில், 60 சதவீதம் பேருக்கு கல்லீரல் பாதிப்பும் ஏற்பட்டது. தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரசின் மரபு அணுக்களை பார்த்தால், 80 சதவீதம் சார்ஸ் வைரசை ஒத்துள்ளது.
வேதிப்பொருட்கள்
முதலில் வைரஸ் பாதித்த சீனாவில், கொரோனா பாதித்தவர்களில், வைரஸ் தொற்று சரியான பின் எடுத்த கல்லீரல் பரிசோதனையில், 50 சதவீதம் பேருக்கு, மித மான அளவில் கல்லீரல் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.இதற்கு காரணம், கொரோனா வைரஸ், நேரடியாக கல்லீரலை பாதித்து இருக்கலாம் அல்லது கொரோனாவை அழிப்பதற்கு, கல்லீரல் சில வேதிப்பொருட்கள் சுரந்து, அதனால் கல்லீரல் செல்களில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்; காரணம் உறுதியாக தெரியவில்லை.ஏற்கனவே, ஹெபடைடிஸ் - பி வைரஸ் பாதிப்பு, கல்லீரல் செல்கள் அழியும் சிரோசிஸ் நிலை, கல்லீரலில் கொழுப்பு சேருவதால் வரும், கொழுப்பு கல்லீரல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதை மறுப்பதற்கில்லை.
அறிவுரை
அதேபோல, கல்லீரல் உட்பட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து, 'இம்யூனோ சப்பிரசென்ட்' மாத்திரை சாப்பிடுபவர்கள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்று, நீண்ட நாள் உடல் கோளாறுகள் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.தமிழக சுகாதாரத் துறை, மத்திய சுகாதாரத் துறை மற்றும் உலக சுகாதார மையம் சொல்லும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி, அவரவர் மருத்துவர் சொல்லும் அறிவுரைகளை கடைப்பிடிப்பது ஒன்று தான், தற்போதைக்கு பாதுகாப்பான வழி. டாக்டர் ஹரி குமார் ஆர்.நாயர், கல்லீரல் மருத்துவ ஆலோசகர்,சென்னை.9744247367