அறிகுறி இல்லாமலும் வைரஸ் தொற்று ஏற்படுமோ?
எல்லா வைரஸ் தொற்றிலும், வைரஸ் பரவும் விதம், அதன் பாதிப்பு இரண்டிலும், தீவிர தொற்று, அறிகுறிகளுடன் தொற்று, அறிகுறிகள் இல்லாமல் வைரஸ் தொற்று என்று பல நிலைகள் உள்ளன.சிலருக்கு வைரஸ் தொற்று உடலில் இருந்தாலும், அதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருக்கும்.இப்படிப்பட்டவர்களுக்கு அறிகுறி வெளியில் தெரிய ஆரம்பிப்பதற்கு, 24 - 48 மணி நேரத்திற்கு முன், அதிக அளவில் வைரஸ் வெளிப்படும். இதனால், அறிகுறி இல்லாமல், வைரஸ் பாதிப்பு இருப்பவர்களிடம் இருந்து, மற்றவர்களுக்கு வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளது.அறிகுறியே இல்லாமல் வைரஸ் தொற்று இருப்பவர்களில், 70 சதவீதம் பேருக்கு, தானாகவே தொற்று சரியாகி விடும். இதில் கவனமாகப் பார்க்க வேண்டியது, தொற்று ஏற்படும் அபாயம் இருந்தால், 14 நாட்கள் முதல், 21 நாட்கள் வரை, அவர்களை தனிமைப்படுத்தி வைக்கிறோம்; இந்த நாட்களில், எந்த அறிகுறியும் வெளியில் தெரியாத நிலையில், 'தொற்று இல்லை...' என்று முடிவு செய்கிறோம்.ஆனால், தொற்று இருந்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் அறிகுறி வெளியே தெரியாதவர்களுக்கு, அடுத்த சில நாட்கள் கழித்து, அறிகுறிகள் வெளிப்படலாம்.'ரேபிட்' பரிசோதனைஅதனால் தான் ஊரடங்கை அமல்படுத்தி, எல்லாருக்கும் பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும். நம் நாட்டைப் போல், 130 கோடி மக்கள் தொகையில், அனைவருக்கும் பரிசோதனை செய்வது சாத்தியமில்லை என்றாலும், யாருக்கெல்லாம் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து, அவர்களுக்கு பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும். அப்போது தான், எவ்வளவு பேருக்கு தொற்று உள்ளது என்று தெரியும்.கொரோனா அதிகம் பாதித்த வெளிநாடுகளில், மிகுதியான பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளில், அனைவருக்கும் சோதனை செய்கின்றனர்.நம் நாட்டிலும், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், அது போன்று செய்தால் மட்டுமே, உண்மையில் எவ்வளவு பேருக்கு தொற்று இருக்கிறது என்று தெரியும்.'ரேபிட்' பரிசோதனை செய்வதன் நோக்கமே அது தான். வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முதல் நிலையில் பணி செய்யும் அனைவருக்கும், கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்; அறிகுறிகள் தெரியும் வரை காத்திருக்கக் கூடாது.ரேபிட் பரிசோதனையில் பொதுவாக, எந்த வைரஸ் பாதிப்பிற்கு பரிசோதனை செய்கிறோமோ, அதற்கு எதிரான, 'ஆன்டிபாடீஸ்' எனப்படும் எதிர்ப்பணுக்களை வைத்திருப்பர்; சோதனை செய்ய வேண்டிய நபரின் உடலில் இருந்து எடுத்த ரத்த மாதிரியை, ரேபிட் பெட்டகத்தில் செலுத்தும் போது, இரண்டும் ஒரே மாதிரி இருந்தால், முடிவு நேர்மறையாக வரும்.இதை வைத்து, அந்த நபருக்கு தொற்று இருப்பதை அறிந்து கொள்ளலாம்.என்ன நடக்கும்?தொற்று வரும் வரை, யாரும் அதை பற்றிய முக்கியத்துவத்தை உணர்வதில்லை.நம்மை போல மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில், எல்லாரும் ஒரே மாதிரி விஷயத்தை புரிந்து கொள்வர் என்று நினைக்க முடியாது. சிலருக்கு சொன்னதும் புரியும்.தாங்களாகவே தெரிந்து நடப்பவர்கள், எவ்வளவு சொன்னாலும் புரியாமல் இருப்பவர்கள், தாமதமாக உணர்பவர்கள்... இப்படி எல்லா தரப்பினரும் இருக்கத் தான் செய்வர்.முடிந்த வரை அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.வைரஸ் தடுப்புதடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் பாதுகாப்பான வழி.எச்.ஐ.வி., வைரஸ் தொற்று வந்து, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; இதுவரையிலும் தடுப்பு மருந்து இல்லை. இது போன்று, ஒரு சில வைரஸ், உடம்பில் குறிப்பிட்ட இடத்தில் சென்று, வசதியாக இருந்து கொள்ளும்; அவ்வளவு சுலபமாக வெளியில் எடுக்கவே முடியாது.சில வகை வைரஸ், ரத்தத்திலேயே இருக்கும்; எளிதாக அழித்து விடலாம். கல்லீரலை தாக்குவது, 'ஹெபடைடிஸ்' வகை வைரஸ். பன்றிக் காய்ச்சலை உண்டாக்கும், 'எச் 1 என் 1' வைரஸ், சுவாச மண்டலத்தின மேல் பகுதியை பாதிக்கும்.இப்போதைக்கு கொரோனா வைரஸ் சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இதயத்தை பாதிக்கும் என்பது மட்டும் தெரியும். இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நடக்கிறது. முழுமையாக தெரிய, சில காலம் ஆகலாம்.சுய சுகாதாரம்இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது, சுய சுகாதாரத்தை கடைப்பிடித்து, சமூக விலகலை முழுமையாகப் பின்பற்றுவது மட்டுமே.எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் இளம் வயதினருக்கு, வைரஸ் பாதிப்பு இருந்தாலும், பல நேரங்களில் தானாகவே சரியாகி விடும். அவர்களிடம் இருந்து, வயதானவர்கள், குழந்தைகள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்று, நீண்ட நாட்களாகவே உடல் கோளாறுகள் இருப்பவர்களுக்கு, தொற்றால் பாதிப்பு மோசமாக இருக்கும். சளி, இருமல் இருந்தால், தாங்களாகவே பொறுப்புடன் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். சாதாரண சளி, இருமலையும் கொரோனா போன்று நினைத்து, கவனமாக இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது.டாக்டர் வி.சீனிவாசன்,பொதுநல மருத்துவர்,குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை 044 - 4477 7000