உள்ளூர் செய்திகள்

அர்த்தமில்லாத சிரிப்பு... அர்த்தமில்லாத அழுகை! - ஆட்டிசத்தின் அபாய அடையாளம் இவை

கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உயர்பதவியில் இருப்பவர் தீனதயாளன். அவருடைய மனைவி பிரபா; கல்லுாரி பேராசிரியை. இத்தம்பதியருக்கு பிறந்த அழகான, கொழுகொழுவென்ற ஆண் குழந்தையை, பெற்றோர், உறவினர்கள் கொஞ்சி தீர்த்தனர்.குழந்தை வழக்கமான வளர்ச்சியோடு இருந்தாலும், ஏதே ஒரு குறைபாடு உள்ளதாக, தீனதயாளன் உணர்ந்தார்.குழந்தையின் செயல்பாடுகளை தம்பதியர் உற்று நோக்கியபோது, இயல்பாக அந்தந்த வயதுகளில், இருக்க வேண்டிய, இயல்பான அறிவுப்பூர்வ செயல்களில் இருந்து, மாறுபட்டு இருப்பதாக உணர்ந்தனர்.கோவையில் உள்ள, 'பிரெய்ன் அண்ட் மைண்ட் கிளினிக்' மனநல மருத்துவர் டாக்டர் ஹேமலதா ராஜ்மோகனை அணுகினர். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார் அவர்.இது போன்ற குழந்தைகளுக்கான தீர்வு என்ன என்பது குறித்து, டாக்டர் ஹேமலதா ராஜ்மோகன் கூறியதாவது:இது போன்ற குழந்தைகளை பெற்றோர்கள், '3 வயதாகியும், தங்கள் குழந்தை இன்னும் சரியாக பேசவில்லை. பெயர் சொல்லி அழைத்தால், திரும்பி பார்ப்பதில்லை. 'டிவி'யில் பாட்டு, விளம்பரம் வந்தால், ஓடி விடுகிறான். காது கேட்கிறதா, இல்லையா என்பது தெரியவில்லை. மற்ற குழந்தைகளைப் போல புரிந்துகொண்டு, திரும்ப பேசுவதில்லை.ஏதாவது தேவை என்றால், கையைப் பிடித்து, சேலை நுனியை பிடித்துக் கொண்டு, தனக்கு வேண்டிய பொருளை அடையாளம் காட்டுவது வழக்கமாக உள்ளது' என, அழைத்து வருவது வழக்கம்.

ஆட்டிப்படைக்கும் ஆட்டிசம்

குழந்தைகளிடம் தெரியும், இக்குறைபாடுகளை ஆட்டிசம் (AUTISM) என்று கூறுவோம். இது, குழந்தை மூளை வளர்ச்சியில் ஏற்படும் ஒருவித குறைபாடு.அறிகுறிகள், குழந்தை பிறந்ததில் இருந்தோ, சில மாதங்களுக்கு பிறகோ, தெரியவரும். பெரும்பாலான குழந்தைகளுக்கு இரண்டரை முதல், 3 வயதுக்கு மேல்தான், மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. குழந்தைகள் ஆட்டிசத்தால், பாதிக்கப்பட்டவர்களா என அறிய, முதல் இரண்டு வயதுக்குள் குழந்தையின் வளர்ச்சியை, கவனமாக ஆராய வேண்டும்.

எதனால் வருகிறது...

ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும் ஏன் ஆட்டிசம் ஏற்படுகிறது என்பதற்கு, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்கள், எதுவும் கண்டறியப்படவில்லை. பத்தாயிரம் குழந்தைகளில் இரண்டு முதல், 5 குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்படலாம்.குடும்பத்தில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டிருந்தால், அடுத்த குழந்தைக்கு ஐந்து முதல், 25 சதவீதம் வரை 'ரிஸ்க்' உள்ளது.

என்னதான் தீர்வு

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை, எவ்வளவு விரைவாக அடையாளம் கண்டு, சிகிச்சை மேற்கொள்கிறோம் என்பதை பொறுத்தே, அக்குழந்தையை சாதாரண நிலைக்கு கொண்டு வர முடியும். இரண்டு வயதுக்குள், ஒரு குழந்தை அடையாளம் காணப்பட்டால், அவர்களுக்கு பேச்சு பயிற்சி (SPEECH THERAPY), அன்றாட வாழ்க்கை முறை பயிற்சி (OCCUPATIONAL THERAPY), உணர்வு ஒருங்கிணபை்பு பயிற்சி (SENSORY INTEGRATION THERAPY) ஆகியவற்றை, பிசியோதெரபிஸ்ட், குழந்தைகள் மனநல மருத்துவர், பெற்றோர் ஆகியோர் ஒருங்கிணைந்து அளித்தால், ஆட்டிசம் குழந்தைகளுக்கு நல்லது.இவ்வாறு, டாக்டர் ஹேமலதா ராஜ்மோகன் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் எவ்வாறு கண்டறிவது

* மூன்று மாதத்தில் இருந்து, 6 மாதத்துக்குட்பட்ட குழந்தைகள், முகம் பார்த்து சிரிப்பதில்லை. அம்மா, பாட்டி பேச்சு சத்தத்துக்கு திரும்புவதில்லை. எட்டு முதல் ஒன்றரை வயது வரையுள்ள குழந்தைகள், புதிய மனிதர்களை பார்த்தால் அழுவதில்லை.* புதிய இடம், புதிய மனிதர்கள் என்ற அச்ச உணர்வு இல்லாமல் இருப்பது, சில குழந்தைகளுக்கு துாக்குவது, கொஞ்சுவது, முத்தம் கொடுப்பது பிடிக்காமல் போகலாம். இரண்டு முதல், 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பேச்சு வராமல் இருக்கலாம்.* முகம் பார்த்து பேசாமல் எங்கோ பார்த்து பேசுவது, பெயர் சொல்லி அழைத்தால், திரும்பாமல் இருப்பது, மொழி கற்றல் குறைபாடு, பேசுவதில் மற்றும் புரிந்து கொள்வதில் குறைபாடு, தனிமையை விரும்புவது, தன் வயது ஒத்த குழந்தைகளை அடித்து விட்டு வந்து விடுவது, கடிப்பது, தலையை இடித்துக் கொள்வது, கத்துவது, கூச்சலிடுவது, தானாக சிரிப்பது, அழுவது, கை தட்டுவது, ஒரே இடத்தில் சுற்றுவது, உறவுகளை பிரித்து புரிவதில் சிரமம் (POOR FACE RECOGNITION), வலி, சூடு, பயம், குளிர், வெயில், அழுவது, சிரிப்பது, சந்தோஷம், கவலை என பிரித்து, அறிவதில் குழப்பம் காணப்படும்.டாக்டர் ஹேமலதா ராஜ்மோகன்,மனநல மருத்துவர்,98424 30464


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !