உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / இது உங்கள் தீபாவளிக்கான முதல் செலவாக இருக்கட்டும்

இது உங்கள் தீபாவளிக்கான முதல் செலவாக இருக்கட்டும்

அவர்கள் வசிப்பது ஒரு சிறிய வாடகை வீடுதான். ஆனால், அந்த வீட்டுக்குள்ளிருந்து மலரும் எண்ணங்களும் செயல்களும் எல்லைகளற்றவை, அசாதாரணமானவை!சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் விஜயகுமார். இவரது மனைவி தேவிசித்ரா. இயற்கையிலேயே இரக்க குணமும் தாராள மனமும் கொண்ட இந்தத் தம்பதி, ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரங்களில் பல மனிதர்கள் பசியால் சுருண்டு கிடந்ததைக் கண்டனர். அதில் பலர், பசியைப் போக்க பிறரிடம் பிச்சை கேட்கக்கூட எழுந்திருக்க முடியாத மாற்றுத்திறனாளிகள்.அவர்கள் அனைவரின் ஒரே ஏக்கம்... 'ஒருவேளை நல்உணவு கிடைக்காதா?' என்பதுதான்.நிலைமையை உணர்ந்த அந்தத் தம்பதி, உடனே வீட்டிற்கு விரைந்தனர். தரமான முறையில் சுடச்சுடச் சாம்பார் சாதம் சமைத்து, தனித்தனிப் பார்சல்களாகக் கட்டி எடுத்துச் சென்று அந்தச் தெருவோர மனிதர்களுக்குக் கொடுத்தனர். பசியால் வாடியவர்களின் முகத்தில் அப்போது பூத்த அந்தச் சந்தோஷமும் நன்றியுணர்வும்தான், இந்தத் தம்பதியின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது.அடுத்த ஞாயிறும் அதே அன்பு தொடர்ந்தது; பார்சல்களின் எண்ணிக்கையும் கூடியது. 'நம்மால் முடிந்தவரை சில ஞாயிற்றுக்கிழமைகளில் உணவளிப்போம்' எனத் தொடங்கிய இந்த அறப்பணி, கடந்த வாரத்தோடு வெற்றிகரமாக 331 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அதாவது, கடந்த ஏழாண்டுகளாக ஒரு வாரம்கூட இடைவெளியின்றி இந்த அன்புச் சேவை தொடர்கிறது!ஞாயிற்றுக்கிழமை விடிந்துவிட்டால் போதும்... அதிகாலை எழுந்து அடுப்பு பற்ற வைப்பது முதல், சமைத்த உணவைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது வரை இருவருமே முழு அர்ப்பணிப்போடு செயல்படுகின்றனர். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குச் சமைப்பது போல், மிகத் தூய்மையாகவும் சுவையாகவும் சமைக்கின்றனர். சாதத்துடன் சுவையான கூட்டும் பொரியலும் சேர்த்தே தருவதால், அந்தத் தெருவோர மனிதர்கள் மத்தியில் தேவிசித்ராவுக்கு 'கூட்டுப் பொரியல்காரம்மா' என்றே செல்லப் பெயர் உண்டு!ஆரம்பத்தில் 10, 20 பேருக்குக் கொடுத்தவர்கள், இன்று 110-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி வருகின்றனர். இன்னும் பலருக்கு அளிக்க வேண்டும், வாரத்தில் ஒருநாள் என்பதை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை இதயமெங்கும் நிறைந்திருந்தாலும், இவர்களது தற்போதைய வருமானம் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.வழங்கும் அந்த ஒருவேளை உணவை மிகப்பரிவாகவும் புனிதமாகவும் கருதுகின்றனர். உணவு கொடுக்கும் போது தேவிசித்ரா காலணியைக் கழற்றிவிட்டுப் பணிவோடு தருவார்; விஜயகுமாரோ, அவர்களைத் தன் சொந்த உறவாகக் கருதி அன்போடு நலம் விசாரித்து ஆறுதல் கூறுவார். பல இடங்களுக்குச் சென்று விரைவாக உணவளிக்க வேண்டும் என்பதால், தலைக்கவசத்தைக் (Helmet) கழற்றி மாட்ட நேரமின்றி ஹெல்மெட்டுடனேயே உணவு விநியோகம் செய்வர். இன்று அதுவே இவர்களின் அன்பான அடையாளமாகவும் மாறிவிட்டது.'உங்கள் முகத்தைப் பார்க்காவிட்டாலும் என்ன... உங்கள் அகத்தைப் பார்க்கிறோம்! நீடூழி வாழ்க. நீங்கள் தரும் இந்த ஒருவேளை உணவு தரும் உற்சாகமும் தெம்பும் எங்களுக்கு ஒரு வாரம் வரை தாங்கும்' என்று அந்த முதியவர்கள் கண் கலங்கி ஆசீர்வதிக்கும் வார்த்தைகளே இவர்களின் மிகப்பெரிய சந்தோஷம்கூடுதலாகச் சிறு வருமானம் கிடைத்தாலும், அதையும் இந்தத் தெருவோர உறவுகளுக்காகவே செலவிடுகின்றனர். குளிர்காலத்தில் போர்வைகள், பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுகள் என வழங்கி மகிழ்விக்கின்றனர். கடந்த விநாயகர் சதுர்த்திக்குக் கொழுக்கட்டையும் சுண்டலும், ஆயுத பூஜைக்கு ஜாங்ரி, வடையுடன் பொரிகடலை பொட்டலமும் வழங்கி அவர்களின் முகத்தில் புன்னகையை கூடுதலாக பூக்க வைத்தனர்.இத்தனை ஆண்டுகள் சேவை செய்தும், இதுவரை இவர்கள் யாரிடமும் கரமேந்தி உதவி கேட்டதில்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால் ரிலாக்ஸாக வெளியில் செல்லும் உலகிற்கு மத்தியில், 'இதுதான் எங்களுக்கு ரிலாக்ஸ்!' என்று வாழ்கின்றனர். எவ்வளவு நெருங்கிய உறவுகள் அல்லது நண்பர்களின் விசேஷங்களாக இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை என்றால் மன்னிப்புக் கேட்டுத் தவிர்த்துவிடுவர்.இவ்வாறிருக்க, வரவிருக்கும் இந்தத் தீபாவளிப் பண்டிகையை அந்த ஆதரவற்ற முதியவர்களுடன் இணைந்து சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக உணவு வழங்கும் முதியவர்களுக்குப் புத்தாடைகளும் (வேட்டி, சேலை, சட்டை, லுங்கி, துண்டு) இனிப்புகளும் வழங்கி, பண்டிகை மகிழ்ச்சியை அவர்களுக்கும் கொடுக்க விரும்புகின்றனர்.பட்ஜெட் சற்றே கூடுதல் என்பதால், முதன்முறையாக நல்லுள்ளங்களின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.இந்தத் தீபாவளிக்கு உங்களால் முடிந்த தொகையை இவர்களுக்கு முதல் செலவாக வழங்கி, அந்த ஏழை எளிய மனிதர்களின் முகத்தில் புன்னகையைச் சேர்ப்போம்!உதவி செய்ய விரும்புவோருக்கு:பெயர்: V. DEVICHITRAவங்கி கணக்கு எண்: 1754155000047794IFSC Code: KVBL0001754வங்கி: Karur Vysya Bank (Padi Branch, Chennai)GPay செய்வதற்கும் பேசுவதற்குமான எண்கள்: 9841605054 | 9551371908-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை