உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / படியேறி வந்த பக்தி!

படியேறி வந்த பக்தி!

திருமலை திருப்பதி ஏழுமலையானைத் தரிசிப்பதற்காக நாள்தோறும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். திருமலைக்குச் செல்ல அரசுப் பேருந்துகளும், சொந்த வாகனங்களும் தாராளமாக இருந்தாலும், ஆதிகாலம் தொட்டு மலையடிவாரத்தில் இருந்து நடந்து சென்று பெருமாளைத் தரிசிப்பதையேப் பெரும் பேறாகக் கருதுபவர்களும் உண்டு.சுமார் 9 கிலோமீட்டர் நீளமும், 3550 படிக்கட்டுகளும் கொண்ட 'அலிபிரி' மலைப்பாதை வழியே 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற பக்தி முழக்கத்துடன் செல்வோர் எண்ணிக்கை இன்றும் மிக அதிகம். இந்த ஆன்மிகப் பயணத்தில் கபில தீர்த்தம், காலிகோபுரம், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் செங்குத்தான 'மோகல்ல பர்வதம்' எனப்படும் முழங்கால் முறிச்சான் மலை ஆகிய முக்கிய இடங்களைக் கடந்து செல்ல வேண்டும்.நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவர்கள் சுமார் 4 மணி நேரத்திலும், வயதானவர்கள் 6 மணி நேரம் வரையிலும் எடுத்துக் கொண்டு இந்த மலையை ஏறி முடிப்பார்கள். எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும், ஏழுமலையானை இந்தப் பாதை வழியாக நடந்து சென்றுதான் தரிசிப்பேன் என்ற உறுதியான கொள்கை கொண்டவர்கள் அன்றும் இன்றும் பலர் உள்ளனர்.அந்த வரிசையில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி காலையில் அலிபிரி மலைப்பாதையில் இளைஞர்களுக்கு நிகராக, சுறுசுறுப்புடன் ஒரு மூதாட்டி மலையேறிக் கொண்டிருந்தார். அவரது தள்ளாத வயதையும், தளராத நடையையும் கண்ட சக பக்தர்கள் வியந்து, அவருடன் வந்த பேரனிடம் பாட்டியைப் பற்றி விசாரித்தனர்.அப்போதுதான் அந்த ஆச்சரியத் தகவல் வெளியானது! மூதாட்டியின் பெயர் நவநீதம்மாள், வயது 118. சென்னையைச் சேர்ந்த இவர், திருப்பதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தபோது பெருமாளைத் தரிசிக்க விரும்பியுள்ளார். 'வயதான காலத்தில் எதற்குச் சிரமம், பேருந்திலேயே போகலாம்' என்று குடும்பத்தினர் தடுத்தபோது, 'அதெல்லாம் வேண்டாம், நான் நடந்தேதான் போவேன்... என்னை அந்தப் பெருமாள் பார்த்துக் கொள்வார்' என்று பிடிவாதமாகக் கூறிவிட்டுப் பேரனுடன் கிளம்பியுள்ளார்.118 வயது பாட்டி படியேறிச் செல்லும் இந்த அரியக் காட்சியைக் கண்ட பக்தர்கள் நெகிழ்ந்துபோய், தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி, ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த வைரல் வீடியோ ஆந்திர மாநில முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடுவின் பார்வைக்கும் சென்றது. நெகிழ்ந்துபோன அவர், உடனடியாக அந்த மூதாட்டியைக் கண்டறிந்து விஐபி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆனால், கோவில் அதிகாரிகள் அவரைத் தேடி மலைப்பாதைக்கு வருவதற்குள்ளாகவே, பாட்டி தன் மன உறுதியால் மலையேறி முடித்து, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பொதுமக்களுக்கான தர்ம தரிசன வரிசையில் அமைதியாகக் காத்திருந்தார்!அங்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள், நவநீதம்மாளையும் அவரது பேரனையும் கௌரவமாக அழைத்துச் சென்று 'விஐபி பிரேக் தரிசனம்' வழித்தடத்தில் ஏழுமலையானைக் கண் குளிரத் தரிசிக்க வைத்தனர்.தரிசனத்திற்குப் பிறகு, நாட்டின் பிரதமர், ஜனாதிபதி போன்ற முக்கியப் பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் உச்சக்கட்ட மரியாதையைப் போல, ரங்கநாயகுல மண்டபத்தில் வேத அறிஞர்கள் நவநீதம்மாளுக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆசீர்வாதங்களை வழங்கினர். தொடர்ந்து, டிடிடி முதன்மை செயல் அதிகாரி பாட்டிக்குப் பட்டு வஸ்திரமும், ஸ்ரீவாரின் புனித தீர்த்த பிரசாதங்களையும் வழங்கி கௌரவித்தார்.ஆலயம் விட்டு வெளியே வந்த பாட்டியிடம் பத்திரிகையாளர்கள் அவரது இந்த இமாலய சாதனை மற்றும் ஆன்மிக அனுபவம் குறித்துக் கேட்டபோது, பேச வார்த்தைகளின்றி, கண்களில் பக்திப் பெருக்குடன் கைகளைக் கூப்பி, ஒரு நெகிழ்ச்சியான புன்னகையை மட்டுமே தனது பதிலாகத் தந்து நகர்ந்தார் அந்த பக்திப் பாட்டி!-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S. Venugopal
ஜூலை 09, 2026 12:05

கடவுள் நம்பிக்கைக்கு ஒப்பிடமுடியாத எடுத்துக்காட்டு. இதுபோல 100 வயது கடந்த பல வயதான மூதாட்டிகள் ஸ்ரீ ஏழுமலையானை தரிசிக்க விரும்புகிறார்கள். இதற்கு தேவஸ்தானமே ஒரு திட்டம் கொண்டு வந்து செயல் படுத்தினால் நன்று. அவர்களது போக்கு வரத்து செலவீனஙகளை ஏற்றுக்கொள்ள பல உபயதாரர்கள் முன்வருவார்கள்.


Ramaguru
ஜூலை 09, 2026 10:57

அருமை அருமையோ அருமை.....கோவிந்தா கோவிந்தா கோவிந்தா.


முக்கிய வீடியோ