UPDATED : ஆக 01, 2025 03:17 PM | ADDED : ஆக 01, 2025 03:14 PM
தற்போது பெங்களூரில் இருப்பவர் ஆனந்த்இவர் பணி நிமித்தம் சென்னையில் இருந்த போது நாய் ஒன்று அடிபட்டு கிடப்பதை பார்த்து இருக்கிறார்.இதை எடுத்துச் சென்று கால்நடை மருத்துவமனையில் காட்டியபோது, நாயின் முதுகெலும்பு உடைந்து இருக்கிறது, பிழைப்பதும் பிழைத்தாலும் நடப்பது சிரமம் என்று சொல்லிவிட்டனர், சரி அது வாழும் வரை வாழட்டும் என்று முடிவு செய்து இவரும் இவரது நண்பர் முரளியும் சேர்ந்து அந்த நாயை ரெமி என்ற பெயரிட்டு வளர்த்தனர்.நாய் வளர்ப்பதில்,பராமரிப்பதில் அதற்கு முன் முன்அனபவம் இல்லை என்பதால் அது பற்றி ஆன் லைனிலும் மற்றவர்களிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்,ரெமி நாளாக நாளாக தேறி வந்தாலும் அதனால் நடக்கமுடியவில்லை, அது நடக்கமுடியவில்லை என்பதால் அதைவிட எங்களுக்கே மனது கஷ்டமாக இருந்தது, இதற்காகவே விசேஷமாக ஒரு வீல் சேர் தயார் செய்து மாட்டியதும் ரெமி உற்சாகமாக நடமாடியது.ரெமியின் சந்தோஷத்தை பார்த்த போது அது போல காலில் காயமடைந்து நடக்கமுடியாத நாய்களை எடுத்து வளர்ப்பது என்று முடிவு செய்தோம் அதற்கேற்ப சில நாய்கள் எங்களிடம் வந்து சேர்ந்தன.இதற்காகவே ரோர் (ரெமிஸ் ஆர்கனைசேஷன் பார் அனிமல் ரிேஹபிலிடேஷன்)என்ற அமைப்பை 2018 ல் கிருஷ்ணகிரியில் துவக்கி பாதிக்கப்பட்ட நாய்களை வளர்த்தோம், நாய்களின் எண்ணிக்கை அதிகமானதால் பராமரிக்க ஒருவரை நியமித்தோம்.நாட்கள் செல்லச் செல்ல நாய்களின் எண்ணிக்கை அதிகமாகியது, இடம் போதவில்லை ஆகவே பெங்களூரு தும்கூரு சாலையில் சொந்தமாக இடம் வாங்கி விரிவாக்கம் செய்தோம்.இந்த இடத்தில் பல்வேறு சமூக அமைப்புகளின் உதவியுடனும், நல்லவர்கள் தரும் நன்கொடைகளாலும் ஊனமுற்ற நாய்களின் மறுவாழ்வு மையமாக ரோர் அமைப்பு பல்வேறு வசதிகளுடன் விரிவு செய்யப்பட்டு தற்போது சிறப்பாக நடந்துவருகிறது.இப்போது நான்கு பேர் முழு நேர ஊழியர்களாக உள்ளனர்,நுாற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் மீட்கப்பட்டு குணமடைந்து உள்ளது,ஊனமுற்ற நாய்கள் அதற்கான உபகரணங்களுடன் இயங்கிவருகிறது,நாய்களுக்கும் நம்மைப் போன்றே மனஅழுத்தம் உள்ளீட்ட பிரச்னைகள் உண்டு அவற்றில் இருந்து அதை மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறோம் என்று கூறி முடித்தார் ஆனந்த்.நல்ல நிலையில் இருக்கும் நாய்களை பாரமரிப்பதே சிரமமான சூழ்நிலையில் உடலால் மனதால் காயம்பட்ட நாய்களை பராமரிக்கும் ரோர் அமைப்பு உள்ளபடியே வரவேற்க வேண்டிய அமைப்புதான் இதுபற்றி கூடுதல் விவரம் அறிந்து கொள்ள www.roarindia.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.-எல்.முருகராஜ்