UPDATED : பிப் 13, 2026 06:10 PM | ADDED : பிப் 13, 2026 06:08 PM
பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம்.இந்த தினத்தை முன்னிலைப்படுத்தி காற்றில் காதல் பரவுகிறதோ இல்லையோ, சந்தையில் சலுகைகள் அலைமோதத் தொடங்கிவிடுகின்றன. காதலர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தத் திட்டமிடுகிறார்களோ இல்லையோ, அவர்களைக் கவர்ந்து 'கல்லா' கட்ட நகைக்கடைகள் முதல் பூக்கடைகள் வரை அனைத்து வணிக நிறுவனங்களும் தயாராகிவிடுகின்றன.காதலர் தினத்தை முன்னிட்டு வைர மற்றும் தங்க நகைக்கடைகள் புதுப்புது வடிவங்களில் நகைகளை அறிமுகம் செய்கின்றன. 'ஹார்ட் இன்' வடிவப் பதக்கங்கள், மோதிரங்கள் என இளைய தலைமுறையைக் கவரும் வகையில் விளம்பரங்கள் மின்னுகின்றன. 'உங்கள் காதலை வைரத்தைப் போல உறுதியாக்குங்கள்' போன்ற கவர்ச்சிகரமான வாசகங்கள் மூலம், சாமானிய மனிதனின் பட்ஜெட்டையும் தாண்டி நகைகளை வாங்கத் தூண்டும் வணிக உத்திகள் சூடுபிடிக்கின்றன.காதலர் தினத்தின் அடையாளம் சிவப்பு ரோஜாக்கள். சாதாரண நாட்களில் 10 அல்லது 20 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு ரோஜா மலர், இப்போதே பல மடங்கு விலையேற்றப்பட்டுவிட்டது. இருப்பினும், காதலைச் சொல்லும் அவசரத்தில் விலையைப் பார்க்காமல் பூக்களை வாங்கும் காதலர்களால், பூ வியாபாரிகளுக்கு 'பொற்காலமாக' அமைகிறது.நகை, பூக்கள் மட்டுமன்றி பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகளிலும் கூட்டத்திற்குப் பஞ்சமிருக்காது. காதலர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாழ்த்து அட்டைகள், மென்மையான பொம்மைகள் , மற்றும் ஜோடிகளுக்கான பிரத்யேக இரவு உணவுகள் என உணவகங்கள் முதல் திரையரங்குகள் வரை அனைத்தும் காதலர் தினத்தை ஒரு பெரும் வணிகத் திருவிழாவாகவே பார்க்கின்றன.சுருக்கமாகச் சொன்னால்...உணர்வுகளை விட இங்கே உபகரணங்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. காதலர்களின் கொண்டாட்டத்தை விட, அவர்களின் உணர்ச்சிகளை முதலீடாக வைத்துத் தொழில் நிறுவனங்கள் நடத்தும் இந்தப் போட்டி, பிப்ரவரி மாதத்தின் ஒரு முக்கிய வணிக அங்கமாக மாறிவிட்டது. காதல் உள்ளங்களில் மலர்கிறதோ இல்லையோ, சந்தையில் பணமாகப் பொழிகிறது என்பது மட்டும் நிதர்சனம்.---எல்.முருகராஜ்