அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி என்பது, இன்று காலத்தின் கட்டாயம். இதில் ஒரு விஷயம் என்னவென்றால், நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியின் ஊழல்களை, தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலை, நடை பயணம் மேற்கொண்ட போது, ஆதாரங்கள் மற்றும் புள்ளி விபரங்களுடன் மக்களுக்கு எடுத்துச் சொல்லி செல்வாக்கு பெற்றார். ஊழல் செய்வதில் தி.மு.க.,விற்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை அ.தி.மு.க.,வினர். ஆனால், அ.தி.மு.க.,வினர் சிலர் ஊழல் வழக்கில் சிறை சென்றனர். தி.மு.க.,வினர் யாரும் சென்றதில்லை. இன்றைய டாஸ்மாக் ஊழல், தி.மு.க., ஆட்சியில் மட்டுமா நடந்தது? அ.தி.மு.க., ஆட்சியில் நடக்கவில்லையா என்ன? கடந்த ஆட்சியில் நடந்த மதுபான ஊழல் குறித்து தி.மு.க., பேசவில்லை; காரணம், மதுபான ஆலைகளை நடத்துவோர் பலர் தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகள். தி.மு.க., மீது பா.ஜ.,வின் ஊழல் குற்றச்சாட்டு பற்றி, அ.தி.மு.க.,வினரும், பழனிசாமியும் ஒரு போதும் பேசியது இல்லை. அதற்கு காரணம், காமராஜர் கூறியபடி, இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வின் அரசியல் புரோக்கர்கள், சாராயம், அரசு கான்ட்ராக்ட்களை பெற்று கோடிகளை குவித்தவர்கள். இரண்டு கட்சிக்குமே பலமும், பலவீனமும் இவர்களே. நிதி கொடுப்பவர்களும் இவர்களே. எம்.ஜி.ஆரின் வசீகரம்
அண்ணாமலை தமிழக தலைவராக இருந்த போது, மாநிலத்தில் பா.ஜ., அசுர வளர்ச்சி அடைவதை பொறுக்காத உட்கட்சி சகுனிகள், அவர் தனிப்பெரும் தலைவராக உருவாவதை பொறுக்காதவர்கள், 'அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி சேர, அண்ணாமலை சரிவர மாட்டார்' என்று மேலிடத்தில் புகார்கள் சொல்லி, அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவைத்து, நயினார் நாகேந்திரனை புதிய தலைவராக்கி, மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அண்ணாமலை தலைமையில் உற்சாகமாக செயல்பட்ட இளம் தலைமுறை பா.ஜ., தொண்டர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள், வெறுத்துப் போய் கட்சியை விட்டு விலகி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து வருகின்றனர். சமீபத்தில் போலீஸ் காவல் மரணங்களுக்கு நீதி கேட்டு, விஜயின் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவர்களில் அதிகம் பேர், 15 முதல், 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள். திராவிட கட்சிகளைப் போல, காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டம் அல்ல. எம்.ஜி.ஆரின் வசீகர முகத்தாலும், ஜெயலலிதாவின் கம்பீர தோற்றத்தாலும் ஈர்க்கப்பட்ட மக்கள், அவர்களுக்கு அமோக ஆதரவு தந்தனர். முதல்வர் பதவியிலும் அமர வைத்தனர். தற்போது, இவர்கள் இருவரை போன்ற மக்களை கவரக்கூடிய, பேசும் திறமையுள்ள தலைவர்கள் யாரும் அ.தி.மு.க.,வில் இல்லை. அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வின் அரை நுாற்றாண்டு ஆட்சி காலத்தில், பல நல திட்டங்களின் பலனை அடைந்தவர்கள், அக்கட்சியைச் சேர்ந்தவர்களே. கடந்த 50 ஆண்டு தமிழக வரலாற்றை புரட்டிப் பார்க்கும் போது, அ.தி.மு.க.,வினர் நம்பிக்கை, நாணயம் இல்லாததை நன்கு அறியலாம். முதலில், அ.தி.மு.க.,வை ஆரம்பித்த எம்.ஜி.ஆர்., 1977 லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால், அவசர நிலையை அமல்படுத்தியதால், அந்தத் தேர்தலில், இந்திரா காந்தி தோல்வியுற்றார். அதனால், மத்தியில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த, ஜனதா கூட்டணி அரசுக்கு எம்.ஜி.ஆர்., ஆதரவு தந்தார். பின் மொரார்ஜி பதவி விலகி, சரண்சிங் பிரதமரான போது, அவரையும் அ.தி.மு.க., ஆதரித்து மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க., இடம்பெற்றது. மத்தியில் ஜனதா கட்சி தலைமையிலான அரசு கவிழ்ந்த உடன், 1980 லோக் சபா தேர்தலில், தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, இந்திரா பிரதமரானார். இதனால், எம்.ஜி.ஆர்., தன் ஆட்சியை கவிழ்த்த இந்திராவின் நட்புக்காக பல அரசியல் புரோக்கர்களின் உதவியை நாடி, திரும்பவும் இந்திராவின் நட்பை பெற்றார். யார் சொல்வது பொய்
கடந்த, 1984ல் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட பின், ராஜிவ் தலைமையிலான காங்கிரசுடனும் அ.தி.மு.க., உறவு தொடர்ந்தது. இதன்பின், 1998ல், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்து, வாஜ்பாய் தலைமையிலான அரசில், அ.தி.மு.க., இடம் பெற்றது. அடுத்த, 13 மாதங்களில் வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை அ.தி.மு.க., வாபஸ் பெற்றதால், அவரது ஆட்சி கவிழ்ந்து, 1999ல் லோக்சபா தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், பா.ஜ., உடன் தி.மு.க., கைகோர்த்து வெற்றி பெற்று, வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். மத்திய அமைச்சரவையில், தி.மு.க.,வும் இடம் பெற்றது. அப்போது, பா.ஜ.,வை, 'காவி, சங்கி' என்று தி.மு.க.,வினர்அழைத்ததில்லை. இதன்பின், 2004 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை விட்டு விலகி, காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி சேர்ந்தது. தேர்தலில் வெற்றி பெற்று மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசிலும் இடம் பெற்றது. மன்மோகன் ஆட்சியில், அறிவாலயத்தில் வருமான வரி சோதனை நடந்த போதும், கனிமொழியை, '2ஜி' ஊழல் வழக்கில் கைது செய்து திகார் சிறையில் அடைத்த போதும் கூட, காங்கிரஸ் உடனான கூட்டணியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி தொடர்ந்தார். இதன்பின், 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. ஜெயலலிதா இறக்கும் வரை, பா.ஜ., உடனோ, காங்கிரஸ் உடனோ அவர் கூட்டணி அமைக்கவில்லை. ஆனால், 2019ல் முதல்வராக இருந்த பழனிசாமி பா.ஜ., உடன் கூட்டணி அமைத்தார். இந்த தேர்தலில் ஒரு இடத்தை மட்டுமே, அ.தி.மு.க., பிடித்தது. ஆனால், 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிந்தது. தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். அ.தி.மு.க., - தி.மு.க., பொருளாதார கட்டமைப்பில் வலிமையாக உள்ளன. அத்துடன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க இரு கட்சிகளுமே ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை. இப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்கிறார். பழனிசாமியோ, 'தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று தான் அமித் ஷா சொன்னார்; கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை' என, மறுப்பு தெரிவிக்கிறார். இதிலிருந்தே யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பதை அறியலாம். நம்பிக்கையும், நாணயமான உறவும் இல்லாத, தேசிய நலன், தமிழக மக்களின் எதிர்கால முன்னேற்றம் என்ற சிந்தனை இல்லாத அ.தி.மு.க., உடன் பா.ஜ., அமைத்துள்ள கூட்டணியை பொருந்தாக் கூட்டணி என்றே சொல்லலாம்.பேராசிரியர் டாக்டர் சு.அர்த்தநாரி