உள்ளூர் செய்திகள்

கூகுளுக்கு, டாட்டா சொல்லும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம்,'கூகுள் சர்ச்' தேடுபொறிக்கு மாற்றாக, புதிய தேடுபொறியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.கடந்த சில காலமாகவே, ஆப்பிள் இத்தகைய முயற்சியில் இறங்கி உள்ளதாக, அவ்வப்போது செய்திகள்வந்து கொண்டு தான் இருக்கின்றன.இப்போது வந்துள்ள இயங்குதளமான, 'ஐ.ஓ.எஸ்., 14' மற்றும் 'ஐபேடு ஓ.எஸ்., 14' ஆகியவற்றில், உபயோகிப்பாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க, கூகுள் தேவைப்படுவதில்லை. இது, கூகுளை சார்ந்திருப்பதில் இருந்து, ஆப்பிள் வெளியேறுவதற்கான அடையாளமே என்கிறார்கள்.மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில், ஆப்பிள் நிறுவனம், புதிதாக சர்ச் என்ஜினியர்களை நியமிக்க துவங்கியதும் ஓர் அறிகுறியே. இவை ஒருபுறமிருக்க, ஐ.ஓ.எஸ்., சாதனங்களில், கூகுள் தேடுபொறியை, 'டிபால்ட்'டாக வைத்திருப்பதற்கு, ஆப்பிள் நிறுவனம், கூகுளிடமிருந்து ஆண்டுக்கு, 60-88 ஆயிரம் கோடி ரூபாயை கட்டணமாக வாங்குகிறது.இந்நிலையில், இணைய தேடலில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, கூகுள் நிறுவனம், கோடிக்கணக்கான டாலரை பிற நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கின் காரணமாக, ஆப்பிளுக்கு, கூகுளிடமிருந்து வருமானம் கிடைக்காமல் போகலாம். ஆனால், அதே சமயம் கூகுளுக்கு மாற்று தேட வேண்டிய நிலையும் உருவாகக்கூடும்.எனவே சொந்தமாக தேடுபொறியை உருவாக்கும் நிலைக்கு, ஆப்பிள் தள்ளப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆப்பிள் இதுவரை, இதுகுறித்து வாய் திறக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !