உள்ளூர் செய்திகள்

துவங்கியது, சாட் ஜி.பி.டி., பந்தயம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், நாம் வாழும் உலகை ஒரு பக்கம் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம், தொழில்நுட்ப உலகத்தை, இன்னொரு போர் கலக்கி கொண்டி ருக்கிறது.செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இயங்கும் சாட் ஜி.பி.டி., சம்பந்தமான போர் துவங்கி உள்ளது.'ஓப்பன் ஏ.ஐ., கூகுள், மைக்ரோசாப்ட்' என பல பெரும் நிறுவனங்கள் இந்த போரில் குதித்துள்ளன.இணையத்தில் நாம் எது குறித்து தேடுவதாக இருந்தாலும், வழக்கமாக 'கூகுள் சர்ச்' இணைய பக்கத்தில் போய் தான் தேடி வருகிறோம். அதில் காட்டப்படும் 'ரிசல்ட்'டுகளை பார்த்து, நமக்கு வேண்டிய தளத்தை அணுகி தேவையானவற்றை அறிந்து கொள்கிறோம்.இந்நிலையில் தான், ஓப்பன் ஏ.ஐ., எனும் நிறுவனம், செயற்கை நுண்ணறிவின் பின்னணியில் இயங்கும் சாட் ஜி.பி.டி., எனும் தளத்தை அறிமுகம் செய்தது.இதில் நாம், 'வாட்ஸ்ஆப்' போன்றவற்றில் 'சாட்' செய்வது போல, நாம் தேடுவது சம்பந்தமான விபரங்களை தட்டச்சு செய்தால், அதற்கான பதிலை அதுவே தொகுத்து வழங்கிவிடுகிறது. இன்னும் சொல்வதென்றால் கவிதை எழுது என்றால் எழுதும்; கட்டுரை எழுது என்றால் எழுதும். அதாவது மனிதனின் இடத்திலிருந்து யோசித்து நமக்குத் தேவையானவற்றை அதுவே தொகுத்து வழங்கிவிடும்.பிறகென்ன, இப்போது உலகமே இதன் பின்னால் அணிதிரண்டு ஓடுகிறது. பல்கலைக்கழகங்கள் சில இவற்றை தடை செய்யும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது. ஓப்பன் ஏ.ஐ., நிறுவனத்தின் சாட் ஜி.பி.டி.,யை, 'கூகுள் கில்லர்' என்றே வர்ணிக்கின்றனர்.இந்நிலையில், போட்டியில் தற்போது, கூகுளும் குதித்துள்ளது. கூகுள் நிறுவனம் 'பார்டு' எனும் அதன் சாட் ஜி.பி.டி.,யை அறிமுகம் செய்துள்ளது. இதற்கிடையே, மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் 'பிங்க்' தேடுபொறியை, செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் மேம்படுத்தி உள்ளதாகவும் அறிவித்துள்ளது.மேம்படுத்தப்பட்ட புதிய பிங்க் தேடுபொறி, நம் தேடல்களுக்கு மனிதனை போன்றே பதில்களை உருவாக்கி வழங்கும்.இதற்கான அறிமுக நிகழ்ச்சியில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, 'ஓட்டப்பந்தயம் இன்று துவங்குகிறது' என அறிவித்தார்.இதில் இன்னொரு விஷயம் ஓப்பன் ஏ.ஐ., நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் முதலீடு செய்துள்ளது, கூகுளை சாய்ப்பதற்காக!அவர் கூறியிருப்பதை போலவே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான விஷயங்களில், நிறுவனங்களின் போட்டி துவங்கி விட்டது.இதன் சாதக - பாதகங்கள் என்ன என்பது இனிமேல் தான் தெரியவரும். நமக்கு மட்டுமல்ல; இவற்றை அறிமுகம் செய்யும் நிறுவனங்களுக்கும் தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !