உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / சமத்துவத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

சமத்துவத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

'சி.ஆர்.பி.சி., எனப்படும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின், 125வது பிரிவு மதச்சார்பற்றது. எனவே, எந்த மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் போது, அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும். இச்சட்டப்பிரிவின்படி, ஜீவனாம்சம் பெறுவதற்கான உரிமை பெண்களுக்கு உள்ளது' என, உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, சமீபத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.'திருமணமான பெண்கள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவது ஒன்றும் கருணை தொகை அல்ல; அது, அவர்களின் அடிப்படை உரிமை' என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்சல் சமது என்பவர், விவாகரத்து பெற்ற அவரது மனைவிக்கு, 20,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தான், இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர்.அத்துடன், 'விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் சட்டம் 1986ன்படி தான் பராமரிப்பு தொகை கோர முடியும்' என்ற, அப்துல் சமது தரப்பின் வாதத்தை நிராகரித்ததுடன், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125வது பிரிவு, 'அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இதற்கு முன், 1985ல் ஷா பானு தொடர்பான வழக்கில், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125வது பிரிவு, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. விவாகரத்து பெறும் முஸ்லிம் பெண்கள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்றும் கூறியிருந்தது. இந்த உரிமையை மட்டுப்படுத்த, 1986ல் சட்டம் ஒன்று இயற்றப்பட்ட போதிலும், அதை செல்லாததாக்கும் வகையிலும், 1985ல் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும், தற்போதைய தீர்ப்பு அமைந்து உள்ளது.அதாவது, 2019ல் பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றில், 'குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125ன் கீழும், 1986ம் ஆண்டு சட்டத்தின்படியும், விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள் கணவரிடம் இருந்து பராமரிப்பு தொகை கோரலாம்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், '1986ம் ஆண்டு இயற்றப்பட்டது சிறப்பு சட்டமாகும்; அந்தச் சட்டமானது, 125வது சட்டப்பிரிவுக்கு மேலானது' என, தற்போதைய வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதமும், நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 'வேலைக்கு செல்லாத பெண்களுக்கு, குடும்பத்துக்கான செலவை தவிர, அவர்களின் சொந்த தேவைக்கு செலவு செய்யும் அளவுக்கு நிதி அதிகாரத்தை கணவர்கள் வழங்க வேண்டும். குடும்ப தலைவியருக்கும் சில ஆசைகள் இருக்கும். ஆனால், குடும்பத்துக்காக அதை சொல்லாமல் மறைத்து விடுவர். 'தன் வாழ்நாள் முழுதும் குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களுக்கு, அவர்களின் சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளை கணவர் மற்றும் குடும்பத்தார் ஏற்படுத்தி தர வேண்டும். இதை, வேலை பார்க்கும் அனைத்து ஆண்களும் உணர வேண்டும்' என்று, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் குறிப்பிட்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.இந்த தீர்ப்பின் வாயிலாக, மற்ற மத பெண்களை போல, முஸ்லிம் பெண்களும் பராமரிப்பு தொகை பெற உரிமையுள்ளவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலின நீதியும், சமத்துவமும் நிலைநாட்டப்பட்டுள்ளது.மேலும், அரசியல் சட்ட ரீதியான கோட்பாடு களை அங்கீகரித்துள்ளதுடன், பெண்களின் சமூக பொருளாதார பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு, எதிர்காலத்தில் வரும் வழக்குகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்ற அமர்வை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை