உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் /  கர்நாடக புதிய முதல்வருக்கு காத்திருக்கும் சவால்கள்!

 கர்நாடக புதிய முதல்வருக்கு காத்திருக்கும் சவால்கள்!

கர்நாடக மாநிலத்தில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், 136 இடங்களை பிடித்து, தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அப்போது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், முதல்வராகும் வாய்ப்பு சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், 'இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் முதல்வர் பதவியை, சிவகுமாருக்கு விட்டுத்தர வேண்டும்' என, காங்கிரஸ் மேலிடம் வாய் மொழியாக ஒப்பந்தம் செய்தது. ஆனாலும், மூன்று ஆண்டுகளாக சித்தராமையாவே முதல்வராக நீடித்தார். ஒப்பந்தப்படி முதல்வர் பதவியை பிடிக்க, அடிக்கடி டில்லி சென்று காங்கிரஸ் மேலிடத்துடன் சிவகுமார் பேச்சு நடத்தி வந்தார். அந்த பேச்சுவார்த்தை ஒரு வழியாக கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. காங்., மேலிட உத்தரவுப்படி, சித்தராமையா கடந்த மாதம், 28ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து, கர்நாடக மாநிலத்தின், 24வது முதல்வராக, கடந்த, 3ம் தேதி சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சி, 2014ம் ஆண்டு முதல், வட மாநிலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், 2023ம் ஆண்டு கர்நாடகாவில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த வெற்றிக்கு தீவிரமாக பாடுபட்டவர், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சிவகுமார் என்பதால், அவருக்கு தற்போது முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வராக, 2023ல் சித்தராமையா பதவியேற்றது முதலே, ஆளும் கட்சியான காங்கிரசில் உட்கட்சி மோதல்கள் நிலவி வந்தன. ஆனாலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் இடையே செல்வாக்கு பெற்றிருந்த தலைவரான சித்தராமையா, சட்டசபை தேர்தலின் போது அளித்த, பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாய் உள்ளிட்ட ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியதால், அதன் வாயிலாக, பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், அவரது அரசுக்கு செல்வாக்கு அதிகரித்தது. மூன்றாண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக முடித்து, தற்போது முதல்வர் பொறுப்பை சிவகுமாருக்கு விட்டுக் கொடுத்துள்ளார். அதேநேரத்தில், அவர் தேசிய அரசியலுக்கு செல்வார் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். மாநில அரசியலிலே தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, காங்கிரஸ் கோஷ்டி பூசல்கள் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. கர்நாடகாவில் மட்டுமின்றி, நாடு முழுதும் அரசியல் சூழ்நிலை மாறியுள்ளது. அந்த சூழலை சமாளிப்பதற்கான வழிகளை தேடுவதற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சி உட்கட்சி மோதல்களை சமாளிப்பதில் தான் மும்முரமாக இருந்து வருகிறது என்பது, தற்போதைய முதல்வர் மாற்றம் வாயிலாக உறுதியாகி உள்ளது. 'ஸ்டார்ட்-அப்' உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்களின் மையமான பெங்களூரு, உள்கட்டமைப்பு விஷயத்தில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள மற்ற நகர்ப்புறங்களும் வளர்ச்சி திட்டங்களுக்காக முதலீட்டை எதிர்நோக்கி இருக்கின்றன. அவற்றை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் சிவகுமார் உள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் செல்வாக்கு குறையாமல் இருப்பதற்கு காரணமானவர்களில் சிவகுமாரும் ஒருவர் என்பதால், அவருக்கு கட்சி மேலிடம் முதல்வர் பொறுப்பை வழங்கியுள்ளது. இதன் வாயிலாக, 2028 சட்டசபை தேர்தலை, சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் எதிர்கொண்டு, வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்பது, மேலிடத்தின் எதிர்பார்ப்பு. அது மட்டுமின்றி, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள சிவகுமார், இந்த விஷயத்தில் தமிழகத்தின் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். புதிய முதல்வரான சிவகுமார், மேகதாது அணை விஷயத்தில் தீர்வு காண்பாரா, மாநிலம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை, இரண்டு ஆண்டுகளில் வெற்றிகமாக எதிர்கொண்டு சாதனை படைப்பாரா, காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Santhakumar Srinivasalu
ஜூன் 08, 2026 09:17

மேகதாதுவை விட தலையாய பிரச்சனைகள் நிறைய சிவக்குமாருக்கு இருக்கு?


V RAMASWAMY
ஜூன் 08, 2026 08:11

முதற்கண் நரகமாகிக்கொண்டிருக்கும் பெங்களூரு நகரை சரி செய்யவேண்டும், சாலைகள் மேம்படுத்தல், இருட்டு கவ்விக்கொண்டிருக்கும் எங்கும் பிரகாசமான விளக்குகள், சுத்தம் சுகாதாரமான ஆக்கிரமிப்பில்லா நடைபாதைகள், போக்குவரத்து நெரிசலில்லா தெருக்கள், வழிந்து அசுத்தமமாக்கும் சாக்கடைகளில்லா தெருக்கள், இவைகளையும், குற்றமில்லா பாதுகாப்புள்ள சூழ்நிலையும் உண்டாக்கவேண்டும்.


Aam Aathmi (Mango Man)
ஜூன் 08, 2026 08:38

சாத்தியமா ?


Aam Aathmi (Mango Man)
ஜூன் 08, 2026 07:00

இங்கே டாஸ்மாக் அதிக கட்டண வசூலுக்கு தீர்வு காணமுடியவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை