உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் /  பயணியரை அவதிக்குள்ளாக்கிய விமான சேவைகள் ரத்து

 பயணியரை அவதிக்குள்ளாக்கிய விமான சேவைகள் ரத்து

நம் நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான, 'இண்டிகோ' கடந்த சில நாட்களாக பல நுாறு விமானங்களின் சேவைகளை ரத்து செய்துள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளிலும் லட்சக்கணக்கான பயணியர் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இண்டிகோ விமானங்களுக்கு முன்பதிவு செய்திருந்த பயணியர், பல விமான நிலையங்களில் காத்திருப்பதும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிப்பதையும் காண முடிகிறது. இதனால், பல விமான நிலையங்கள் ஸ்தம்பித்து போயுள்ளன. இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம், விமானிகளின் பணிநேரம் தொடர்பாக, சில விதிகளை அறிமுகப்படுத்தியது. பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே, இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. இதன்படி, விமான பயணியாளர்களின் ஓய்வு நேரம், வாரத்தில் 36 மணி நேரத்தில் இருந்து 46 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேர விமான சேவைகளை கட்டுப்படுத்தும் வகையிலான சில அம்சங்களும் விதிமுறைகளில் இடம் பெற்றுள்ளன. இந்த விதிமுறைகளை அனைத்து விமான சேவை நிறுவனங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, விமான போக்குவரத்து இயக்குநரகம் அவகாசமும் அளித்தது. ஆனால், இண்டிகோ விமான நிறுவனங்களின் சேவைகள் மற்ற நிறுவனங்களை விட அதிகம் என்பதால், குறிப்பிட்ட அவகாசத்திற்குள் அந்நிறுவனத்தால் விதிமுறைகளை நிறைவேற்ற முடியவில்லை. புதிய விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில், விமானிகளையும், பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தாமலும் விட்டுவிட்டது. இதன் காரணமாகவே ஏராளமான விமான சேவைகளை ரத்து செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டு, பயணியர் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் விமான போக்குவரத்து ஆணையரகம், விதிமுறைகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, அடுத்த சில நாட்களில் நிலைமை சீராகலாம் என நம்பப்படுகிறது. அது மட்டுமின்றி, பயணியரின் அவதிக்காக அவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ நிறுவனம், புதிய விதிமுகளை அமல்படுத்த கூடுதல் அவகாசமும் கோரியுள்ளது. 'அதற்குள் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து விடுவோம்' என்றும் உறுதி அளித்துள்ளது. இது, தாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திய மற்ற விமான நிறுவனங்கள், கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது, பயணியரை மேலும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது. அதனால், சில ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்திய விமான கட்டண உச்சவரம்பை, மத்திய அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது. இதன்படி, குறிப்பிட்ட துாரத்திற்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே, கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. விமானிகள் எத்தனை மணி நேரம் பணியாற்றலாம்; எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்ற புதிய விதிமுறைகள், அவர்கள் சோர்வின்றி பணியாற்றவும், பயணியர் நலன் கருதியும் மத்திய அரசால் உருவாக்கப்பட்டன. ஆனால், இண்டிகோ நிறுவனம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், விதிகளை ஏற்றுக்கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கு மேலானது. மேலும், டில்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே இந்த புதிய விதிமுறைகள் அறிமுகமாகின. அதே நேரத்தில், சம்பள உயர்வு வழங்காதது உட்பட பல விஷயங்களில், விமான நிறுவனம் மீது அதிருப்தியில் இருக்கும் விமானிகளும், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு தரவில்லை . அதுவும், நிலைமை மேலும் மோசமாக காரணம். மொத்தத்தில் நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் குழப்பம் நிலவுவதற்கு, இண்டிகோ நிறுவனமே முழுமையான காரணம். லாபம் ஈட்டுவதில் ஆர்வம் காட்டிய நிறுவனம், ஆயிரக்கணக்கான பயணியரின் நலன் பற்றி கவலைப்படவில்லை. மத்திய அரசின் புதிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்பதிலும் அக்கறை காட்டவில்லை. அத்துடன், விமான போக்குவரத்து ஆணையரகமும், இந்த விஷயத்தில் மெத்தனமாக, ஆழ்ந்த துாக்கத்தில் இருந்துவிட்டது என்பதே உண்மை நிலவரம். தற்போது, விமானங்கள் ரத்து குறித்த குழப்பங்களை ஆராய, விமான போக்குவரத்து ஆணையரகம் கமிட்டி ஒன்றை நியமித்துள்ளது நல்ல நடவடிக்கை என்றாலும், தாமதமான நடவடிக்கையே. வரும் நாட்களிலாவது நிலைமை சீராகும் என நம்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S Srinivasan
டிச 08, 2025 11:10

இண்டிகோ நிறுவனத்தின் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிபர் V Putin வரும்போது அவர் அந்த வரவை மீடியாக்கள் திசை திருப்ப வேண்டும் என்று துருக்கியின் எண்ணத்தை இண்டிகோ நிறுவனம் செய்து உள்ளது இது கண்டிக்கத்தக்கது எனவே இவ்வாறு செய்த indigo நிறுவன ம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் 18 மாதங்கள் கால அவகாசம் கொடுத்தும் பைலட்டுகளை நியமிக்காதது பெரும் குற்றமாகும் இந்தியாவிலிருந்து கொண்டு இந்தியா அரசை கைமுறுக்குவது கண்டிக்கத்தக்கது இது அரசு கடுமையாக நடவடிக்கை மூலம் அரசோட வலிமையை காட்ட வேண்டும்


Nathansamwi
டிச 08, 2025 10:46

Complete failure by NDA government.... consequences of privatisation....


Venugopal, S
டிச 08, 2025 09:32

சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும். DGCA அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். புது அதிகாரிகள் நியமிக்க வேண்டும்


ஆரூர் ரங்
டிச 08, 2025 09:23

விமானத் தொழில் நீண்டகால அளவில் லாபகரமானதல்ல. உலக அளவிலும் வெகு சில நிறுவனங்களே வெற்றிகரமாக செயல்படுகின்றன. புதிய விமான நிறுவனங்களுக்கு மானியமளிக்க எதிர்ப்பு பலமாக இருக்கும். பல விமான நிலையங்களை நிர்வகிக்கும் அடானி குழுமம் கூட விமான நிறுவனம் துவக்க நினைக்கவில்லையே.


VENKATASUBRAMANIAN
டிச 08, 2025 08:09

இண்டிகோ வை வளர்த்து விட்டதின் விளைவு. மற்ற விமான நிறுவனங்களையும் களமிறக்க வேண்டும். அப்போதுதான் போட்டி இருக்கும். இல்லையெனில் இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலைமை ஏற்படும்.


முக்கிய வீடியோ