உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / எச் 1 பி விசா கட்டண உயர்வு அமெரிக்காவுக்கு பாதகமே!

எச் 1 பி விசா கட்டண உயர்வு அமெரிக்காவுக்கு பாதகமே!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே, 50 சதவீத வரி விதித்து, இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசலை ஏற்படுத்திய, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, அமெரிக்காவுக்கு, 'எச் 1 பி' விசாவில் பணியாற்ற வரும் வெளிநாட்டினர், 1 லட்சம் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட, 90 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு தெற்காசியாவில் உள்ள நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக, இந்தியர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஏனெனில், 'எச் 1 பி' விசாவில் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்றுவோரில், 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்களே. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு மட்டுமே, அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும், 65 ஆயிரம் எச் 1 பி விசாக்களை வழங்கி வருகிறது. அத்துடன், அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கும், இந்த வகை விசாக்கள், 20,000 வழங்கப்படும். இரண்டையும் சேர்த்தால், ஒவ்வொரு ஆண்டும் மொத்தம், 85,000 விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசா பெற்றவர்கள், அமெரிக்காவில் மூன்றாண்டுகள் தங்கியிருந்து பணியாற்றலாம். தேவையெனில், மேலும் மூன்றாண்டுகளுக்கு விசா காலத்தை நீட்டிக்க முடியும். தற்போதைய நிலவரப்படி, எச் 1 பி விசா பெற்ற, 13 லட்சம் வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர். அதே நேரத்தில், புதிதாக எச் 1 பி விசா கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு மட்டுமே, இக்கட்டண உயர்வு பொருந்தும். தற்போதைய, எச் 1 பி விசாவை பழைய கட்டண விகிதத்திலேயே புதுப்பித்துக் கொள்ளலாம்' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், எச் 1 பி விசா கட்டண உயர்வானது, அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க, அதிபர்​ டிரம்ப்​ எடுத்த நடவடிக்கை என்றும், அவரது நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, வேலைக்காக புதியவர்கள் அமெரிக்கா வருவதை தடுக்கவும், புலம் பெயர்ந்தோர் வெளியேற வேண்டிய கட்டாயத்தை உருவாக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள், அமெரிக்காவில் முக்கிய துறைகளில் பணியாற்றுவதையும் இது தடுக்கும். அப்படி தடுப்பது, அமெரிக்க நிறுவனங்களின், குறிப்பாக அந்நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா நெருக்கமாகும் சூழ்நிலையும் உருவாகும். நம் நாட்டைச் சேர்ந்த, ஒவ்வொரு துறையிலும் திறமையானவர்கள், பண ஆதாயத்திற்காக அமெரிக்கா செல்வது தடுக்கப்படும். இந்தியாவிலேயே அவர்கள் பணியாற்றும் வாய்ப்பு உருவாகும். அது, நம் நாட்டின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும் என்பதில் மாற்றமில்லை. அது மட்டுமின்றி, இந்தியர்களை பயன்படுத்தி, தங்களது செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ள அமெரிக்க நிறுவனங்கள், வேறு நாடுகளில் ஏன் இந்தியாவிலேயே தங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, இந்தியர்களை பணிக்கு அமர்த்தி, ஆதாயம் பெற முற்படலாம். இதனால், அமெரிக்காவுக்கு தான் பாதிப்பே தவிர, இந்தியாவுக்கு அல்ல. இருப்பினும், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் டிரம்ப் நிர்வாகத்தை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். அதாவது, எச் 1 பி விசா கட்டண உயர்வு, இந்திய ஏற்றுமதிகள் மீது, 50 சதவீத வரி விதித்தது, போதைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்தது, பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றம் நிர்வாகிகளின் விசாக்களை தடை செய்தது போன்றவற்றுக்கு துாதரக ரீதியாக எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தி, இந்தியர்கள் பாதிக்காத வகையிலான நடவடிக்கைகளை, அமெரிக்க அரசை எடுக்கச் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

indian
செப் 30, 2025 02:39

அமெரிக்க அதிபர் தன் நாட்டு மாணவர்களின் நலனை கருதி செயல்படுவதில் தவறு ஏதும் இல்லை.


RK
செப் 29, 2025 10:39

நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள்? அவர்கள்தானே கவலைப்பட வேண்டும்!!!


john
செப் 29, 2025 09:35

Elephant has put the sand on its head is the proverb in Tamil which is systematically followed by Google Trump


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை