நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்துள்ளன. சமீபத்தில், தீபு சந்திரதாஸ் என்ற ஹிந்து இளைஞரை, ஒரு கும்பல் அடித்து கொன்று மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், 'இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக இடைக்கால அரசின் பதவிக்காலத்தில் மட்டும், 3,000 வன்முறை சம்பவங்கள் பதிவாகி உள்ளன. வங்கதேசத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். அதே நேரத்தில், அங்குள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது அவசியம்' என, வலியுறுத்தியுள்ளது. கடந்த 2024- ஆகஸ்டில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் காரணமாக வங்கதேசம் கலவர பூமியாக மாறியது. இடஒதுக்கீடு, ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடந்த போராட்டம் நாடு முழுதும் பரவியதால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்தது. அந்த அரசு, வங்க தேசத்தில் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்கும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடக்க வழிவகுக்கும், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் என்றும் நம்பப்பட்டது. ஆனால், வங்கதேசத்தில் தற்போது நடக்கும் சம்பவங்களும், வன்முறைகளும் அந்த நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளன. இடைக்கால அரசு தன் கடமையை சரிவர செய்யவில்லை என்றே தோன்றுகிறது. அதுமட்டுமின்றி, வங்கதேச அரசியலில் முக்கிய சக்திகளில் ஒன்றாகத் திகழும் அவாமி லீக் கட்சி, பிப்ரவரியில் நடைபெறவுள்ள பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து, ஆயிரக்கணக்கான அவாமி லீக் தொண்டர்களும், ஆதரவாளர்களும் கடந்த செப்டம்பர் மாதம் போராடினர்; இது, அக்கட்சி ஒரு பலவீனமான சக்தி அல்ல என்பதையே காட்டுகிறது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனாவிற்கு எதிரான வழக்குகளை விசாரித்த அந்நாட்டு சர்வதேச நீதிமன்றம், வங்கதேச நீதிபதிகளை மட்டுமே கொண்டிருந்ததால், ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது என்று கருதப்படுகிறது. இந்நிலையில், அவரது கட்சி தேர்தலில் போட்டி யிட தடை விதிக்கப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே அன்றி வேறில்லை. வங்கதேச நாட்டின் தற்போதைய சூழல் மிகவும் நிலையற்றதாக உள்ளது. ஹசீனா ஆட்சிக்கு எதிராக நடந்த இட ஒதுக்கீட்டு போராட்டங்களில் தீவிரம் காட்டிய முக்கிய பிரமுகர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி கொல்லப்பட்ட சம்பவம், புதிய போராட்டங்களையும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களையும் துாண்டியுள்ளது. இந்த குழப்பமான சூழ்நிலையில், யூனுஸ் அரசு தனது நம்பகத்தன்மையை ஓரளவாவது தக்கவைத்துக் கொள்ள விரும்பினால், நிலைமையை மேலும் துாண்டிவிடாமலும் மோசமாகாமலும் தடுக்க வேண்டும். அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டி, அவாமி லீக் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். அவாமி லீக் கட்சியை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பதை ஓட்டளிக்கும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அத்துடன், நாட்டில் நெருக்கடியில் சிக்கியுள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதையெல்லாம் செய்யத் தவறினால், உலக நாடுகள் மத்தியில் யூனுஸ் அரசு நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.