உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / போலி புத்தகங்கள் விவகாரம்: நுாலகத்துறைக்கு களங்கம்!

போலி புத்தகங்கள் விவகாரம்: நுாலகத்துறைக்கு களங்கம்!

கோவையில், 300 கோடி ரூபாய் செலவில், ஈ.வெ.ரா., பெயரில் பிரமாண்ட நுாலகம் கட்டப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட இந்நுாலகத்தை, கடந்த மாதம், 16ம் தேதி, முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.இந்நிலையில், கோவை ஈ.வெ.ரா., நுாலகத்திற்கு தி.மு.க., ஆட்சியில் புத்தகங்கள் வாங்கப்பட்டதில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி பெயர்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் எழுதப்பட்ட நுால்கள் வாங்கப்பட்டு உள்ளதாக, எழுத்தாளர் பெருமாள் முருகன், இந்த மோசடியை அம்பலப்படுத்தி உள்ளார். இந்த மோசடி குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையும் துவக்கப்பட்டுள்ளது.கோவை ஈ.வெ.ரா., நுாலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 3,808-க்கும் அதிகமான போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டன. இதுதவிர, தமிழகம் முழுதும் உள்ள அரசு நுாலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 70 ஆயிரத்திற்கும் அதிகமான போலி நுால்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு, 7 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.அதாவது, சந்தையில் இல்லாத அல்லது போலியான பதிப்பகங்கள் பெயரில், ஒவ்வொரு புத்தகமும் அதிக விலை குறிப்பிடப்பட்டு, அரசுப் பணம் கோடிக்கணக்கில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. அகல்விளக்கு, பீனிக்ஸ், வின்டேஜ் பிரஸ் போன்ற சில பதிப்பகங்கள் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளன. இந்த பதிப்பகங்கள் எல்லாம் தங்கள் சங்கத்திலேயே உறுப்பினராக இல்லை என, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான, 'பபாசி' அமைப்பு தெரிவித்துள்ளது, மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்த்துள்ளது.அதாவது, காப்புரிமையற்ற புத்தகங்களின் தலைப்புகளையும், பிரபல எழுத்தாளர்களின் பெயர்களையும் முறைகேடாகப் பயன்படுத்தி தரக்குறியீட்டு எண் பெற்று, அப்புத்தகங்களை அச்சிட்டு நுாலகங்களுக்கு வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான த.வெ.க.,வும், எதிர்க்கட்சியான தி.மு.க.,வும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. அதனால், 'இந்த மோசடி தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; உரிய விசாரணை நடத்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.இதற்கிடையில், புத்தக கொள்முதல் கண்காணிப்பு குழுவில் உறுப்பினர்களாக இருந்த அண்ணா நுாற்றாண்டு நுாலக அதிகாரிகள், கலைஞர் நுாற்றாண்டு நுாலக அலுவலர், கோவை ஈ.வெ.ரா., அறிவுலக நுாலகப் பொறுப்பாளர், பொது நுாலகத்துறை அதிகாரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பொது நுாலக இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது. மொத்தத்தில் புத்தக கொள்முதல் ஊழல் விவகாரம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையில்லை.பொது நுாலகங்கள் என்பவை மக்களுக்கு தரமான மற்றும் உண்மையான தகவல்களை வழங்கும் அறிவு களஞ்சியங்களாகும். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட, பிழையான தகவல்களை கொண்ட போலி புத்தகங்களை வாங்கி நுாலகங்களில் அடுக்குவது, வாசகர்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். தகுதியான எழுத்தாளர்களின் படைப்புகள் புறக்கணிக்கப்பட்டு, இல்லாத எழுத்தாளர்கள் மற்றும் போலி பதிப்பகங்களின் பெயரில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது, தமிழ் இலக்கிய சூழலுக்கு ஏற்பட்ட அவப்பெயராகும்.எனவே, இனியாவது தமிழக அரசு விழித்துக் கொண்டு, நுாலகங்களுக்கான புத்தக கொள்முதல் தொடர்பாக தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவர்களில் பலர், அரசின் பொது நுாலகங்களையே நம்பியுள்ளனர். அப்படிப்பட்ட நிலையில், அங்கு போலி புத்தகங்கள் இடம் பெறுவது மிகப்பெரிய களங்கமாகும். இனியும் இதுபோன்று நடைபெறாமல் தடுப்பது அரசின் கடமையாகும். அத்துடன் இந்த மோசடிக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவும் வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

S SRINIVASAN
நவ 16, 2026 19:30

ஊழல் பண்ணியது திருடர்கள் முன்னேற்ற கழகம்தான், ஆனால் களங்கம் இல்லைன்னு கல்யாண வீடுகளில் ஒப்பாரி. இதுல முதல் திருடனேன்னு கூப்பிட வேண்டாம்ன்னு அன்புகட்டளை வேற. சுத்தமா மரை கழண்ட கேஸ்


chinnamanibalan
நவ 16, 2026 17:22

தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசுத் துறை என, எந்த ஒரு துறையாவது இருக்கிறதா என்ன? ஆட்சி அதிகாரம் என்பதே கோடிக் கணக்கில் சுரண்டுவது, கொள்ளை அடிப்பது என்றாகி விட்டது.


ராமகிருஷ்ணன் பரமக்குடி
நவ 16, 2026 13:51

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து திருடியே வளர்ந்த திமுக செய்துள்ள சின்ன திருட்டு ஊழல் இது. அப்படியே திமுகவின் ஊழல் இலக்கணம் புத்தகம் தயாரித்து விற்பனை செய்தால் உலக அளவில் நன்கு விற்கும்


Dakshinamurthy Nagarajan
நவ 16, 2026 04:59

ஹாஸ்பிடல் லா மாற்றம் செய்யுங்கள்


SRIRAMA ANU
நவ 16, 2026 07:19

கோவில்களில் நடக்கும் மோசடிகள் மிகைப்படுத்தி எல்லா கூலிகளையும் மருத்துவமனையாக ஆக்கி விடலாமா? சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப் போவது சரியான தீர்வு .


SULLAN
நவ 17, 2026 09:45

அப்படியே ஆஸ்ப்பிட்டல்ல அதிகமதிகம் கஸ்டமரை வரவழைக்க புதிதாக ஆயிரம் மதுக்கடைகளை போர்க்கால அடிப்படையில் திறக்க வேண்டும்....


புதிய வீடியோ