உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / விஜய் அரசுக்கு சவால்கள் ஏராளம்; திறமையாக சமாளிப்பது அவசியம்

விஜய் அரசுக்கு சவால்கள் ஏராளம்; திறமையாக சமாளிப்பது அவசியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜயின் தமிழக வெற்றிக் கழகம், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.,க்களை பெறாததால், ஆறு நாட்களுக்கும் மேலாக நடந்த, சில அரசியல் கட்சிகளின் சதுரங்க விளையாட்டிற்கு பின், நேற்று தமிழகத்தின், 13வது முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். விஜய் தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியும் அறிவித்திருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது என, மற்றொரு கட்சியான காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதனால், அக்கட்சியின் பிரதிநிதிகள், வரும் நாட்களில் அமைச்சர்களாக பதவியேற்பது உறுதி. கடந்த, 2024 பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகத்தை துவக்கிய விஜய், அந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் களமிறங்கவில்லை. 2026 சட்டசபை தேர்தலே தங்கள் கட்சியின் இலக்கு என்று தெரிவித்தார். அதன்படி, சட்டசபை தேர்தலில் அவர் குதித்ததும், கரூரில் நடைபெற்ற அவரின் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41பேர் இறந்த சம்பவம் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அச்சம்பவம் தொடர்பான சி.பி.ஐ., விசாரணை மற்றும் மனைவி சங்கீதாவின் விவாகரத்து நோட்டீஸ், தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்ய முடியாத அளவுக்கு, போலீஸ் தரப்பில் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் என, பல தடைகள் வரிசை கட்டி வந்தன. ஆனாலும், மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்ததால், இந்த பிரச்னைகளை எல்லாம், அவர் துாள் துாளாக்கி, தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டி விட்டார். முதல்வராக பதவியேற்ற விஜய், இரண்டு மாதங்களில், 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது உட்பட, மூன்று முக்கிய அறிவிப்புகள் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். 'தப்பு செய்ய மாட்டேன்; யாரையும் தப்பு செய்ய விடமாட்டேன்' என்று அறிவித்துள்ள அவர், 'கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன். அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை' என்றும் கூறியுள்ளார். மாநிலத்தின் கடன் சுமை, 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதால், மாநிலத்தின் நிதி நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளதாகவும், அதன்பின், தங்கள் கட்சியின் தேர்தல் அறிவிப்புகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற உள்ளதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். தற்போதைய நிலையில், மாநிலத்தின் வருவாயானது, 3.50 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஆனால், அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் நலத்திட்டங்கள் உட்பட, மாநில அரசின் செலவுகளோ, 4.50 லட்சம் கோடி முதல், 5 லட்சம் கோடி ரூபாய் வரை உள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் அளவுக்கு கடன் வாங்கியே நிலைமையை சமாளிக்க வேண்டி உள்ளது. அதனால், தற்போது மகளிருக்கு மாதந் தோறும் வழங்கப்படும் உரிமைத்தொகை, 1,000 என்பதை, 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவது, ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்கள் இலவசம் உள்ளிட்ட அவரின் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவது கடினமே. இதற்கு முன்பிருந்த தி.மு.க., அரசு, பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததாலும், மோடி அரசின் திட்டங்களை ஏற்க மறுத்ததாலும், நிதியுதவி பெறுவதில் சிரமங்களை சந்தித்து வந்தது. அப்படிப்பட்ட நிலையில், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் விஷயத்தில், விஜய் சாதகமான அணுகுமுறையை பின்பற்றுவாரா அல்லது திராவிட கட்சிகள் பாணியில் எதிர்ப்பு அரசியலை கையில் எடுப்பாரா என்பது, அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும். அது மட்டுமின்றி, அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் கட்சிகள் விஷயத்திலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அவற்றின் நிர்ப்பந்தங்களுக்கு ஆட்பட நேரிடலாம். எனவே, விஜய் தலைமையிலான அரசு நாள்தோறும் சவால்களை சந்திக்கலாம் என்பதே நிதர்சனம். ஆட்சி அமைக்கும் விஷயத்தில் பொறுமை காட்டியது போல, சவால்களையும் பொறுமையுடன் எதிர்கொள்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ