உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / மோடியின் மணிப்பூர் பயணம் இன மோதல்களுக்கு முடிவு கட்டுமா?

மோடியின் மணிப்பூர் பயணம் இன மோதல்களுக்கு முடிவு கட்டுமா?

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கூகி மற்றும்- மெய்டி பழங்குடி இனத்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60,000க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களை விட்டு இடம் பெயர்ந்தனர். இடம் பெயர்ந்தவர்களில், 40,000 பேர் கூகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 20,000 பேர் மெய்டி பழங்குடியினர்.இதனால், அம்மாநிலத்தில் சட்டம் -- ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சிக்குப் பின், அம்மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியது. ஆனாலும், இரு தரப்பினர் இடையேயான மோதல் புகைந்து கொண்டு தான் இருக்கிறது.மணிப்பூரில் பெரிய அளவில் வன்முறை வெடித்தும், பிரதமர் மோடி நீண்ட நாட்களாக அங்கு செல்லவில்லை. இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், கடந்த, 13ம் தேதி மணிப்பூர் சென்றார் பிரதமர் மோடி. பிரதமரின் இந்தப் பயணம் தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கதே. இந்தப் பயணத்தின் போது, 7,300 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட உள்ள மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.அப்போது பேசிய அவர், 'மணிப்பூரில் புதிய விடியல் மலரும். அமைதிக்கான பேச்சு தொடர்ந்து நடைபெறும். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் வந்து சேரும். மணிப்பூரை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சித்து வருகிறது' என்றார்.கடந்த, 2023 மே மாதம் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. அதன்பின், 864 நாட்கள் கழித்து, பிரதமர் மோடி அந்த மாநிலத்திற்கு சென்றுள்ளார். ஆனாலும், தாமதமான பயணத்திற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவே இல்லை.அதேநேரத்தில், கூகி இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் சுராசந்த்பூரிலும், மெய்டி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் இம்பாலிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றது, இரு தரப்பினர் இடையே, அவர் எந்த பாரபட்சமும் காட்டவில்லை என்பதை தெளிவுப்படுத்தியது.அத்துடன் வன்முறையால் பாதிக்கப்பட்ட இரு சமூகத்தை சேர்ந்தவர்களையும், நிவாரண முகாம்களில், பிரதமர் சந்தித்து பேசியது அவர்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்தது.மணிப்பூரின் அமைதியின்மைக்கு வளர்ச்சி தொடர்பான பிரச்னை காரணம் இல்லை என்றாலும், மெய்டி இனத்தவரின் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு, அது மறைமுக காரணமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மெய்டி இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்கும்படி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தான், கூகி இனத்தினர் போராட்டத்தில் இறங்கினர்.அதன்பிறகே, பெரிய அளவிலான மோதல் மற்றும் வன்முறை காட்சிகள் அரங்கேறின என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் மட்டுமே இரு தரப்பினர் இடையே நீறுபூத்த நெருப்பாக உள்ள பிரச்னையை தீர்க்க முடியாது என்பதை, மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.இந்த மாநிலத்தில் இரு பிரிவினர் இடையே அமைதி நிலவ வேண்டும் எனில், அது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இதற்காக, அனைத்து தரப்பினரும் ஜனநாயக ரீதியான உணர்வுடன் செயல்பட வேண்டும். அத்துடன், அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மோதலில் ஈடுபட்டுள்ள சமூகங்களின் பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.அத்துடன், ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள இங்கு அரசியல் ரீதியான நடவடிக்கைகள் மீண்டும் துவங்க, மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். வரும் நாட்களில், மணிப்பூரில் உள்ள அனைத்து சமூகத்தினருடனும், மத்திய அரசு விரிவான பேச்சு நடத்த வேண்டும்.இதன் வாயிலாக, சர்ச்சைகளுக்கு சுமூகத் தீர்வு காண முற்பட வேண்டும். மணிப்பூரில் மோதலில் ஈடுபட்ட இரு பிரிவினரும் தற்போது வரை தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, அமைதி திரும்பும். அதற்கான ஒரு துவக்கமாக பிரதமர் மோடியின் சமீபத்திய பயணம் அமைந்துள்ளது என்றே நம்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Venugopal S
செப் 22, 2025 11:41

ஓ ,இவரது ஒரு நாள் பயணம் மணிப்பூர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்று தெரிந்து தான் அங்கு இரண்டு வருடங்களாக போகாமலே இருந்தாரோ?


ஆரூர் ரங்
செப் 22, 2025 11:28

60 ஆண்டுகளுக்கு மேலாக அடிக்கடி வன்முறை, ஹர்த்தால், பந்த்தில் பாதிக்கப்பட்ட மாநிலம் மணிப்பூர் . இங்கு வன்னியர்களுக்கு பத்தரை சதவீதம் இடஒதுக்கீட்டை அறிவித்த போது மற்ற சாதியினர் நீதிமன்றம் தேர்தல் மூலமாக எதிர்த்தனர். அங்கு அன்னிய மதமாற்ற சக்திகள் கலவரம் மூலம் ஹிந்து பழங்குடி மக்களுக்கு இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். அதுதான் வேறுபாடு. எல்லா அன்னிய சக்திகளையும் வெளியேறுவதுதான் தீர்வு. மதசார்பற்ற நாட்டில் மதமாற்றம் பேரழிவுச் செயல்.


அப்பாவி
செப் 22, 2025 09:54

அமைதி, ஒற்றுமை வர வேண்டிய நேரத்தில் வரும்.


KOVAIKARAN
செப் 22, 2025 09:33

நன்கு அலசி, ஆராய்ந்து எழுதப்பட்ட .....


பாலாஜி
செப் 22, 2025 09:17

எந்த பலனும் அளிக்காது.


Indian
செப் 22, 2025 09:07

மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சியால் எப்படி, மத இன மோதல்கள் முடிவுக்கு வரும் .


N Sasikumar Yadhav
செப் 22, 2025 11:55

மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவது மூர்க்கம் மட்டுமே . பாஜக எப்போதுமே உண்மையான மதச்சார்பற்ற ஜனநாயக கட்சி


Indian
செப் 22, 2025 14:15

பா ஜா மத சார்பற்ற கட்சி என நீ மட்டும் தான் சொல்கிறாய் . நாடு சொல்ல வில்லையே .


புதிய வீடியோ