வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துக்கள் நாங்கள் தன்சானியா வில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் எங்கள் குழுவும் இந்த ருக்கும் இருக்கும் மலைகளில் ஏறிஉள்ளோம் குறிப்பாக கிளிமஞ்சாரோ மற்றும் சில
மலையேற்றம் என்றாலே மனசுக்குள் பட்டாம்பூச்சி படபடக்க தொடங்கி விடும். சுத்தமான காற்றும் எல்லையற்ற சுதந்திரமான வானவெளியும் மனதையும் உடலையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கச் செய்து வயதை தொலைத்து இளமையை அதிகரிக்கச் செய்யும். நகரத்து நெருக்கடிகளில் நோயாளிகளுடன் பொழுதை கழிக்கும் டாக்டர்கள் குழுவினர் எட்டுபேர் இமயமலைக்கு சென்று 3500 அடி உயரத்தை தொட்டு எல்லையற்ற சந்தோஷத்துடன் திரும்பியதை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.சென்னை மருத்துவக் கல்லுாரியில் 1984 - 1990 வரை எம்.பி.பி.எஸ்., பயின்ற மாணவர்கள் 60 பேர் பங்கேற்க திட்டமிட்டு, எட்டு பேராக பயணத்தை நிறைவு செய்தோம் என்கிறார் மதுரையை சேர்ந்த நுரையீரல் சிறப்பு நிபுணர் டாக்டர் எம்.பழனியப்பன்.அவர் கூறியது: எங்களுடன் பயின்றவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து நட்பை தொடர்கிறோம். கடந்தாண்டு சந்திப்பில், 2025ல் மலையேற்ற பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தோம்.டாக்டர் விஜய் போஸ் தலைமையில் வாட்ஸ்ஆப் குரூப் அமைத்த போது 60 பேர் ஆர்வம் காட்டினர். சிகரம் ஏறுவது சுலபம் அல்ல. நம்மை உடல்ரீதியாக, மன ரீதியாக தயார்படுத்த வேண்டும். நாங்களே டாக்டர்கள் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தினோம். பல்வேறு காரணங்களால் 52 பேர் வரமுடியாத நிலையில் எட்டு பேர் பயணம் செய்ய திட்டமிட்டோம்.டாக்டர்கள் ஷீலா, ரவிசங்கர், ஷோபனா, பூங்கோதை அமெரிக்காவிலும் டாக்டர் ரஜியா லண்டனிலும், டாக்டர்கள் விஜய்போஸ், வசுதா சென்னையிலும் உள்ளனர். பயணத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே உடற்பயிற்சி, மலையேறுவது போன்று ட்ரெட்மில்லில் செங்குத்து பயிற்சி பெற்றோம். மலையேற்றத்திற்கான ஷூ அணிந்து பழகினோம். இமயமலை செல்ல தேவையான ஆடைகள், அத்தியாவசிய மாத்திரைகளுடன் விமானம் மூலம் நேபாளம் பொக்காரா சென்றடைந்தோம்.பொக்காராவில் தான் இமயமலை பயணம் தொடங்கும் நுழைவுவாயில் உள்ளது. அடிவாரத்திலிருந்து காலை 7:00 மணிக்கு பயணம் தொடங்கினோம். 10:00 மணிக்கு தேநீர் குடித்து இளைப்பாறினோம். மறுபடியும் பாறைகள், சமதளம், மணல்மேடு, பல செங்குத்தான மலையேற்றம் என ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொண்டே மலையேறும் போது புத்தம் புதிய காற்றை சுவாசித்த புத்துணர்ச்சி ஏற்பட்டது. நடந்து செல்லும் பாதையோரத்தில் தண்ணீர் ஓடும் சலசல சத்தம் சங்கீதமாய் இருந்தது. பறவைகளின் சத்தம் காட்டிற்குள் ரம்மியமான சூழலை உருவாக்கியது. எட்டுபேரும் டாக்டர்கள் என்பதை மறந்தோம். மனதுக்குள் பட்டாம்பூச்சியாய் பறந்தோம். திசையெல்லாம் பசுமையின் பரவசத்தோடு அண்ணாந்து பார்த்தால் ஆகாய நீலநிறத்தை வர்ணிக்க வார்த்தை இல்லை.மதியம் 1:30 மணிக்கு சாப்பாடு. நேபாளி பிரட், முட்டை, தால்பாத், கீரை கிடைத்தது. மீண்டும் இரவு 7:00 மணி வரை பயணம். பின் ஓய்வு. அங்கே ஹாலில் சிறு அட்டை தடுப்புகளால் பிரிக்கப்பட்ட சிறு அறைகள் இருந்தன. இருவராக தங்குவது சிரமம். பொது கழிப்பறை மட்டுமே இருந்தது. காஸ் சிலிண்டர் வைத்து சுட வைத்த பின் தான் கழிப்பறை தண்ணீரை கூட பயன்படுத்த முடியும்.வெளிநாடுகளில் நட்சத்திர ஓட்டல்களின் பிரமிப்பில் தங்கிய அனுபவத்தை இமயமலை சூழல் தன்வசப்படுத்திக் கொண்டது. இப்படி ஒரு சூழ்நிலையில், இருக்கும் நிலைமைக்கு ஏற்ப தங்கியது புதிய அனுபவத்தை தந்தது. மலையேறுவதும் ஓய்வெடுப்பதுமாக மூன்று நாட்கள் கடந்தது. நான்காவது நாள் கோரிபானி என்ற மலையை அடைந்து முகாமில் தங்கினோம். அதிகாலை பயணம்
ஐந்தாவது நாள் அதிகாலை 3:00 மணிக்கு பயணத்தை தொடர்ந்தோம். நெற்றியில் டார்ச்லைட் மாட்டிக் கொண்டு நான்கு மணி நேரம் நடந்தோம். இருட்டுக்குள் 400 மீட்டர் தொலைவு செங்குத்தாக இருந்தது பயணம். கடினமான நடைபயணம் முடிவில் பூன்மலையின் உச்சியை அடைந்தோம். இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 3300 மீட்டர் உயரத்தில் உள்ளது. இரவு முடிந்து அதிகாலை தொடங்கும் நேரத்தில் கும்மிருட்டாக இருந்தது. சூரிய உதயத்திற்கு முன், வெண்ணிற கம்பளம் விரித்தது போல சுற்றியுள்ள மலைகள் பனிபொழிவுடன் பரவசம் தந்தது.சூரிய கதிர்கள் மலையின் மீது பட்டபோது தங்க கம்பளம் படர்ந்தது போல பொன்நிறத்தில் நீலவானிற்கும் கீழே தரைக்கும் இடையே அலங்கரித்த காட்சியை பார்த்து மனமும் உடம்பும் சிலிர்த்தது. இப்போதும் கேமரா காட்சியின்றி கண்ணை மூடினால் மனது அக்காட்சியை விரித்து நிற்கிறது. ஆண்டுக்கு ஒரு சிகரம்
அந்த ஒரு உச்சியிலிருந்து பல மலைகளை பார்த்தோம். அன்னபூர்ணா மலை, தவுலகிரி, அன்னபூர்ணா - 2, பிஷ் டைல் மலை, ஹின்சுல், அன்னபூர்ணா - 3, கங்கபூர்ணா மலைச் சிகரங்களை காலை 6:00 மணிக்கு கண்டபோது பரவசம் ஏற்பட்டது. அங்கு நின்று சுற்றியுள்ள மலைகளின் அழகைப் பார்த்த போது, இயற்கை அழகிற்கு முன்னால், நாம் சிறு துளி என தோன்றியது. அங்கிருந்து இரு நாட்கள் நடந்து கீழே இறங்கினோம். 40 ஆண்டு நட்பில் பயணம் முழுவதும் பேசி கொண்டே அடிவாரம் தொட்ட போது, 'ஆண்டுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு சிகரம் ஏற வேண்டும்' தீர்மானம் செய்தது தித்திப்பான அனுபவம் தான். ஆன்மிக உணர்வை அடைந்தோம்
எத்தனையோ நாடுகள் சென்றிருந்தாலும் இமயமலை சிவபெருமானின் அனுக்கிரகம் பெற்ற சிகரம். இந்த மலையேற்றத்தால் கடவுள் அனுகூலம் பெற்றதாக நாங்கள் உணர்ந்தோம். இமயமலை ஏறுவோரில் பெரும்பாலானோர் அமெரிக்கா, ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் தான். 20 வயது இளைஞரும், 70 வயது முதியவரும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பது நமக்கு பாடமாக இருந்தது. எந்த வயதிலும் உடல் ஆரோக்கியத்தை காப்பதை அவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். காட்டிற்குள் சிறு முகாமில் தங்கும் போது எந்த சூழ்நிலையிலும் வாழலாம் என வாழ்க்கை கற்றுத்தரும்.சிகரம் ஏற உடல் ஆரோக்கியம், மன தைரியம் அவசியம். இளைஞர்கள் இணையத்தில் இருந்து விடுபட்டு இமயமலையோ, ஏதாவது ஒரு சிகரமோ நண்பர்களுடன் மலையேற்ற பயணம் செய்தால் உலகம் நமக்காக வைத்துள்ள அதிசயங்களை அனுபவிக்க முடியும். உடலும், மனமும் வலிமை பெறும். உடல் ஆரோக்கியத்தின் அருமை தெரியவரும் என்றார் டாக்டர் பழனியப்பன்.இவரிடம் பேச: 94425 24147.
வாழ்த்துக்கள் நாங்கள் தன்சானியா வில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் எங்கள் குழுவும் இந்த ருக்கும் இருக்கும் மலைகளில் ஏறிஉள்ளோம் குறிப்பாக கிளிமஞ்சாரோ மற்றும் சில