வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துக்கள் சகோதரி
லட்சுமணனுக்காக சஞ்சீவி மலையை பெயர்த்து வந்த அனுமன் போல, இலங்கை பெண்களுக்கு சுயதொழில் கற்றுத் தருவதற்காக தமிழகம் வந்து பல்வேறு பயிற்சி குறித்து ஆய்வு செய்துள்ளார் இலங்கை கொழும்புவைச் சேர்ந்த சுயதொழில் நிறுவனர், அழகுகலை நிபுணர் ஜெகதா. ஆரா என்ற அமைப்பின் மூலம் 850 பெண்களை ஒருங்கிணைத்து அவர்களுக்காக சேவை செய்யும் ஜெகதா, மதுரை வந்த போது மனம் திறந்து பேசினார்.15 ஆண்டுகளாக அழகுக்கலை நிபுணராக உள்ளேன். அதில் நிபுணத்துவம் பெறுவதற்காக திருச்சி வந்து சிறப்பு பயிற்சி பெற்றேன். இலங்கையில் சரியான பயிற்சி இருந்தால் தான் அழகுக்கலை நிலையம் தொடங்க முடியும். வீட்டருகே உள்ள பெண்களுக்கு சிறு சிறு அழகுக்கலை பயிற்சி கற்றுத் தருகிறேன். அம்பாரை மாவட்டம் திருக்கோயில் கிராமத்தில் பெண்கள் பனைஓலைப்பெட்டி தயாரிக்கின்றனர், கோழி வளர்க்கின்றனர். வீட்டுத்தோட்டம், விவசாயம் செய்கின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து நிறுவனம் ஆரம்பித்து ஆரா நலச்சங்கம் துவங்கினேன். இரண்டாண்டுகளாக எங்கள் குழுவில் உள்ள 850 பெண்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குள்ளேயே சிறுநிதியை திரட்டி அந்த நிதியை தேவைப்படுபவர்களுக்கு குறைந்த வட்டிக்கு கொடுக்கிறோம். அந்த வட்டியை வருமானமாக வைத்து அடுத் தடுத்த பெண்களுக்கு கடன் தருகிறோம். சில பெண்கள் தொழில் செய்யாமலும் உள்ளனர். போர் நடந்த காலங்களில் நாங்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்தோம். அதன்பின் வாழ்வாதாரத்திற்காக வெளியே வந்தோம். நான் மட்டும் முன்னேறினால் போதாது, என்னுடன் சேர்ந்த பெண்களும் உயர வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு எந்த மாதிரியான தொழில் வாய்ப்புகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வதற்காக இங்கு குழுவாக வந்தோம். புதிய தொழில்களை இலங்கைக்கு எடுத்துச் சென்று இலங்கைப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே என் நோக்கம். தமிழகத்தில் விவசாயம் சார்ந்த பண்ணைய பயிற்சி, சிறுதானிய மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிப்பு, பனைஓலை மதிப்புக்கூட்டல், மசாலாப்பொடி தயாரிப்பு, ஜெம் கற்கள் தயாரிப்பு பயிற்சி என பல்வேறு வகையான பயிற்சி மையங்களுக்குச் சென்று தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டோம். இலங்கையில் தயாரிக்கும் மசாலா பொடிக்கும் தமிழகத்தில் தயாரிக்கும் மசாலாப்பொடிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சுவையும் மேம்பட்டதாக உள்ளது. எனவே மசாலாப்பொடி தயாரிப்பு பயிற்சியும் பெண்களுக்கு தர திட்டமிட்டுள்ளேன். அழகு என்பது உள்ளமும் தோற்றமும் அழகாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சோஷியல் மீடியா வந்தபின் இலங்கையில் பெண்களிடம் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அழகுக்கலை, அழகுக்கான கிரீம்கள் குறித்த சரியான புரிதலை விழிப்புணர்வாக பெண்களிடம் கொண்டு செல்கிறேன். இதுவும் சேவையின் ஒரு பகுதியாக பார்க்கிறேன் என்றார்.
வாழ்த்துக்கள் சகோதரி