உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / சேவையே என் வாழ்க்கை!

சேவையே என் வாழ்க்கை!

''நானும் அரசு பள்ளியில் படித்த மாணவன் என்பதால் எனக்குள் இருந்த கனவு, ஏக்கம் இன்றைய மாணவர்களுக்கு நனவாகிவிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடர்ந்து சேவையாற்றி வருகிறேன். நான் உயிருடன் இருக்கும்போதே என்னால் பலர் பலன் அடைவது போல், நான் இறந்த பிறகும் பலன் அடைய வேண்டும் என்பதற்காக என் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உள்ளேன்'' என சிரித்தவாறே பேசுகிறார் 40 வயதான சிவசங்கரன். மதுரை கடச்சனேந்தலில் வசிக்கும் இவர், ஐ.டி., நிறுவனம் நடத்துகிறார். அதோடு சமூக சேவையிலும் சிறு வயதிலிருந்தே ஈடுபட்டு வருகிறார். ரோட்டரி உட்பட பல்வேறு அமைப்புகளில் பல பொறுப்புகளை வகித்து வருகிறார். தினமும் ஏதாவது சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வரும் சிவசங்கரன், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்... ''அரசு பள்ளி மாணவர்களுக்கு விமானத்தில் பறப்பது படிக்கும் வயதில் கிடைப்பது அரிது. பாடங்களில் விமான பயணம் பற்றி படித்திருப்பார்கள். அதை நிஜமாக்க மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களை விமானத்தில் சென்னை அழைத்துச்சென்றேன். எதிர்காலத்தில் அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என்பதற்காக சட்டசபைக்கு சிறப்பு அனுமதி பெற்று மாணவர்களை அழைத்துச்சென்றேன். 'டிவி'யில் மட்டுமே பார்த்த சட்டசபையை நேரில் பார்த்தபோது அவர்கள் கண்களில் ஆச்சரியம் தெரிந்தது. விமான பயணத்திலும் இந்த ஆச்சரியத்தை அவர்களது கண்களில் கண்டேன். மற்றொரு மாநகராட்சி பள்ளி மாணவர்களை இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அழைத்துச் சென்று, ராக்கெட் விண்ணில் பாய்வது குறித்து காண்பித்தபோது பல மாணவர்கள் 'இப்படிதான் ராக்கெட்டை விடுவாங்களா' என வெள்ளந்தியாக கேட்டனர். எனது சேவை மாணவர்களை நோக்கி மட்டுமில்லாமல் பெண்கள் உடல்நலத்தையும் நோக்கி திரும்பியது. தொடர்ந்து மருத்துவ முகாம் நடத்தி வருகிறேன். இதுவரை 60 பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு ஆரம்பக்கட்ட சிகிச்சை அளித்ததில் பலர் குணமடைந்துவிட்டனர். சமீபத்தில் 13 வயது சிறுவனின் இதய பிரச்னைக்கு அறுவைசிகிச்சை நடந்தது. அதை முற்றிலும் இலவசமாக செய்து கொடுக்க ஏற்பாடு செய்தேன். நான் சார்ந்திருக்கும் ரோட்டரி உறுப்பினர்கள், பிற அமைப்புகளின் நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்த சேவையை தொடர்ந்திருக்க முடியாது. அவர்கள் மூலம் ஊமச்சிக்குளம் அரசு பள்ளியில் சிதிலமடைந்த கழிப்பறைகளை சீரமைத்தேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நடுகிறேன். இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளேன். இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்று தந்து கொண்டிருக்கிறேன். இதற்காக எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை பெற்றுத்தந்ததை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன் என்றார். சேவையே வாழ்க்கை என்று வாழும் சிவசங்கரனை பாராட்ட 99449 74003


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை