உலக விஷயங்கள் தமிழில்! டென்மார்க் எழுத்தாளர் றின்னோஸா
தமிழ் மீதும், எழுத்து மீதும் ஆர்வம் காரணமாக தனியார் சர்வதேச வங்கி உயர் அதிகாரியான றின்னோஸா எழுத்தாளராகவும் பயணிக்கிறார். இவர் டென்மார்க்கில் வாழும் தமிழர்.நம் மாநிலம், நமது நாடு என நம்மை சுற்றிய விஷயங்களை மட்டுமே தெரிந்து கொள்ள விரும்பும் நாம் உலக வரலாறுகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. தற்போதைய இணைய உலகில் வீடியோ வாயிலாக உலக வரலாறுகளை தெரிந்து கொண்டாலும் எழுத்தின் வாயிலாக பல வரலாறுகள் நம் மொழியில் இல்லை என்பதே உண்மை.ஐரோப்பிய வரலாறுகள், தொழில்நுட்பங்கள், பொருளாதாரம் என பலவற்றை ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் அறிந்து கொள்ளலாம். ஆனால் நம் அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ளும் பொருட்டு தமிழில் ஐரோப்பிய வரலாறு சார்ந்த புத்தகங்களை எழுதி வருகிறார் றின்னோஸா.தமிழில் பள்ளிப்படிப்பு முடித்த இவர் உயர்கல்விக்காக யு.கே., சென்றார். உயர்கல்வி முடிந்ததும் வங்கி அதிகாரியாக தன் பணியை தொடங்கி உள்ளார். சிறு வயதிலிருந்தே தமிழ் மீதும் எழுத்து மீதும் ஆர்வம் கொண்ட றின்னோஸா பள்ளி காலங்களில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார்.இலக்கியம் சார்ந்த விவாத மேடைகளிலும் பங்கேற்றுள்ளார். இவரின் பல மொழி வாசிப்பு பழக்கம் பார்வையை விரிவாக்கி எழுத்தார்வத்தை அதிகப்படுத்தியது. பல்வேறு இதழ்களில் தொடர்கதை எழுதியுள்ளார். வேலை, குடும்பம், குழந்தை என பரபரப்பான வாழ்க்கை என்றாலுமே வரலாறு, சர்வதேச, புவிசார் அரசியல் மீது கொண்ட ஆர்வம் இவரின் அறிவுத்தேடலை அதிகப்படுத்தியது. அதன் விளைவாக சொல்லப்படாத வரலாறு, உலகப்போர்களும் ஐரோப்பிய வரலாறுகளும், ஐரோப்பிய புராணங்களும் நம்பிக்கைகளும், யூரோ டெக் போன்ற புத்தங்களை எழுதி உள்ளார்.றின் னோஸா கூறியதாவது: தமிழகம், இந்தியா உட்பட நமது மண் சார்ந்தவை பற்றி பலரும் தமிழில் எழுதி உள்ளனர். ஆனால் அதைத்தாண்டி இவ்வுலகில் நிறைய உள்ளது. அவற்றை தெரிந்துகொள்ள புத்தகங்கள் தமிழில் உள்ளதா என்றால் அரிதான ஒன்றே. இணையத்திலும் பெரும்பாலான தகவல்கள், தரவுகளும் ஆங்கிலத்திலும், மேற்கத்திய மொழிகளிலுமே இருக்கின்றன.உலக விஷயங்களை தமிழக மக்கள் தமிழில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இந்த புத்தகங்கள் உருவாக காரணம். எழுத்து தான் அடுத்த தலைமுறைகளிடம் நம்மை கொண்டு சேர்க்கும். வெறும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மட்டும் அதற்கு போதாது. மொழி அனைத்து கோணங்களிலும் பார்க்கப்பட வேண்டும். இந்த ஆசைகள், ஆதங்கங்கள் தான் நான் தொடர்ந்து எழுத முக்கிய காரணம்.என் குடும்பம், நான் சந்தித்த மனிதர்கள் யாவருமே பெண் என்பதால் சவால்கள் இருக்குமென எந்த இடத்திலும் வாய்ப்பை மறுக்கவில்லை. அனைவரும் ஊக்கப்படுத்தியன் விளைவுதான் பல இடங்களுக்கு பயணம் செய்து களஆய்வு செய்து புத்தகமாக எழுத முடிந்தது. ஆணா, பெண்ணா என்பது முக்கியமில்லை. திறமை இருந்தால், ஆர்வமும் இருந்தால் இந்த உலகம் அதற்கான வாய்ப்பை கட்டாயம் கொடுக்கும் என்றார்.