உள்ளூர் செய்திகள்

லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

லேகோஸ், நைஜீரியா: மேற்கு ஆப்ரிக்கா நைஜீரியா நாட்டின் வணிக தலைநகரமான லேகோஸில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 3ம் தேதி, ஞாயிறு அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.ஆகஸ்ட் 20ம் தேதி பாலாலய கும்பாபிஷேகத்தில் விக்கிரக மூர்த்திகளின் சக்தியை ஒரு புகைப்படத்திற்கு மாற்றப்பட்டு விக்ரகங்கள் தங்கள் ஸ்தாபனத்திலிருந்து எடுக்கப்பட்டது. பின் முறையாக முதல் ஐந்து தினங்கள் தான்யாதி வாசத்திலும், இரண்டாவது மூன்று தினங்கள் தனாதிவாசத்திலும், மூன்றாவது ஐந்து தினங்கள் ஜலாதிவாசத்திலும் செய்விக்கப்பட்பட்டது. தான்யாதி வாசத்தில் இருக்கும் பொழுது பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த ரூபாய்/நயரா நோட்டுக்களை விக்ரஹகத்தின் பாதங்களில் சமர்ப்பித்து மகிழ்ச்சி அடைந்தனர். ஜலாதிவாசம் ஒட்டிய ஐந்து தினங்களும் பக்தர்களுக்கு சுவாமி சிலையை தொட்டு சுத்தம் செய்கின்ற பாக்கியம் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 30 - புதன்கிழமை மாலை 5 மணி அளவில் எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, தன பூஜையுடன் கும்பாபிஷேக ஹோமங்கள் துவங்கின. ஆகஸ்ட் 31 - வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவிய ஆஹூதி நடைபெற்றது. ஆகஸ்ட் 31 - வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு பிரவேசபலி, வாஸ்து சாந்தி பூரணாஹூதி செய்து இந்தியாவிலிருந்து பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்ட சிவாச்சாரியார்கள் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்கள். கூடியிருந்த பெண்கள் அஷ்டதிக் பாலர்களுக்கு சாந்தி செய்யக்கூடிய பொருட்களை தட்டில் ஏந்தி கோயிலை வலம் வரும் காட்சி விழா கோலத்தை ஏற்படுத்தியது. செப்டம்பர் 1 - வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கோ பூஜை, பரிவார யாகசாலை நிர்மாணம், அக்னிசங்கரஹணம், தீர்த்த சங்கரஹணம், தைல காப்பு சாற்றும் வைபவம் ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமை பெண்கள் பச்சை புடவை அணிந்து இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். செப்டம்பர் 1 – வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணி அளவில் விக்னேஸ்வர பூஜை செய்து ரக்ஷாபந்தனம் அணிவித்து, யாகசாலை பிரவேசம் செய்து முதற்கால யாக பூஜையை துவங்கினார்கள். செப்டம்பர் 2 - சனிக்கிழமை காலை 8 மணிக்கு உபயதாரர்கள் சங்கல்பத்துடன் இரண்டாம் கால யாக பூஜை மதியம் 12 மணி வரை நடைபெற்றது. பெண்கள் திருப்புகழின் பாடல் தொகுப்பை வழங்கினார்கள். பின் மாலை 3:30 மணி அளவில் விமான கலச ஸ்தாபனமும், மூர்த்தி எந்திர ஸ்தாபனமும் நடந்தேறியது. கும்பாபிஷேகத்திற்காக குழந்தைகள் முருகன் மீது பாடியும் ஆடியும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தி கூடியிருந்தவர்களின் நெஞ்சில் பரவசத்தை பிரதிபலித்தனர். பெரியவர்களும் வில்லுப்பாட்டு பாடி கூடியிருந்தவர்களை குதூகலத்தில் ஆழ்த்தினர். சுமார் ஆறு மணி அளவில் அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல் நிகழ்ந்தது. பின் மூன்றாம் கால யாக பூஜை, பிம்பசுத்தி செய்து பூர்ணஹூதியுடன் நிறைவடைந்தது. ஆவணி மாதம் 17ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை (3-9-23) சதுர்த்தி திதி, ரேவதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் சுமார் 10 மணி அளவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 500கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகனின் நன்னருளை பெற்றனர். கோயில் வளாகம் யாகசாலையை சுற்றி பக்தர்கள் நிறைந்து 'முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!' என்ற முழக்கத்துடன் தெய்வீக ஒலி கமழ மழையும் இதே முழக்கத்துடன் கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்தது. பூர்ண கும்ப நீரை கும்பத்தில் விட்டு கும்பாபிஷேகம் செய்யும் வேளை கனமழை கொட்டிய சகுனத்தை இன்னும் 12 வருடம் அடுத்த கும்பாபிஷேகம் வரை லேகோஸ் மக்கள் நினைவு கூறுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஐந்து நாள் வைபவத்தின் ஒவ்வொரு பொழுதின் வழிபாட்டின் போதும், கலந்து கொண்ட அத்தனை பக்தர்களுக்கும் பிரசாதம் அளிக்கப்பட்டது. முக்கிய விருந்தாளர்களையும், நிர்வாகக்குழு உறுப்பினர்களையும் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தவும் செய்தார்கள். இந்திய தூதரக உயர் ஆணையத்தின் இரண்டாம் செயலாளர் மகேஷ் இதில் கலந்து கொண்டார். மற்ற இந்திய சங்கத்தின் தலைவர்களும், நைஜீரியா தமிழ் சங்கத்தை சார்ந்தவர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. 2012ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்திற்கு பிரத்தியேகமாக, அதனின் நினைவாக புத்தகத்தை வெளியிட்டதைப் போல் இப்பொழுது 2023 நினைவு புத்தகத்தை கும்பாபிஷேகத்தன்று கோயில் நிர்வாகம் வெளியிட்டது.- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா ஆனந்தன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்