போட்ஸ்வானாவில் புதிய அவதாரம் எடுக்கும் இஸ்கான் கோயில்
தல வரலாறு : போட்ஸ்வானாவின் கேபரோன் பகுதியில் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக இஸ்கான் கோயில் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். துவக்கத்தில் தலீப் என்பவரின் இல்லத்தில் செயல்பட்டு வந்த இக்கோயிலுக்கு, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு போட்ஸ்வானா அரசால் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்தியாவிலிருந்து வந்த ஸ்தாபதி வலசிங்கம் மற்றும் அவரது குழுவினரால் பாலாஜி திருக்கோயில் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. பாலாஜி கோயிலின் நேர்த்தியான கட்டிடக் கலையால் ஈர்க்கப்பட்ட இஸ்கான் கோயில் நிர்வாகிகள், ஸ்தாபதி வலசிங்கத்தை அனுகி, இஸ்கான் கோயிலையும் கட்டித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
சுமார் 5000 சதுர மீட்டரில் இஸ்கான் கோயில் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. கிருஷ்ணரும், பலராமரும் இக்கோயிலின் முக்கிய தெய்வங்களாக அமைக்கப்பட்டனர். அவற்றுடன் பல்வேறு தெய்வங்களும் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கோயிலின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள 10 தூண்களில், வெங்கடேஷ்வரரின் தசாவதார கோலங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கோயிலின் முக்கிய தெய்வங்களான கிருஷ்ணர் மற்றும் பலராமரின் விக்ரஹங்கள், ஏற்கனவே தலீப்பின் இல்லத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த விக்ரஹங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கோயிலில் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிற தெய்வங்களின் விக்ரஹங்களும் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட உள்ளது.
2007ம் ஆண்டின் இறுதியில் துவங்கப்பட்ட இக்கோயிலின் பணிகள், நிதி பற்றாக்குறை காரணமாக சிறிது காலம் தடைபட்டது. பின்னர் இஸ்கான் அமைப்பின் மூலம் உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, திருப்பணிக்கான நிதி திரட்டப்பட்டது. இக்கோயிலின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த 6 மாத காலங்களுக்குள் இக்கோயிலின் திருப்பணிகள் முற்றிலும் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தினமலர் வாசகர் செல்வராஜ் பிரபு