உள்ளூர் செய்திகள்

ஜப்பானில் உலகளவிலான தமிழ்த்தேர்வு

ஜப்பான் தமிழ்ச்சங்கம் நடத்தி வரும் தமிழாரம் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் உலகளாவிய அளவில் தமிழ்நாடு அரசின் தமிழிணையக்கல்விக்கழகத்தால் நடத்தப்பெறும் அகரம் நிலைக்கான தமிழ்த்தேர்வு எழுதினார்கள். தமிழ்நாடு அரசின் தமிழிணையக் கல்விக்கழகம் அயலகத் தமிழர்களுக்காக உருவாக்கிய பாடத்திட்டத்தின் கீழ், நேரடி மற்றும் இணையவழி வகுப்புகளின் மூலம், ஜப்பானில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஜப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழாரம் பள்ளியின் மூலம் தமிழ் கற்பிக்கிப்படுகிறது. அதன் முதற்கட்டமாக, டோக்கியோ மாநகர் சேய்சின்சோ மையத்தில் பயிலும் மாணவர்கள் இரா.கிரிஷாந்த், தேவ்மகத், ஆறுமுகப் பெருமாள், மித்ரன், ரா.லா.ரிதன்யா ஆகியோர் தமிழ்த்தேர்வு எழுதினர். இந்த மாணவர்கள் தேர்வுக்கு சிறப்பாக தயாராகி எழுதுவதில் முக்கிய பங்காற்றி ஊக்கமளித்த ஆசிரியர் சரண்யா இளங்கோவுக்கு -ஜப்பான் தமிழ்ச்சங்கம் பாராட்டு தெரிவித்தது. “உலகின் எந்த மூலையிலும் வாழும் தமிழ்ப்பிள்ளைகள் தமிழ் கற்க முடியாமல் போகக் கூடாது; அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்” — என்பது ஜப்பான் தமிழ்ச்சங்கத்தின் தலையாய நோக்கம். இந்த உயர்ந்த நோக்கை செயல்படுத்துவதற்கு தேவையான பாடத்திட்டத்தையும், தமிழ்த்தேர்வு நடத்திட வினாத்தாள்களையும் அனுப்பிவைத்த தமிழ்நாடு அரசின் தமிழிணையக் கல்விக்கழகத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. - ஹாங்காங்கிலிருந்து நமது செய்தியாளர் டாக்டர் மெய்.சித்ரா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !