உள்ளூர் செய்திகள்

"காலத்திற்கு முதற்பட்ட திருக்கோணேஸ்வரம்"

இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் தலைநகரான திருக்கோணமலையில் கால எல்லையற்ற ஆலயம் திருக்கோணேஸ்வரம். வரலாற்று புலன்களில் இருந்து திருக்கோணேஸ்வரத்தை பார்ப்போம். கவிராசர் இயற்றிய கோணேசர் கல்வெட்டின்படி கோணநாதர் கோயிற்றிருப் பணிக்கு வேண்டிய பொருட்களை கஜபாகு மன்னன் என்பவன் சேமித்து வைத்தானென அறிகின்றோம். இவ்வரசன் அனுராதபுரியிலிருந்து கி. பி. 114 தொடக்கம் 136 வரையும் ஆட்சி புரிந்தான். இவனை முதலாம் கஜபாகு என இலங்கை வரலாற்று ஆசிரியர்கள் அழைப்பார்கள். சேரன் செங்குட்டுவன் வஞ்சியில் பத்தினித்தெய்வமாகிய கண்ணகிக்கு கோவிலெடுத்து விழா வெடுத்த காலத்தில் அவ்விழாவிற்குக் கடல் சூழ் இலங்கை கயவாகுவும் சென்றிருந்தாரென்று இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தால் அறிகின்றோம். சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்தவன் கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பதும் அவனே முதலாம் கயவாகு என்பதும் சரித்திரச் செய்தியாகும்.கவிராசர் உரைநடையில் எழுதிய கல்வெட்டுப் பகுதியில் 'திரு மருவு கயவாகு மகாராசனும் தனது படை மனுஷரும் மகாவலிகங்கை அருகாக வெகு விசாலமான வெளியுந்திருத்தி அதற்கடுத்த அணைகளுங் கட்டுவித்து, 1950 அவுண நெல் விதைப்புத் தரையும் திட்டம் பண்ணினார். பத்துக்கொன்று அடையும் எடுப்பித்து அதற்காக தென்னை 12,000, புன்னை 12,000, இலுப்பை 12,000, கமுகு 12,000, ஏரண்டம் 12.000, பசுவினம் 12,000, மேதியினம் 12,000மும், பல புஷ்பச் சோலைகளும் செய்வித்து' என்று கூறப்பட்டுள்ளது.திருக்கோணேசராலயக் கருவூலக் கணக்கில் மூன்றாவதாகப் பெயர் பதியப் பெற்றவன் கயவாகு மன்னனென்று கல்வெட்டுக் கூறுகின்றது. மேலும் சோழநாட்டிலிருந்து இராயர் வரிப்பத்தார், தானத்தார், கொல்லன், குயவன், நாவிதன், ஏகாலி வள்ளுவன் இவர்களை வரவழைப்பித்துக் குடிநிலம், விழைபுலம் முதலான சர்வ காரியங்களும் கொடுத்து கோணேசர் கோவில் தொண்டுக்கு அமர்த்தினான். கயவாகு மன்னன் கோணேசர் ஆலயத்தை இடிக்க வந்தானென்றும், இரண்டு கண்களையும் இழந்தானென்றும், பின்னர் கோணேசர் அருளால் கண்ணொளி பெற்றானென்றும் கல்வெட்டால் அறிகின்றோம். கோணேசர் கோவிலைக் கயவாகு அழிக்க வந்தான் என்பதால் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே கோவில் கட்டபட்டிருத்தல் வேண்டும். நாள் வழிபாட்டிற்குக் குளக்கோட்டன் காலத்தில் இரண்டவுணமும், கயவாகு காலத்தில் மூன்றவுணமும் விதிக்கப்பட்டிருந்தமையால் அக் காலத்திலிருந்த கோவில் மிக பெரிதாக இருக்க வேண்டும் என்பதும், நாள்வழிபாடும் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருத்தல் வேண்டுமென்பதும் அறியக்கிடக்கின்றது.மகாசேனன் என்னும் சிங்கள அரசன் அநுராதபுரியைத் தலைநகராகக் கொண்டு இலங்கையின் ஒரு பகுதியாகிய இராசரட்டை என்னும் நாட்டை ஆட்சிசெய்தான். இம்மன்னன் மணிகீர விகாரையையும், வேறு மூன்று விகாரையையும் கட்டினான். சைவ சமயக் கடவுளர்களின் கோயில்களை இடித்தான். இவன் இடித்தது, திருக்கோணமலையிலிருந்த கோணேசர் ஆலயங்களேயாம். இச்செய்தி தக்கன கைலாசம், கோணேசர் கல்வெட்டு போன்ற நூல்களில் கூறப்படவில்லை. மகாவம்சத்தின் படி திருக்கோணேசர் ஆலயத்தை மகாசேனன் இடித்தான் என்பதை ஏற்றுக் கொள்வதாயின், பிற்காலத்தில் அக்கோவிலை யாராவது திருப்பணி செய்திருக்க வேண்டும், கோவிலை மீண்டும் யார் திருப்பணி செய்தார்களென்பது தெரியவில்லை. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் சில நூற்றாண்டுகள் தமிழக வரலாறு இருண்ட கால வரலாற்றுப் பகுதியாக இருக்கின்றதென்று தமிழக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இதனை நோக்குமிடத்து திருக்கோனேசர் ஆலய வரலாற்றுப் பகுதியிலும் ஓர் இருண்ட காலம் வந்திருக்கின்றதென்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கின்றது.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் 'கோணமலையமர்ந்த பெருமான்' மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். இப்பதிகத்தில் ஏழாவது பாடல் மறைந்து விட்டது. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் 'குரைகடலோதம் நித்திலங் கொழிக்குங் கோணமாமலை யமர்ந்தாரென்றும்', 'குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும் கோணமாமலை யமர்ந்தாரென்றும்', 'வன்திரைகள் கரையிடைச் சேர்க்கும் கோணமாமலை யமர்ந்தாரென்றும்', 'கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை யமர்ந்தாரென்றும்', 'விருந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கைவன் செருந்தி செண்பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை யமர்ந்தாரென்றும்', 'துன்றுமொண் பௌவம் மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரை பல மோதிக் குன்று மொண்கானல் வாசம் வந்துலவுங் கோணமாமலையமர்ந்தாரென்றும்' கூறியுள்ளார்.இச் செய்திகளை ஆராய்வதால் திருக்கோணமலை ஓர் வர்த்தக நகரமாக இருந்ததென்பதும், இந்நகரில் குடிசனங்கள் நெருக்கமாக வாழ்ந்தார்களென்பதும், கோவில் மலையில் கடற்கரையை அடுத்திருந்த தென்பதும், கோவிலை அடுத்து பெரிய பூஞ்சோலை இருந்ததென்பதும், மலையும், கடலும், சோலையும் சூழ்ந்த பகுதி யென்பதும் புலனாகின்றது. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் திருக்கோணேச ஆலயமும் திருக்கோணமலை நகரும் சிறப்போடு விளங்கியதென்பதில் ஐயமில்லை. இன்றும் பிறட்றிக் கோட்டையுள் பழைய கோவிலின் அழிபாட்டுச் சின்னங்களைக் காணலாம். 1944ம் ஆண்டு இரண்டு பல்லவ சிற்பங்கள் மண்ணில் புதைந்திருந்து எடுக்கப்பட்டன. ஒன்று விஷ்ணு, மற்றையது இலக்குமி சிலையாகும். இதனால் கோணேசர் ஆலயத்தோடு பல்லவர்களது தொடர்பும் இருந்தத ததென்பதனை பல்லவ சிற்ப முறையில் அமைந்த தூண்கள் உணர்த்துகின்றன. கோட்டையுள் இரண்டு தூண்கள் குகைவாயிலிலும் மற்றையது மலையின் உச்சியிலும் காணப்படுகின்றது. இவற்றினை ஆராயுமிடத்து பல்லவ ஆட்சி கி. பி நாலாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நாற்றாண்டு வரை சிறப்புற்று, கடல்கடந்த நாடுகளுக்கும் பரவியிருந்த காலத்தில் பல்லவ மன்னர்கள் திருக்கோணேசர் ஆலயத்திலும் திருப்பணி செய்தார்களென்பது அறியக்கிடக்கின்றது.முதல் இராச இராச சோழன் ஆட்சிக் காலத்தில் சோழப்பேரரசு சிறப்பு நிலையடைந்தது. முதல் இராச இராச சோழனுடைய கி.பி. 1010ம் ஆண்டுக் கல்வெட்டில் 'எண்திசை புகழ்தர ஈழமண்டலமும்,” என்றும், முதல் இராசேந்திர சோழனுடைய கி.பி.1035 - 1036ம் ஆண்டுக் கல்வெட்டில் 'பொருகடல் ஈழத்து அரசர் தம் முடியும்” என்றும் ஈழநாடு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. முதல் இராச இராச சோழனும், முதல் இராசேந்திர சோழனும் தமிழகத்திலும், ஈழத்திலும் சிவாலயங்கள் எடுத்தார்கள். இன்றும் கோட்டையுள் சோழர் சிற்ப முறையில் அமைந்த தூண்கள் காணப்படுகின்றன. சோழர் காலத்துத் திருவுருவங்கள் இன்று கோணேசர் ஆலயத்தில் இருக்கின்றன. ஆகவே முதல் இராச இராச சோழன் காலத்திலும், முதல் இராசேந்திரன் காலத்திலும் கோணேசர் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றிருக்கும்.சடையவர்மன் வீரபாண்டியன், சடைய வர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் வாழ்ந்தவனாவான். இவன் கி. பி. 1253 முதல் 1268 வரையில் சோழநாடு, நடுநாடு, தொண்டை நாடுகளில் அரசப்பிரதிநிதியாக இருந்து அரசாண்டவன். 'கொங்கீழங் கொண்டு கொடுவடுகு கோடழித்து' என்று தொடங்கும் மெய்கீர்த்தியில் இம்மன்னன் கொங்கு நாடு, ஈழநாடு வெற்றிகொண்ட செய்திகள் காணப்படுகின்றன. 'திருமகள் வளரும்' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியில் இவன் ஈழநாட்டில் போர் புரிந்து நாட்டரசருள் ஒருவனைக் கொன்று மற்றொருவனுக்கு முடிசூட்டியதும் திருக்கோணமலை, திரிகூடகிரி என்பவற்றில் கயற்கொடி பொறித்ததும் காணப்படுகின்றன என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறை விரிவுரையாளராயிருந்த சதாசிவபண்டாரத்தார் பாண்டியர் வரலாற்றில் (பக் 137 - 139) கூறியுள்ளார்.தமிழ் நாட்டிலும், ஆந்திர, மலையாள, கன்னட தேசங்களிலும் வெற்றிமேல் வெற்றியடைந்து கி. பி. 1251-1262 வரை சக்ராதிபத்தியம் செலுத்திப் புது அரசியல்களை நாட்டியவன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனாவான். இவனுடன் சக அரசனாக இருந்தவன் புவனேக வீரபாண்டியன். இவனுக்கு இப்பெயர் வந்த காரணம் இக்காலத்துச் சிங்கள அரசனாக இருந்த முதலாம் புவனேக கொண்டதற்கு அறிகுறியாக 'ஸ்ரீசங்கபோதி புவனேகபாகு' வென்னும் பட்டத்தையும் பாகுவை வெற்றி வகித்துக் கொண்டதேயாம். இதன் உண்மை வீரபாண்டியன் மெய்கீர்த்தி கூறும் குமியாமலைச் சாசனத்தில்'.... முழங்கு களி றேறிப் பார் முழுதறிய ஊர்வலஞ் செய்வித்...' என்ற தொடராலும், மகாவம்சத்தில் முதலாம் புவனேகபாகு என்ற அரசனைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களோடு மேற்படி தொடரை ஒப்புநோக்குதலாலும், சிதம்பர மேலைக் கோபுர வாசற் சாசனத்தில் 'புவனேக வீர .... கொற் கைக் காவல” என்று வீரபாண்டியன் விளக்கப்படுதலாலும், புவனேக வீரன் சாந்தி யென ஒரு விழாத் தமிழ் நாட்டில் சில இடங்களில் நடந்ததாகச் சில சாசனங்கள் கூறுதலாலும் யூகித்தறியக் கிடக்கின்றது. இவ்வீரபாண்டியனும் முந்திய அரசர்கள் போலக் கோணேசர் கோயிலுக்குரிய நிலங்களை இறை கடமை இல்லாதன வாக்கினான் என்பது மேற்படி குடுமியாமலைச் சாசனத்தில் 'திருக்கோண அலைவரப் பாடன் கழித்து வழங்கியருளி' என்ற தொடராலும், அம்மலையில் தனது கயல் இலச்சினையைப் பொறித்தான் என்பதும், 'காணாமன்னவர் கண்டு கண்டொடுங்க கோனாமலையினும் திரிகூட கிரியினும் உருகெழு கொடிமிசை இருகயலெழுநீ' என்ற தொடராலும் தெரியக் கிடக்கின்றன என்று கதிரைமலைப்பள்ளு என்னும் நூலில் (பக்கம் 108 -110) வி.குமாரசாமி கூறுகின்றார்.சடையவர்மன் வீரபாண்டியன் இலங்கைக்கு எதிராகப் போர் செய்து இலங்கை யில் அரசாண்ட அரசர்கள் இருவரில் ஒருவரை அழித்து அம்மன்னனின் படையையும் தேரையும், செல்வங்களையும் கைப்பற்றிக் கோணாமலையில் இரு கயற்கொடியை பொறித்தானென்றும் டாக்டர். ஜி. சி. மென்டிஸ் இலங்கையின் பூர்வீக வரலாற்றில் (பக். 94) கூறுகின்றார். ஆகவே சடையவர்மன் வீரபாண்டியனும் திருக்கோணேச்சர ஆலயத்தைத் திருப்பணி செய்து கோவிலுக்கு நிலமும் இறையிலி செய்திருக் கின்றான் என்பது தெளிவாகின்றது.அருணகிரிநாதர் கி. பி. பதினைந்தாம் நூறாண்டில் வாழ்ந்தவர். இவர் சிறந்த முருக அடியார். பதினாயிரம் திருப்புகழ் பாடியிருக்கின்றார். சில நூறு பாடல்களே கிடைத்துள்ளன. அருணகிரிநாதர் 'விலைக்கு மேனியீ லணிக் கோவை மேகலை' என்று தொடங்கும் திருப்புகழில், 'திருக்கொணாமலை தலத்தாரு கோபுர' என்று திருக்கோணேசர் ஆலயத்தைக் கூறுகின்றார்.யாழ்ப்பானத்தையாண்ட ஆரியச் சக்கரவர்த்திகளில் ஒருவரான ஜெயவீர சிங்கை ஆரியனான ஐந்தாம் செகராசசேகரன் இலங்கை முழுவதையும் தன்னடி பணியச் செய்தான். ஏழுவன்னிக் குறிச்சிப் பகுதிகளும், கோட்டையரசனும் அவனுக்குத் நிறைகொடுத்து ஆண்டனர். இவன் சிறந்த கல்விமானாகவும் விளங்கினான். இவன் காலத்தில் செகராசசேகரம் என்ற வைத்திய நூல், தெட்சண கைலாசபுராணம், செகராசசேகரம் என்ற சோதிட நூல் முதலியன அக்கால வித்துவான்களால் இயற்றப்பட்டன. இவன் கோணநாயகரைத் தரிசித்துப் பெருந் திரவியங்களைக் தொடுத்து கோவிலுக்கு நூல்வாங்கி ஒப்புவித்தற்காக திரியாய் ஊரை கோவிலுக்கு நிவந்தமாக்கினான். சி. எஸ். நவரெத்தினம் இவன் காலம் கி. பி. 1380-1410எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படியே யாழ்ப்பாண அரசனான ஆராம் பரராசசேகரனும் கோணேசர் கோவிலைத் தரிசித்துப் பொன் வழங்கினானெனத் திருக்கோணாசல புராணம் “அன்ன நாளிடையாழிகு...' மூலம் கூறுகின்றது.யாழ்ப்பாணத்தை அரசாண்ட குணவீரசிங்கை ஆரியன் என்ற ஐந்தாம் பரராசசேகரன் (கி. பி. 1410 1440) இராமேஸ்வரத்தில் உள்ள கற்பக்கிரசு விமானத்தைக் கட்டினானென அதன் அடியிற் காணப்படும் கல்வெட்டினால் அறியலாம். யாழ்ப்பாணத்து இரசர்கள் இராமேஸ்வரம் ஆலயத்தின் அறநிலைப் பாதுகாவலராக இருந்திருக்கின்ரார்கள். இத்திருப்பணிக்கு வேண்டிய கருங்கற்கள் திருக்கோணமலையில் சிற்ப வேலை செய்யப்பட்டு பொருந்துமளவிற்கு சரிபார்த்து எண்ணிடப்பட்டுக் கடல் மார்க்கமாக அனுப்பப்பட்டது.திருக்கோணேசர் ஆலயம் கி. பி. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டுவரை பல மன்னர்களாலும், திருப்பணி செய்யப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகின்றோம். கால எல்லையற்றது திருக்கோணேஸ்வரம்!- நமது செய்தியாளர் ஞானகுணாளன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !