உள்ளூர் செய்திகள்

"வள்ளுவரும் வாசுகியும்" - செம்மொழி அறக்கட்டளையின் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை காதலர் தினத்தை முன்னிட்டு 'வள்ளுவரும் வாசுகியும்' என்ற தலைப்பில் சிறப்பாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வின் தொடக்கத்தில், அறக்கட்டளையின் தலைவர் செம்மொழி மாலா கோபால் அனைவரையும் அன்போடு வரவேற்று உரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, அறக்கட்டளையின் நோக்கங்கள், சிறப்பம்சங்கள், நடைமுறையில் உள்ள திட்டங்கள், மற்றும் இதுவரை அடைந்த சாதனைகள் பற்றி விரிவாக விளக்கினார். இந்த ஆண்டின் மையக் கரு - 'குறிப்பறிதல்' (திருக்குறளின் 110வது அதிகாரம்). இதனை மையமாகக் கொண்டு, பல விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன. 'குறிப்பறிதலில் சாலச்சிறந்தவர் யார்? கணவரா? மனைவியா?' என்ற தீவிரமான விவாதம், 'ராஜா - ராணி' எனும் கேள்வி-பதில் போட்டி போன்ற நிகழ்வுகள், அனைவரையும் ஈர்த்தன. இந்நிகழ்வில் விவாத மேடை பார்வையாளர்களையும், பங்கேற்பாளர்களையும் ஒருசேர ஈர்த்தது. சுவாரசியமான கருத்துகளும், நகைச்சுவை மிளிர்ந்த தருணங்களும் நிகழ்வை இன்னும் சிறப்பாக்கின. 'ராஜா - ராணி' கேள்வி-பதில் விளையாட்டில், கணவர்-மனைவி ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண, இருவரும் பதில் சொல்லும் விதம் மிகுந்த மகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. நிகழ்வின் முக்கிய அம்சமாக, பங்கேற்பாளர்கள், பேச்சாளர்கள், மற்றும் போட்டியாளர்கள் அனைவரும் பாராட்டப்பட்டனர். விருந்தினர்கள், நிகழ்ச்சியின்போது மட்டுமல்ல, இரவு உணவின்போது கூட நிகழ்வின் இனிய தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர். இத்தருணத்தில், Dr. ராம் ரெட்டி - பத்மா ரெட்டி தம்பதியினர் இந்த ஆண்டின் சிறந்த தம்பதியராக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் இனிமையான அனுபவமாக அமைந்த இந்த நிகழ்ச்சி, திருக்குறளின் ஆழத்தையும், தம்பதியர் உறவின் முக்கியத்துவத்தையும் மையமாகக் கொண்டு, அனைவருக்கும் நினைவில் நிற்கும் அனுபவமாக இருந்தது. - நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்