உள்ளூர் செய்திகள்

பொன்விழா காணும் பாரதி கலைமன்றம் (ஹூஸ்டன்)

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என சிலாகித்த மகாகவி பாரதியார், தொடரும் வரிகளில் “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்றும் கூறியுள்ளார். அவர் சொல்லும் வகை செய்வதற்காக, அவருடைய பெயரில் இயங்கி வரும் பாரதி கலை மன்றம் (BKM, Houston), தனது 50வது ஆண்டு பொன்விழாவை டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரில் மூன்று நாள் கோலாகலமாக வெற்றிகரமாக கொண்டாடியது. ஆகஸ்ட் 30, 2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை, பொன்விழா கொண்டாட்டத்திற்கான தேவையான நிதியை, அமெரிக்க டாலர்களாக அள்ளித் தந்த கொடையாளர்களை கௌரவிக்கும் விழா இரவு விருந்துடன், Chateau Crystal என்ற அழகிய அரங்கத்தில், சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இனிமையான வரவேற்புடன் கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டன. விழாவை சிறப்பிக்க உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பிரமுகர்கள், புரவலர்கள் மற்றும் கலைஞர்கள் BKM இன் பொன்விழாவைக்கொண்டாடுவதற்காகக் கூடினர். BKM இன் பொன்விழா தலைவர்டாக்டர். விஜி திரு தனது அற்புதமான பேச்சால் அனைவரையும் கௌரவித்து வரவேற்றார். பொனமாலைப் பொழுதுBKM50 IDOL competition (இசை, நடனம், பேச்சு ) ஆகியவற்றில்முதல் பரிசு பெற்றவர்கள் தங்கள் நுண்கலை மற்றும் பேச்சுத்திறன் வழியாக பொன்மாலைப் பொழுதாக மாறியது பொன்விழா மேடை. அரும்பு போல பூத்து, அடுக்கடுக்காய் ஆண்டுகள் ஐம்பதை நிறைவு செய்த பெருமிதத்தில் நிற்கும் பாரதி கலை மன்றத்தின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மிகவும் பிரமாண்டமானமூன்று அடுக்கு கேக், அனைவரின் பார்வையையும் ஒருசேர கவர்ந்தது. அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டியதும் BKM 50 பொன்விழா களை கட்டத் தொடங்கியது. பார்க்கவே பரவசமாக இருந்த கேக், சுவையிலும் பலரின் பாராட்டையும் பெற்றது. ஆகஸ்ட் 31, 2024 சனிக்கிழமை, சரசரக்கும் பட்டுப்புடவைகள், பட்டு வேட்டிகள் மல்லிகை மணம், பறை முழக்கம், நாதஸ்வர கானம் என ஸ்ரீ மீனாட்சி கோயிலின் சித்திரை வீதியில் தென்பட்ட பரபரப்பு, தென்மதுரையின் வீதியிலேயே நாம் இருக்கிறோமோ என்ற உணர்வைத் தந்தது. மகாகவி பாரதி, செல்லம்மா பாரதி, தமிழ்த்தாய்என குழந்தைகளும், பெரியவர்களும் வலம் வந்தனர். தமிழ்க்கலாச்சார அணிவகுப்பிற்கான ஆரம்ப ஏற்பாடுகள்தான் இவை. பாரம்பரிய அணிவகுப்புஅதிலோர் அங்கமாக அணிவகுப்பின் சிறப்பம்சமாக, அலங்கரிக்கப்பட்ட கேரவனின் 'பூ பல்லக்கு' , அற்புதமான மலர்காட்சி கூட்டத்தை கவர்ந்தது. பாரம்பரிய தாள வாத்தியமான பறை தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பைக் காண கண்கள் இரண்டு போதவில்லை. கரகம் கலகலக்க, காவடி கோஷமிட, பொலிவான பொய்க்கால் குதிரை , மயக்கும் மயிலாட்டம், சிலிர்க்கும் சிலம்பாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்களும், அதைத் தொடர்ந்து பாரதியாரின் பாரம்பரிய பாமாலையும், வயலின், மிருதங்கம், நாதஸ்வரம் போன்ற பாரம்பரிய கருவிகளும் பார்வையாளர்களைதமிழகத்திற்கே அழைத்துச் சென்றன. அதிகாரப்பூர்வ தொடக்க விழா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தீபம்ஏற்றி வைக்க, மீனாட்சித் திருக்கோயில் மண்டபத்தில் சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து, கடவுள் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடினர். பி.கே.எம்-ன் வரலாறு பற்றிய தொடக்க உரைகளைதலைவர் விஜி திரு வழங்கினார். இந்தியத் தூதரகத் தலைவர் டி.சி .மஞ்சுநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சமூகத்திற்கு பி.கே.எம் ஆற்றிய பங்களிப்புகளைபாராட்டி காலத்தால் அழியாத பாரதியாரின் கவிதைகளைவாசித்தார். பி.கே.எம்மின் 50 ஆண்டு பயணத்தை விவரிக்கும் காபிடேபிள் புத்தகத்தை அவர் வெளியிட்டார். பிரகடனங்கள்பியர்லேண்ட் நகரம், ஆகஸ்ட் 31,2024 ஐ 'BKM GOLDEN TAMIL HERITAGE DAY' என்று பிரகடனப்படுத்தி பாரதி கலை மன்றத்தின் 50 ஆண்டுகால சமூகப்பணியை அங்கீகரித்து கௌரவித்துள்ளது. பியர்லேண்டின் தற்காலிக மேயர் டோனி கார்போன், பிரகடனத்தை வாசித்து, வாழ்த்தி விழாவை சிறப்பித்தார். ஹூஸ்டன் நகரம், ஆகஸ்ட் 31,2024 ஐ ' BKM GOLDEN TAMIL CULTURE DAY ' என்று அறிவித்து அளித்துள்ள பிரகடனத்தை, பாலா பாலச்சந்திரன் பெருமையுடன் வாசித்தார். BKM இன் முன்னாள் தலைவர்கள் மற்றும் புரவலர்கள் BKM க்குஅர்ப்பணித்த சேவைகள் மற்றும் பங்களிப்புகளுக்காக அவர்களின்துணைவியார்களுடன் கௌரவிக்கப்பட்டனர். புரவலர்களானடாக்டர்.அப்பன், சாம் கண்ணப்பன் மற்றும் டாக்டர்.மாலினிஆகியோர் பாரதி கலை மன்றத்தின் வளர்ச்சியை பாராட்டி மென்மேலும் மொழி, கலாச்சார சேவைகள் தொடர வேண்டுமென வாழ்த்தி உரையாற்றினார்கள். செவிக்கும் உணவுஅறுசுவை உணவு வாழை இலை விருந்தாக விரிந்து அனைவரின் பாராட்டையும் ஒருங்கே பெற்றது. செவிக்குணவாக திகழ்ந்த சிகரங்களின் சங்கமம் என்ற சிறப்பு உரை, கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு சீரான தொடக்கமானது. இந்நிகழ்வில் தமிழருவி மணியன், முனைவர். பர்வீன் சுல்தானா மற்றும் இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் ஆகியோரின் சொற்பொழிவுகள் பார்வையாளர்களுக்கு சிந்தனையைத் தூண்டும் விதமாக இருந்தது. ஹூஸ்டன் நகரின் குறிப்பிடத்தக்க நடனப் பள்ளிகளான அஞ்சலி ஸ்கூல் ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ், நிருத்யா நடனப் பள்ளி, அபிநயா ஸ்கூல் ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ், சிலம்பம் ஹூஸ்டன்இந்தியன் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் ஆகியவற்றின் கூட்டு நடனநிகழ்ச்சியான 'சரவண பவ' பார்வையாளர்களைக் மிகவும் கவர்ந்த ஒன்றாக அமைந்தது. மாற்றுத் திறனாளியான செல்வி. ஜோதிகலையின் மெல்லிசைப் பாடல்கள், குறள் இளவரசியாக அனைத்து திருகுறள்களையும் நொடிப் பொழுதில் ராகம் கூறி பாடலாக பாடும் திறன், வயலின் இசைப்பதில் வல்லுநர் என அடுத்தடுத்து அசத்திவிட்டார் ஜோதிகலை. முனைவர். பர்வீன் சுல்தானா தலைமையிலான 'வாழக்காடு மன்றம்' , நவீன வாழ்க்கையில், தொழில்நுட்பம் வழங்கும் இணைய தளங்களின் பங்கை ஆராய்ந்த, நல்ல ஆக்கபூர்வமான அமர்வாகும். இசை கவி ரமணன் குழுவினரின் 'பாரதி யார்?' என்ற வரலாற்றுநாடகம் பார்வையாளர்களை பாரதியின் காலத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. அவரது வீடு மற்றும் பிற வரலாற்று இடங்களைக்காட்டும் எல் ஈ டி பின்னணி நாடகத்தின் நங்கூரமாகி ஒவ்வொருகாட்சியையும் உயிர்ப்பித்தது. பாரதி யார் ? நாடகம் பற்றிய பேச்சு அரங்கம் தாண்டி, உணவுக் கூடம், கார் நிறுத்துமிடம் என தொடர்ந்து இன்னும் அதன் அதிர்வலைகளை எங்கும் உணரமுடிகிறது. தமிழ்ப்பள்ளிக் குழந்தைகளின் திறமை வெளிப்பாடுசெப்டம்பர் 1, 2024, ஞாயிற்றுக்கிழமை, சிவஸ்ரீஸ்கந்தபிரசாத்தின் ஒரு தெய்வீக நிகழ்ச்சியுடன் கொண்டாட்டங்கள்தொடங்கியது, அவரது இனிமையான குரல் பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது. தொடர்ந்து பி.கே.எம்தமிழ்ப்பள்ளி குழந்தைகள் தங்களது திறமையையும்அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி அசத்தலான நடன நிகழ்ச்சிகளைநடத்தினர். அடுத்த தலைமுறை பிள்ளைகளையும், தமிழ் மொழிமற்றும் கலாச்சார ஆர்வலர்களை ஊக்குவிப்பதில் அயராதுஉழைக்கும் தமிழ்ப்பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். நடனம், இசை,வரையும் கலை மற்றும் பேச்சுப் பிரிவுகளில் BKM 50 IDOL வெற்றியாளர்கள் அவர்களின் சிறப்பான சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டு கோப்பைகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்வழங்கப்பட்டன. இலக்கியமும் இசையும் கலந்ததொரு விருந்தாக அமைந்த நிகழ்ச்சி, 'காலங்களில் அவன் வசந்தம்'. கண்ணதாசனின் கவிதைகள், அதற்கேற்ற இனிய இசை, மெட்டோடு பாடல், உடன் இசைக்கவி ரமணன் வேறென்ன வேண்டும் அரங்கில் பார்வையாளர்களின் நுண்ணுணர்வை கவர்ந்திழுக்க? கனகச்சிதமாக அனைத்தும் நடந்தன, நகர்ந்த பொழுதே தெரியவில்லை யாருக்கும். சிரிக்கவும் சிந்திக்கவும்கிரேஸி மோகனின் சகோதரர் மாது பாலாஜி வழங்கிய, 'நில் ..கவனி..கிரேஸி..” என்ற தன்னுடைய பேச்சில் கிரேஸி மோகனைப் பற்றி பகிர்ந்து கொண்ட எண்ணங்கள் சிரிக்க மட்டுமல்ல சிந்தனையையும் தூண்டுமாறு அமைந்தது. மனதைக்கவரும் நிகழ்ச்சிகளுடன் நாள் தொடர்ந்தது. ரோபோ கணேசன், 'வாழும் சிலை ஆக்ட்', 'ஹாலோ மேன்', 'ரோபோ ஆக்ட்', 'ஸ்டெப்னி ஆக்ட்' என தனது தனித்துவமான நடனக் காட்சிகளால்பார்வையாளர்களை, குறிப்பாக குழந்தைகளைக் கவர்ந்தார். அபிஷேக் பாலகிருஷ்ணன் மற்றும் விஸ்வேஷ்வர் நாகராஜ் இணைந்து வழங்கிய கலந்திசை கேட்டவர்களை கட்டிப் போட்டு வைத்து விட்டது எனலாம். வயலினும் வேய்ங்குழலும் கர்நாடக இசை சாயல் கொண்ட திரையிசைப் பாடல்களை பொழிந்து மலைப் பொழுதை மயக்க செய்து விட்டன. இராமயணம்- மகாபாரதம்சிந்தனைச் சிற்பி.தமிழருவி மணியன், இலக்கியச்சுடர் த. இராமலிங்கம், மொழியரசி முனைவர். பர்வீன் சுல்தானா, நகைச்சுவை நயாகரா. மோகனசுந்தரம், இலக்கியச் செல்வர். எம்.பி.நாதன் ஆகியோர் அடங்கிய ஐவர்குழு, இராமாயண மற்றும் மகாபாரதத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களை எடுத்துக் கொண்டு, “கற்போர் நெஞ்சங்களில் நெகிழ்ச்சியையும், வியப்பையும் பெரிதும் ஏற்படுத்தும் கதாபாத்திரம் “ என்பதை விவாதித்து உரையாற்றினர். அவர்களின் வலிமையான வாதங்கள், மக்கள் மனங்களில் பல சாளரங்களைத் திறக்க வழி செய்தன. மிக உன்னதமான கருத்துக்களை உயர்அறிஞர்கள் தம் உரைகளில் மெருகேற்றி கூறிய விதம் காலங்களை கடந்தும் கேட்டவர் மனங்களில் கல்வெட்டாக நிற்கும் என்பதில் ஐயமில்லை. பொன்விழா ஆண்டு தொடக்கம் முதல் ஆரம்பித்த திட்டமிடல் முதல் இன்று செயலாக்கம் வரை அடித்தளமாகவும், தோள் கொடுக்கும் தூணாகவும் தொடர்ந்து பங்களித்து வரும் பொன்விழா செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, தன்னார்வர்வலர்களை மேடையேற்றி, மிகவும் பெருமைப்படுத்தி நினைவு பாராட்டு பட்டயங்களை அளித்து சிறப்பித்தது நெகிழ்வான மகிழ்வான நிமிடங்களாக நகர்ந்தன. நிறைவாக, அனைவரும் மிக்க ஆவலுடன் காத்திருந்த பாடகர் விஜய் யேசுதாஸின் இன்னிசை கச்சேரியால் கூட்டம் களை கட்டியது. இனிமையான பாடல்களும், ஆடலுக்குரிய துள்ளல் இசையுமாக வெளியெங்கும் அடர்த்தியாக இசை படர்ந்து கிடந்தது. நிறைவுப் பகுதியில், குழந்தைகள் தொடங்கி, வயது வேறுபாடின்றி அனைவரும் இசைக்குழுவினருடன் இணைந்து ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் மூன்று நாள் திருவிழாவாக இனிதே நடந்தேறியது. பாரம்பரிய இனிப்பு, காரம்50 ஆண்டை பிரதிபலிக்கும் வண்ணம், 50 வகையான பாரம்பரிய இனிப்புகள் மற்றும் 50 வகையான கார தின்பண்டங்கள் அணிவகுத்து நின்ற காட்சி, ஆகா ஆகஸ்டில் ஒரு தீபாவளி என அனைவரையும் குதூகலப்படுத்தியது. காபி டேபிள் புத்தகம், ஒரு மிகச் சிறந்த குழு முயற்சியால் சிறப்பான படைப்பாக வெளி வந்துள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளின் வரலாற்று ஆவணங்கள், பிரகடனங்கள், வாழ்த்துக் கடிதங்கள்மற்றும் முன்னாள் தலைவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்குரிய அங்கீகாரத்தை அளித்தது , அதற்கான தகவல்கள் ஆகியவற்றைச் சேகரிப்பதற்காக எடுத்து கொண்ட முயற்சிகள், உழைப்பு போன்றவை பலராலும் பாராட்டப்பட்டது. பாரதியாரின் கவிதைகள் அடங்கிய தனித்துவமான நுழைவு அட்டைகள் பங்கேற்பாளர்களுக்கு நீடித்த நினைவுப் பரிசாக அமையும் என்பதில் ஐயமில்லை. தூணாகத் துணை நின்றோர்பொன்விழாவினை மிகச் சிறப்பாக நடத்த, அழகிய மேடை அமைப்புடன், உயர் தொழில்நுட்ப ஒலி, ஒளி அமைப்புகளுடன் கூடிய ஸ்ரீ மீனாட்சி கோயில் அரங்கினை அளித்து, விலைமதிப்பில்லா உதவிகளையும், ஒத்துழைப்பையும் நல்கிய மீனாட்சி திருக்கோயில் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு, தங்கள் ஆற்றல்மிக்க அதிர்வலைகளால் பறை முழக்கத்துடன் பேரணி சிறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்த ஹூஸ்டன் பறை குழுவிற்கு, செவ்விசை வழியாக பாரதியாரின் பாமாலைகளை இனிய இசை விருந்தாக்கிய ப்ரணவம் வயலின் அகடமிக்கு, பாரதி யார்? நாடகமேடையில் அளப்பரிய கலைப் பணி செய்து நிகழ்வை சிறக்கச் செய்த ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த டாக்டர் சாரநாதனின் ஸ்ரீ மீனாட்சி தியேட்டர்ஸ் நாடகக் கலைஞர்களுக்கு, கடல் கடந்து வந்த கலைஞர்களுக்கு உற்சாகமாக , அர்ப்பணிப்புடன், கனிவும் நிறைந்த விருந்தோம்பலும் செய்த கணேஷ் ரகுவிற்கு, ஒலி. ஒளி அமைப்புகள்,மேடைக்கு பின்புலத்தில் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் திரைக்கான ஏற்பாடுகள் முதலிய மிக குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப உதவிகளை மிகச் செம்மையாக செய்து தந்த திருபார்த்தா கிருஷ்ணசுவாமிக்கு, பிரம்மாண்ட வரவேற்பு வளைவுகளும், கம்பீர யானைகள் சூழ்ந்த ஏனைய மேடை அலங்காரங்களும் வார்த்தைகளை தாண்டிய அழகு, அவற்றை அமைத்து தந்த டெக்கார் ஒன் நிறுவனர் நளினிகண்ணனுக்கு, அனைவராலும் முழுமையாக ரசிக்கப்பட்ட, அறுசுவை விருந்துகள் வழங்கிய குமார்ஸ் உணவகம் மற்றும் இந்தியன் ஸம்மர்ஸ்க்கு மினமார்ந்த நன்றி. பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிரந்தர நினைவுகளாக இருக்கும்.அதற்கு துணை நின்ற கோல்டன் ரேஸ் நிறுவனர் திருஆறுமுகம் மற்றும்அவரது குழுவினருக்கு, இந்த நிகழ்வில் அரங்க வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த போட்டோ பூத்தும், பூ பல்லக்கு அலங்காரமும் பார்வையாளர்களுக்கு பிரமிக்க வைக்கும் காட்சி விருந்தாகஇருந்தது, அதை வடிவமைத்து தந்த பிளாசம் டெகார்ஸ் நிறுவனத்தார்க்கு, தொடர்ந்து ஆதரவு தந்து வரும் “விசிட் பியர்லாண்ட்” அமைப்பிற்கு என சமூகத்தின் பல்வேறுபட்ட அங்கங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். BKM பொன்விழா கொண்டாட்டத்தின் மகத்தான வெற்றிக்கு பலஅம்சங்கள் காரணிகளாக பங்களித்தன. நிர்வாகக் குழுஉறுப்பினர்கள், தன்னார்வலர்கள், புரவலர்கள் மற்றும்பார்வையாளர்களின் அசைக்க முடியாத ஆதரவு, உன்னதமானதிட்டமிடல், செயலாக்கம் மற்றும் அமைப்பு முதலியவை ஒரு மறக்க முடியாத நிகழ்வை உருவாக்கியது. பொன்விழா கொண்டாட்டம் பரவலான பாராட்டுகளைப்பெற்றுள்ளது. உள்ளூர் மற்றும் வெளி மாநிலபார்வையாளர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்தன. பங்கேற்றசர்வதேச மற்றும் அமெரிக்க கலைஞர்கள் இத்தகைய வரலாற்றுநிகழ்வில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தகுறிப்பிடத்தக்க கொண்டாட்டத்தால் BKM இன் நற்பெயர் மற்றும்தரம் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது. BKM இன் 50வது பொன்விழா கொண்டாட்டம் மாபெரும் வெற்றிபெற்ற இத்தருணத்தில், தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் இந்த அமைப்பின் அசைக்க முடியாதஅர்ப்பணிப்பு வெளிப்பட்டுள்ளது. BKM நிர்வாகக் குழுஉறுப்பினர்கள், தன்னார்வலர்கள், புரவலர்கள்முதலியோரின் கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்கு இந்த நிகழ்வு ஒருசான்றாக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, BKM பொன்விழாகொண்டாட்டத்தின் மாபெரும் வெற்றியானது, அதன் வழிகாட்டும்சக்தியான தலைவர் விஜி திருவின் 'We are BKM' என்றஊக்கமளிக்கும் மந்திரத்தின் மூலம் அவரின் தொலைநோக்குமற்றும் தலைமைத்துவத்திற்கு ஒரு சான்றாகும். தன் குழுவின் மீதுஅசைக்க முடியாத நம்பிக்கையுடன், சமூகத்தில் ஒரு அழியாதமுத்திரையை பதித்து, ஒரு கனவை நனவாக்கி உள்ளார். அடுத்தஅரை நூற்றாண்டில் BKM தனது பயணத்தைத் தொடரும்போது, அது ஒரு கலாச்சார கலங்கரை விளக்கமாகவும், வரவிருக்கும்தலைமுறைகளுக்கு உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்க தயாராகஉள்ளது. தகவல்: ராஜி வாஞ்சி, ஸ்வர்ணலதா மகேஷ். இலக்கியக் குழு, பாரதி கலை மன்றம். ஹூஸ்டன், அமெரிக்கா. - நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்