கேல்கேரி நகரில் கனடாவின் மிகப்பெரிய மாரத்தான் நிகழ்வு
'உன்னால் பறக்க முடியாதெனில் ஓடு. ஓட முடியாதெனில் நட. நடக்க முடியாதெனில் தவழ்ந்து செல். எதைச் செய்தாலும் முன்னேறிக் கொண்டே இரு.' என்ற பொன்மொழியைக் கூறியவர் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். இந்த வரிகளுக்கேற்ற வகையில் கடந்த மே 26ஆம் தேதி மேற்கு கனடாவிலுள்ள கேல்கேரி நகரில், கனடாவின் மிகப்பெரிய மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது. 'ரன் கேல்கேரி' என்னும் தொண்டு நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மிகப்பெரிய மாரத்தான் நிகழ்வு இது. முதன்முதலில் 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிகழ்வில் பத்தொன்பது ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த முறை தன் அறுபதாம் ஆண்டை கம்பீரமாக கொண்டாடியது 'ரன் கேல்கேரி'. குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் என எந்த பாகுபாடுமின்றி பல மாநிலங்களிலிருந்தும் மொத்தம் 13,600 நபர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதி அறுபது கோடிக்கும் மேல். இந்த நிதி நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்காக வழங்கப்படுகிறது. மேற்கு கனடாவின் முதல் மற்றும் கனடாவில் மிக நீண்ட காலமாக நடத்தப்படும் மாரத்தான் நிகழ்வும் இதுவே. 60 கி.மீ. அல்ட்ரா, 42.2 கி.மீ., 21.1 கி.மீ., 10 கி.மீ. மற்றும் 5 கி.மீ. பிரிவுகளில் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது. இரண்டு முதல் பன்னிரண்டு வயதுள்ள குழந்தைகளுக்கான 1.2 கி.மீ மாரத்தானும் நடத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டு, மாரத்தானை முழுமையாக முடித்த அனைத்து வீரர்களுக்கும் மாரத்தான் நினைவு சட்டையும், பதக்கமும் வழங்கப்பட்டன. அனைத்து மாரத்தான் பிரிவிலும், வயது மற்றும் பாலினம் வாரியாக முதல் மூன்று வீரர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. மாரத்தானில் ஓடுவதற்கு பதிலாக நடக்க ஆர்வமுள்ள வீரர்களுக்கு தனி வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. சில மாதங்களே ஆன குழந்தைகளை 'ஸ்ட்ராலர்' வண்டியில் தள்ளியபடி, பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளிகளும் ஆர்வமாக கலந்து கொண்டதைப் பார்க்கும்போது சக வீரர்களுக்கு மேலும் உற்சாகமாக இருந்தது. சக்கர நாற்காலியில் வலம்வரும் கைல் கியனி என்னும் மாற்றுத் திறனாளி இதில் கலந்து கொண்டார். இவர் பனிச்சறுக்கு கம்பங்களின் உதவியுடன் மாரத்தானை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லுனர். மிகக் குறைவான நேரத்தில் மாரத்தானை முடித்து, கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். தன் முந்தைய சாதனையை முறியடிக்கும் ஆர்வத்துடன் 'ரன் கேல்கேரி' நிகழ்வில் இந்த ஆண்டு பங்கேற்றார். மாரத்தான் ஓட்ட வழித்தடம் முழுவதும் ஆங்காங்கே உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தண்ணீர், பழரசம் கொண்ட புத்துணர்ச்சி பானங்களுடன், தேவைப்படுவோருக்கு முதலுதவியும் வழங்கப்பட்டன. பங்கேற்பாளர்களுக்கு உதவும் தன்னார்வத் தொண்டர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இதைத் தவிர ஒவ்வொரு மாரத்தான் பிரிவிலும் ஐந்து கிலோமீட்டருக்கு ஒருவர் என வீரர்களுக்கு உதவும் 'பேஸர்' வீரர்களும் இருந்தனர். இவர்கள் மாரத்தான் ஓட்டத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்கள். வழித்தடம் முழுவதும் ஆங்காங்கே இசைக் குழுவினர் இருந்தனர். தங்கள் இசையின் மூலம் வீரர்களுக்கு புத்துணர்ச்சி தந்தனர். நிகழ்வை ரசிக்க வழித்தடத்தின் அருகில் பதினொரு இடங்கள் பார்வையாளர் இடங்களாக அமைக்கப்பட்டிருந்தன. மாரத்தான் தொடக்க மற்றும் முடிவு இடங்களுக்கு இடையே இலவச போக்குவரத்து சேவையும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கேல்கேரி நகராட்சியுடன் இணைந்து 'ரன் கேல்கேரி' புதிய சேவையை வழங்கியது. நிகழ்வு நடைபெற்ற ஜி.எம்.சி மைதானத்திற்கு பொதுப் போக்குவரத்து மூலம் வரும் மாரத்தான் வீரர்களுக்கு அன்றைய போக்குவரத்து கட்டணம் இலவசம். 'ஃப்ளூயிட் ப்ராஜெக்ட்ஸ்' என்னும் நிறுவனம் பழைய பதக்கங்களை பெற்றுக் கொள்ள தனி முகாம் அமைத்திருந்தது. இந்த உலோகங்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு அடுத்து வரும் நிகழ்வுகளில் பதக்கங்களாக வழங்கப்படும். மாரத்தான் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் நெகிழியின் உபயோகம் முழுவதும் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த 'கோ க்ரீன்' முயற்சிகள் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த ஆண்டு 'ரன் கேல்கேரி' தொடங்கியுள்ள மற்றுமொரு புதிய முயற்சி 'வெர்ச்சுயல் ரேஸ்.' உலகில் எந்த ஊரில் இருந்தாலும், யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம். இதற்கு முறையான பயிற்சி அவசியம் இல்லை. அவரவருக்கு பிடித்த விதத்தில், அருகிலுள்ள தெருவில் நடந்தபடி, வீட்டிலிருந்துகூட கலந்து கொள்ளலாம். இதைப்பற்றிய முழு விபரங்களுக்கு என்ற வலைத்தளத்தை பார்க்கவும். இதன்மூலம் சேவை செய்யும் அரிய வாய்ப்பு மே 26,2024 முதல் ஜுன் 23,2024 வரை மட்டுமே. - நமது செய்தியாளர் ஸ்வர்ண ரம்யா