கனடா கேல்கேரியில் தீபாவளி கொண்டாட்டம்
உலகெங்கும் இந்தியர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி பண்டிகை. 'ஒரு அகல் தீபத்தின் சிறிய ஒளிகூட இருளை போக்கிவிடும்' என்கிற தத்துவத்தை உணர்த்தும் பண்டிகை இது. மேற்கு கனடாவில் உள்ள கேல்கேரி நகரில் 'கேல்கேரி பாரதி கலை மன்றம்' (சி.பி.கே.எம்) என்னும் தமிழ் அமைப்பு தீபாவளி நிகழ்வை சிறப்பாக கொண்டாடியது. கேல்கேரியில் உள்ள தமிழர்களின் ஒற்றுமைக்காகவும், தமிழ் கலாச்சாரத்தை நிலைநாட்டும் நோக்கத்தோடும் 2007ல் துவங்கப்பட்ட அமைப்பு இது. சி.பி.கே.எம் ஒருங்கிணைத்த தீபாவளி நிகழ்ச்சியில் மொத்தம் 270 தமிழ் மக்கள் உற்சாகமாக பங்கேற்றனர். சி.பி.கே.எம் அமைப்பு நடத்தும் தமிழ் பள்ளியின் மாணவர்கள் திருக்குறள் உரைத்து, தமிழுக்கு வந்தனம் செய்தனர். நாடகம், இசை நிகழ்ச்சிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், மாறுவேடப் போட்டி எனப் பல வகையான நிகழ்வுகள் அரங்கேறின. ஒரு கயிற்றின் இரு முனைகளில் இருந்து இழுக்கும் கயிறு இழுத்தல் விளையாட்டில், பார்வையாளர்கள் இரு குழுக்களாக பிரிந்து மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது. கேல்கேரியைச் சார்ந்த நடன அமைப்புகளான சக்தி ஷேத்ராலயா, நாட்டியம் நடனப்பள்ளி, ஷ்யாமிளிஸ் ஸ்கூல் ஆஃப் டான்ஸ், சௌந்தர்யா நாட்டிய கலாலயா மற்றும் யின் அண்ட் யாங் நடனக்குழு நிகழ்த்திய நடன நிகழ்வுகள் பெரும் வரவேற்பை பெற்றன. சிறுவர், சிறுமியரின் தனி நடன நிகழ்வுகளையும் பார்வையாளர்கள் உற்சாகமாக ரசித்தனர். நிகழ்விற்கு வந்திருந்த தமிழ் குடும்பங்கள் சுயபடங்களும், புகைப்படங்களும் எடுத்துக் கொள்ள வசதியாக ஒரு சிறப்பு 'போட்டோ பூத்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கைக்குழந்தைகளும், சிறிய குழந்தைகளும் விளையாடுவதற்கு ஏற்ற வகையில், பொம்மைகள் நிறைந்த விளையாட்டுப் பகுதியும் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ராக்ஃபோர்ட் செட்டிநாடு உணவகத்திலிருந்து இரவு விருந்தை சி.பி.கே.எம் ஏற்பாடு செய்திருந்தது. சுரேஷ் சேகர், நந்தா ராமசாமி, மகாலட்சுமி மளிகை, துர்கா மீன் மற்றும் இறைச்சி கடை, ஊர்ல மற்றும் தோசா அண்ட் கோ உணவகம் - இந்த தீபாவளி நிகழ்ச்சியின் ஸ்பான்சர்கள். - நமது செய்தியாளர் ஸ்வர்ண ரம்யா