தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அவ்வப்போது அரசியல் கருத்துகளையும் தெரிவித்து பரபரப்பு ஆவார். குறிப்பாக படங்களின் இசை வெளியிட்டு விழாக்களில் இவர் பேசும் வசனங்கள் பரபரப்பை ஏற்படுத்தும். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு கனிசமான வெற்றியைப் பெற்றனர். வெற்றிப் பெற்றவர்களை அழைத்து சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் விஜய். விரைவில் நேரடி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பின் அது புரளி என தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் மிரட்டல் விடுத்தது விழுப்புரத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பது தெரிய வந்தது. புவனேஸ்வர் வழக்கமாக வெடிகுண்டு விடுப்பவர் என்றும் இவர் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.