மாஸ்டருக்கு செய்ததை அண்ணாத்தக்கு செய்யாதது ஏன்? ரசிகர்கள் கேள்வி
ADDED : 1453 days ago
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் என கடந்த பல வருடங்களாக தனது பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவர் நடித்த 'அண்ணாத்த' படம் தீபாவளியன்று தியேட்டர்களில் வெளியானது.
படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தன. இருந்தாலும் படம் 100 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் படம் வெளியான 21வது நாளிலேயே படத்தை இரண்டு ஓடிடி தளங்களில் வெளியிட்டார்கள்.
அப்படி வெளியான பின்னும் இன்னமும் தமிழகம் முழுவதும் சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் கூட சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இப்படத்திற்கு நல்ல வசூல் இருந்ததாகச் சொன்னார்கள். ஆனாலும், சில நாட்களுக்கு முன்பு படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட்டார்கள். இன்று இப்படம் ஓடிக் கொண்டிருக்கும் சில தியேட்டர்களில் குறிப்பிடத்தக்க அளவு முன்பதிவும் நடந்துள்ளது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
இந்த வருட பொங்கலுக்கு விஜய், விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'மாஸ்டர்' படம் 16 நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தியேட்டர்காரர்கள் அப்போது ஓடிக் கொண்டிருந்த படத்தை தியேட்டர்களை விட்டுத் தூக்கினார்கள். ஆனால், இப்போது 'அண்ணாத்த' படம் ஓடிடியில் வெளியானாலும் தியேட்டர்களில் திரையிடுவது எந்த விதத்தில் நியாயம் என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.