சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிஜுமேனன்
ADDED : 1245 days ago
சிரஞ்சீவியின் நடிப்பில் தற்போது காட்பாதர், போலோ சங்கர், இது தவிர அவரது 154வது படம் என மூன்று படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. இதில் சிரஞ்சீவியின் 154வது படத்தை இயக்குனர் பாபி இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தநிலையில் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மலையாள நடிகர் பிஜுமேனன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் வில்லன், குணச்சித்திர நடிகர் என படிப்படியாக வளர்ந்து தற்போது ஹீரோ, கதையின் நாயகன் என வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார் பிஜுமேனன். இதற்கு முன்னதாக தெலுங்கில் 2006-ல் வெளியான கதர்நாக், ரணம் என இரண்டு படங்களில் நடித்துள்ள பிஜுமேனன், கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவி படம் மூலமாக தெலுங்கில் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.