உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்முட்டி படத்தை பாராட்டுபவர்கள் என் படம் மீது கல் எறிந்தார்கள் : இயக்குனர் வேதனை

மம்முட்டி படத்தை பாராட்டுபவர்கள் என் படம் மீது கல் எறிந்தார்கள் : இயக்குனர் வேதனை

மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் மலையாளத்தில் காதல் ; தி கோர் என்கிற படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களும் கிடைத்துள்ளன. ஜியோ பேபி இயக்கியுள்ள இந்த படம் ஹோமோ செக்ஸுவல் மனிதர்களைப் பற்றி பேசுகிறது. அதே சமயம் இதை சொல்ல வேண்டிய விதத்தில் கதையுடன் இணைத்து சொன்னதால் எந்த எதிர்மறை விமர்சனங்களையும் பெறாமல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதேபோன்ற ஒரு கதை அம்சத்துடன் கடந்த 2014ல் 'மை லைப் பாட்னர்' என்கிற படத்தை இயக்குனரும், நடிகருமான எம்.பி பத்மகுமார் என்பவர் இயக்கினார். அந்த படத்தில் நடித்த நடிகர் சுதேவ் நாயருக்கு சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதும் கூட கிடைத்தது. அதேசமயம் இந்த படம் வெளியான சமயத்தில் இதை தியேட்டர்களில் யாரும் திரையிடவே விரும்பவில்லை என்று தனது வேதனையை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார் பத்மகுமார்.

இது குறித்து அவர் கூறும்போது, “எனது படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் தைரியமாக முன்வந்து பல தியாகங்களை செய்தாலும் திரையரங்குகள் அந்த படத்தை திரையிட தயாராக இல்லை. அதற்கு காரணம் இப்போது மம்முட்டி நடித்திருப்பது போல என்னுடைய படத்தில் பிரபலமான நடிகர்கள் யாரும் இல்லை என்பதுதான். அப்படியே இந்த படத்தை திரையிட்டாலும் ஓரிரு நாட்களிலேயே தூக்கி விட்டு வேறு படத்தை திரையிட்டு ஓட்ட ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமல்ல இதற்கு எதிர்மறையான விமர்சனங்களும் கிளம்பின.

கடைசியாக வேறு வழியின்றி இந்த படத்தை ஒரு ஆன்லைன் சேனலுக்கு தயாரிப்பாளர் விற்றார். அந்த சேனல் கூட இந்த படத்தை துண்டு துண்டாக வெட்டி பல வீடியோக்களாக வெளியிட்டு காசு பார்த்தது. இப்போது காதல் ; தி கோர் படத்தை கொண்டாடும் இதே சமூகம் தான் அப்போது என்னுடைய படத்தின் மீது கல் எறிந்தது. அந்த வகையில் தற்போது இதே கருத்தை ஏற்றுக் கொண்டு இந்த படத்தை பாராட்டுகிறார்கள் என்பதை பார்க்கும்போது ஒரு வகையில் சந்தோசமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார் பத்மகுமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !